Published:Updated:

ட்ரம்ப் கொளுத்திய திரி... புதிய வரைபடம் வெளியீடு - வலுக்கும் எதிர்ப்பு!

ட்ரம்ப்
ட்ரம்ப்

பாலஸ்தீனம் - இஸ்ரேல் சிக்கலை முடிவுக்குக் கொண்டு வர அமைதிக்கான தன்னுடைய திட்டத்தை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். இது கடும் எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறது.

மத்தியக் கிழக்கில் பதற்றம் நிறைந்த எந்தப் பகுதியை எடுத்துக்கொண்டாலும் அதில் ஏகாதிபத்திய அமெரிக்காவின் பங்கு இல்லாமல் இருக்காது. ஈராக் யுத்தம், ஏமன் யுத்தம் தொடங்கி ஈரானுடனான மோதல் வரை அமெரிக்காவின் கால்படாத யுத்தக்களமே கிடையாது. அதே வரிசையில்தான் பாலஸ்தீனம் - இஸ்ரேல் சிக்கலும் வருகிறது.

ஆனால் பாலஸ்தீனம் - இஸ்ரேல் சிக்கல் என்பது மத்தியக் கிழக்கின் மற்ற பகுதிகளிலிருந்து சற்றே வேறுபட்டது. முதலாம் உலகப்போர் காலகட்டத்திலிருந்தே இது தொடங்கிவிட்டது.

பாலஸ்தீன் போராட்டம்
பாலஸ்தீன் போராட்டம்
AP / Khalil Hamra

முதலாம் உலகப்போரில் ஓட்டோமன் பேரரசு வீழ்ந்ததும் அதன் நிலப்பரப்பு பிரிட்டன் - பிரெஞ்சு பேரரசுகளால் பிரித்துக்கொள்ளப்பட்டன. தற்போதைய பாலஸ்தீனம் - இஸ்ரேல் நாடுகள் உள்ள பகுதி பிரிட்டனின் வசம் வந்தது. அதற்கு முன்பிருந்தே பாலஸ்தீன நிலத்தின் மீதும் ஜெருசலேம் நகர் மீதும் யூதர்கள் உரிமை கொண்டாடி வந்தனர். அது தங்களின் வரலாற்றுத் தாய்நிலம் என்றும் அங்கே யூதர்களுக்கான தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் என்பதும் யூதர்களின் நீண்ட நாள் கோரிக்கை. அதற்காக அப்போது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில் சக்தி வாய்ந்த பதவிகளிலிருந்த யூதர்கள் ஜியோனிஸ இயக்கத்தைத் தோற்றுவித்து நடத்தி வந்தனர். யூதர்களுக்கான தனி தேசத்தை உருவாக்க வேண்டும் என்பது இவர்களின் இலக்கு.

பாலஸ்தீனப் பகுதி பிரிட்டனின் கைவசத்திற்கு வந்தது, யூதர்களுக்குப் பெருவாய்ப்பாக அமைந்தது. பிரிட்டன் பாலஸ்தீனத்தைக் கட்டுப்படுத்திய காலகட்டத்தில் (1917 - 1948) அங்கு யூதர்கள் அதிக அளவில் குடியமர்த்தப்பட்டனர். பிரிட்டன் வெளியேறுகிற சூழலில் யூதர்கள் தங்களுக்கான- கட்டமைப்பை உருவாக்கி வலுவான நிலையில் இருந்தனர். 1947-ம் ஆண்டு பாலஸ்தீனப் பகுதி இரண்டு தேசங்களாகப் பிரிக்கப்படும் என ஐ.நா-வால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெருசலேம் நகரத்தின் மீது இரண்டு நாடுகளும் உரிமை கோரி வந்த நிலையில், அது ஐ.நா வின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

பிரிட்டன் பாலஸ்தீனிலிருந்து 14.05.1948 அன்று முழுமையாக வெளியேறியது. அன்றைய தினமே இஸ்ரேல் என்கிற தேசம் உருவானதாக அறிவிக்கப்பட்டது. இஸ்ரேல் என்கிற தேசத்தை ஐ.நா வும் உடனடியாக அங்கீகரித்தது.

ஐ.நா வரைபடம்
ஐ.நா வரைபடம்

அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல்வேறு காலகட்டங்களில் யுத்தங்கள் நடைபெற்றன. இஸ்ரேல் எல்லைக்குள் உள்ள பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் விரட்டியடிக்கப்பட்டு அண்டைய அரபு நாடுகளில் தற்போது வரை அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். பாலஸ்தீனத்தின் பெரும்பாலான நிலப்பரப்பையும் ஜெருசலேம் நகரையும் இஸ்ரேல் சட்டவிரோதமாக இதுகாலம் வரையில் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது.

பாலஸ்தீனின் நிலப்பரப்பு மேற்குக் கரை மற்றும் காசா என இரண்டு துருவங்களாகச் சுருங்கிவிட்டது. பாலஸ்தீனம் ஐ.நா வால் தற்போது வரை ஒரு நாடாக அங்கீகரிக்கப்படவில்லை. 2012-ம் ஆண்டுதான் `அப்சர்வர் ஸ்டேட்’ என்கிற அந்தஸ்தையே பெற்றது. பாலஸ்தீன - இஸ்ரேலுக்கான சமசரப் பேச்சுகள் 1967-ல் தொடங்கி அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இஸ்ரேல் - ஜோர்டான் பள்ளத்தாக்கு இணைப்பு திட்டம்! - பதறவைக்கும் நெதன்யாஹு

1967 யுத்தத்துக்குப் பிறகு இஸ்ரேல், ஆக்கிரமித்த நிலங்களை விட்டு வெளியேற வேண்டும்; ஐ.நா பிரித்தளித்த எல்லைப் பகுதியை ஏற்றுக்கொள்ள வேண்டும்; இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகளில் ராணுவத்தின் உதவியுடன் ஏற்படுத்தப்பட்டு வருகிற யூதக் குடியிருப்புகளை உடனடியாக நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கத் தயார் எனப் பாலஸ்தீனம் தெரிவித்து வருகிறது. ஆனால் இஸ்ரேல் அதற்கு உடன்படத் தயாராக இல்லை. மேலும், ஜெருசலேம் நகரின் மீது இஸ்ரேல் முழு இறையாண்மை கொண்டாடி வருகிறது. கிழக்கு ஜெருசலேம், அமையவிருக்கும் பாலஸ்தீனியர்களுக்கான தேசத்தின் தலைநகராக இருக்கும் எனப் பாலஸ்தீனம் கோரிவருகிறது.

இந்த நிலை பல பத்தாண்டுகளாக இவ்வாறே நீடித்து வருகிறது.. பாலஸ்தீனம் - இஸ்ரேல் அமைதிப் பேச்சுகள் எதுவுமே ஒரு தீர்வை எட்டவில்லை.

பாலஸ்தீன் போராட்டம்
பாலஸ்தீன் போராட்டம்
AP / Adel Hana

எல்லைகளுக்கு வெளியே சூழ்நிலை இவ்வாறிருக்க, இஸ்ரேல் பகுதிக்குள் சிறுபான்மை ஆக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் ராணுவக் கட்டுப்பாடுகளுக்குக் கீழ் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் 2018-ம் ஆண்டு இஸ்ரேல் சர்ச்சைக்குரிய `நேஷன் - ஸ்டேட்’ சட்டத்தை நிறைவேற்றியிருந்தது. இதன்மூலம் இஸ்ரேல் யூதர்களுக்கான தனிநாடு, ஹிப்ரு மொழிக்குச் சிறப்பு அந்தஸ்து, ஐ.நா சட்டவிரோதமானவை என்று தெரிவித்த யூதக்குடியிருப்புகளை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என இந்தச் சட்டங்கள் மூலம் அறிவித்தது. இதற்கு பாலஸ்தீனியர்கள் மத்தியில் அப்போதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

காட்சிக்குள் வருகிறார் ட்ரம்ப்

காலப்போக்கில் காட்சிகள் மாறின. பாலஸ்தீனச் சிக்கலில் இருந்து அரபு நாடுகள் முற்றிலுமாகப் பின்வாங்கிக்கொண்டன. அமெரிக்கா - சவுதி அரேபியா இடையே நெருக்கம் உருவானது. இஸ்ரேல் சர்வ வல்லமை பொருந்திய சர்வாதிகார நாடாக அமெரிக்காவின் உதவியுடன் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

இத்தகைய ஒரு வரலாற்றுப் பின்புலத்தில்தான் யூகங்களைப் பொய்பித்து ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கிறார். பதவியேற்ற ஒரு ஆண்டு முடிவதற்குள்ளாக ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாகவும், அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவ் (தற்போதைய இஸ்ரேல் தலைநகர்) நகரிலிருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றப்போவதாகவும் அறிவித்தார். இது மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகும் அமெரிக்காவை நடுநிலையான மத்தியஸ்தராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட முடியாது என்றும் பாலஸ்தீனம் அறிவித்தது. மேலும் ட்ரம்ப்பின் இந்தத் திட்டத்தை எதிர்த்து ஐ.நா-வில் முறையிடப்போவதாகவும் பாலஸ்தீனம் அறிவித்துள்ளது.

அதோடு பாலஸ்தீன அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட ஐ.நா நிதியத்துக்கு அமெரிக்கா அளித்துவந்த பங்களிப்பையும் நிறுத்தப்போவதாக அறிவித்தார் ட்ரம்ப். இஸ்ரேலுக்குத் தொடர்ந்து நிதியுதவியும் ராணுவத் தளவாடங்களையும் அளித்து வருகிறது அமெரிக்கா. இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்படுகிற தீர்மானங்களை `வீட்டோ' செய்வதில் அமெரிக்கா முன்னணியில் இருக்கிறது.

ட்ரம்ப் வெளியிட்ட வரைபடம்
ட்ரம்ப் வெளியிட்ட வரைபடம்

இந்த நிலையில் ட்ரம்ப் அமைதிக்கான முன்னோட்டம் என்கிற தன்னுடைய திட்டத்தை ட்விட்டரில் வெளியிட்டார். அதில் மாற்றியமைக்கப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன வரைபடமும் இடம்பெற்றிருந்தது. ட்ரம்ப் இந்த அறிவிப்பை ஆங்கிலம், ஹிப்ரு மற்றும் அரேபிய மொழிகளில் வெளியிட்டார். அது முழுவதும் இஸ்ரேலுக்குச் சாதகமாக இருப்பதாகக்கூறி பாலஸ்தீனம் நிராகரித்துவிட்டது. ட்ரம்ப் திட்டத்தின் படி ஜெருசலேம் நகர் முழுவதுமாக இஸ்ரேல் வசம் வந்துவிடும். மேலும், அமைதி திட்டங்களுக்கு ஒப்புக்கொண்டு பாலஸ்தீன், இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குகளை திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்பவையும் அதில் இடம்பெற்றுள்ளன.

இதை பாலஸ்தீனின் பிரதான சக்திகளாக இருக்கும் ஹமாஸ் மற்றும் முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசு ஒருமனதாக நிராகரித்துள்ளது.

சர்வதேச எதிர்வினை

ட்ரம்ப்பின் திட்டத்தை இந்த நூற்றாண்டின் துரோகம் என ஈரான் விமர்சித்துள்ளது. ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவேத் ஸரீஃப் இது பற்றி ட்விட்டரில், ``இந்தத் திட்டம் ஒரு தோற்றுபோன ரியல் எஸ்டேட் வியாபாரியின் கனவுத் திட்டத்தைப் போன்று உள்ளது. இது நிச்சயம் தோற்றுவிடும். ட்ரம்ப்பின் இந்தத் திட்டம் அபாயகரமானது” என்று பதிவிட்டுள்ளார். பெரும்பாலான அரபு நாடுகள் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவாக உள்ளன.

ஐ.நா
ஐ.நா

இந்தியா உட்பட மற்ற உலக நாடுகளும் இரண்டு நாட்டுத் தீர்வை வரவேற்பதோடு திட்டத்தைக் கவனமாகக் கையாள வேண்டும் என்கிற எச்சரிக்கையுடன் கூடிய கருத்தை வெளியிட்டுள்ளன. ஐ.நா-வும் இரண்டு நாடு தீர்வை வரவேற்பதோடு 1967-க்கு முன்பான எல்லையையே அங்கீகரிப்பதாகவும் அறிவித்துள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தை வகுக்கையில் பாலஸ்தீனத் தரப்போடு கலந்தாலோசிக்கப்படவில்லை என்பது ஒரு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப்பின் இந்தத் திட்டம் பாலஸ்தீன - இஸ்ரேல் என்கிற நீறு பூத்த நெருப்பில் ஊற்றிய தண்ணீரா, எண்ணெயா...? பதில் காலத்தின் கையிலே உள்ளது.

பின் செல்ல