Published:Updated:

UNSC: இரு இந்தியர்களைப் பயங்கரவாதிகளாக முன்னிறுத்திய பாகிஸ்தான்! - தோல்வியில் முடிந்த முயற்சி

UNSC
UNSC ( file photo )

`பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தூண்டலுக்கு இந்தியாவுக்கும் பங்கிருக்கிறது’ என்று பாகிஸ்தான், ஐ.நா-வின் பல்வேறு அமைப்புகளில் மீண்டும் மீண்டும் கூறிவருகிறது.

பயங்கரவாதத்தின் மீதான சிறப்பு நடைமுறைகளை, மதச்சாயம் பூசி அதை அரசியலாக்கும் பாகிஸ்தானின் முயற்சியை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழு (யு.என்.எஸ்.சி) முறியடித்திருக்கிறது. இந்தத் தகவலை ஐக்கிய நாடுகள் சபையின், இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஐ. நா சபையின் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையின் மூலம், அங்காரா அப்பாஜி, கோபிந்த பட்நாயக் ஆகிய இரு இந்தியர்களைப் பயங்கரவாதச் செயற்பாட்டாளர்களாகப் பட்டியலிடுவதற்கான நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொண்டது. யு.என்.எஸ்.சி உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வழங்க, பாகிஸ்தானுக்கு அவகாசம் கொடுத்தனர்.

ஆனால், அவர்களால் ஆதாரங்களை வழங்க முடியவில்லை. இதையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் தலைமையிலான யு.என்.எஸ்.சி பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டைத் தடுக்க முடிவு செய்தது.

இதேபோன்று, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அஜோய் மிஸ்திரி மற்றும் வேணு மாதவ் டோங்காரா ஆகிய இரு இந்தியர்களின் பெயர்களையும், பாகிஸ்தான் பயங்கரவாதச் செயற்பாட்டாளர்களாகப் பட்டியலிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் தடுக்கப்பட்டது.

ஐ.நா பயங்கரவாதப் பட்டியலில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

அல்-கொய்தா, தாலிபான் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் பெயரை மையமாகக்கொண்ட துணை நிறுவனமான ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அஸாரை உலகளாவிய பயங்கரவாதியாகப் பட்டியலிட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவுக்குக் கிடைத்த இந்த வெற்றிக்கு பதிலடியாகவே பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக, `பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தூண்டலுக்கு இந்தியாவுக்கும் பங்கிருக்கிறது’ என்று பாகிஸ்தான், ஐ.நா-வின் பல்வேறு அமைப்புகளில் மீண்டும் மீண்டும் கூறிவருகிறது. `இந்தக் குற்றச்சாட்டுப் பொய்யானது’ என்று நிரூபிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு