Published:Updated:

ஹாங்காங் மக்கள் போராடுவது எதற்காக? அங்கு நடப்பது என்ன?

Hong Kong Protest
Hong Kong Protest

சீனத்தலைவர்களை விமர்சிக்கும் கருத்துக்களைக் கொண்ட ஒரு புத்தகத்தை விற்பனைக்காக வைத்திருக்கும் புத்தகக்கடைக்காரருக்குக்கூடத் தண்டனை கிடைக்கலாம்.

காஷ்மீர் பிரிப்பு என்கிற நம் தேசத்தின் மிகப்பெரிய செய்தியையும் தாண்டி, சீனா-ஹாங்காங் போராட்டமும் நம் கவனத்தை ஈர்ப்பதற்குத் தவறவில்லை. உலகின் மிக முக்கியமான போராட்டங்கள் என்ற பட்டியலில் புதிய இடத்தைப் பிடித்திருக்கிறது, இந்த ஹாங்காங் போராட்டம். இல்லாத உரிமைகளை வேண்டி எல்லாப் போராட்டங்களும் நடக்கும் நிலையில், இருக்கிற உரிமை பறிபோய்விடக் கூடாது என்று நடத்தப்படும் போராட்டம் இது மட்டுமே. அதனாலேயே இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது, ஹாங்காங் போராட்டம். குவியும் நோக்கம், யாரையும் பாதிக்காத எதிர்ப்பு, நேர்த்தியான கவன ஈர்ப்பு என இந்தப் போராட்டம் அந்த மண்ணுக்கே உரிய பிரத்யேக அடையாளங்களைத் தாங்கி நிற்பது இன்னும் சிறப்பு.

Hong Kong Protest
Hong Kong Protest

ஹாங்காங் போராட்டம் ஒரு சிறுகுறிப்பு:

எளிதாகப் புரிந்துகொள்வதற்கு, `இந்தியாவில் காஷ்மீர் பிராந்தியம் போன்றது சீனாவின் ஹாங்காங்’ என்று சொல்வார்கள். ஆனால், அதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டபோது, சீனா தனி நாடாகச் சுதந்திரம் பெற்றாலும், 1997-ம் ஆண்டுவரை ஹாங்காங் மட்டும் பிரிட்டிஷ் காலனி பிடியிலேயேதான் இருந்தது. அதற்குப் பின்னர், இரு நாடுகளுக்கும் ஹாங்காங் நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1997-ல் ஹாங்காங், சீனாவின் ஒருபகுதியாகவே இணைந்தது. அப்போதும்கூட அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஹாங்காங், "குடியிருப்பாளர்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாக்கும். தவிர, வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களைத் தவிர்த்து, அதிகளவில் சுயாட்சியை அனுபவிக்கும்" என்ற ஒப்பந்தத்தில்தான் சீனாவுடன் சேர்வதற்கு ஹாங்காங் மக்கள் அப்போது ஒப்புக்கொண்டார்கள்.

அந்த ஒப்பந்தத்தின்படி, சீன நிலப்பகுதிகளுக்குக் கிடைக்காத சுதந்திரம், ஹாங்காங்குக்குக் கிடைத்தது. அதாவது, எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை, பத்திரிகைகளுக்கான கருத்துரிமை மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றோடு ஹாங்காங்குக்கு அதன் சொந்த ஜனநாயகத்தை வளர்த்துக்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. இந்தச் சுயாட்சி அதிகாரம் வரும் 2047-ல்தான் முடிவுக்கு வருகிறது.

ஆனால், அதற்குள்ளாகவே ஹாங்காங் மீதான தன் பிடியைப் படிப்படியாக இறுக்க ஆரம்பித்தது சீனா அரசு. அதன் ஒரு பகுதியாகவே கடந்த பிப்ரவரியில் சர்ச்சைக்குரிய ஒரு மசோதாவைக் கொண்டுவந்தது. ஹாங்காங்கில் குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கும் நபர்களை, நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்வதற்கு அனுமதிப்பதே இந்தச் சட்டத்திருத்த மசோதா ஆகும். இது நிறைவேற்றப்பட்டால், சீனாவுடன் தொடர்புபடுத்தி பணியிலிருக்கும் ஹாங்காங்வாசிகள் அனைவருக்கும் பேராபத்தாக இருக்கும் என்பதே இப்போது வெடித்துள்ள போராட்டத்துக்கான முழுமுதற்காரணம்.

Hong Kong Protests
Hong Kong Protests

அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என சீன அதிகாரத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பும் அனைவரையுமே இதனால் ஒடுக்க முடியும். சீனத் தலைவர்களை விமர்சிக்கும் கருத்துகளைக் கொண்ட ஒரு புத்தகத்தை விற்பனைக்காக வைத்திருக்கும் புத்தகக் கடைக்காரருக்குக்கூடத் தண்டனை கிடைக்கலாம். சீனாவின் நேர்மையற்ற, மனிதாபிமானமற்ற விசாரணை முறைகள் ஹாங்காங்கின் சுதந்திரத்தை முற்றிலும் அழித்துவிடும் என்பதே அங்கு போராடும் மக்களின் கருத்து.

நேற்றைய செய்தியும் உண்மையும்:

போராட்டம் பல வடிவங்களில் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், நேற்று பரவிய ஊடகச் செய்தி, 'ஹாங்காங் போராட்டம் தன் முதல் வெற்றியைச் சுவைத்துவிட்டது' என்று கூறியது. அதாவது, போராட்டத்துக்குக் காரணமான சர்ச்சைக்குரிய சட்டத்திருத்த மசோதா ரத்து செய்யப்படும் என ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம் அறிவிப்பு செய்ததாகத் தகவல் வெளியானதே இந்தச் செய்திப் பரவலுக்குக் காரணம். போராட்டம் வெற்றிபெற்றது, போராட்டம் நிறைவுபெற்றது, ஹாங்காங்கில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும் என்று நம்பிக்கையான செய்திகள் நிறையவே பகிரப்பட்டன.

Hong Kong
Hong Kong

ஆனால், உண்மை நிலவரம் அங்கு வேறாக இருக்கிறது. ஹாங்காங்கில் மக்கள் போராட்டம் முழுமையாக வெற்றி பெறவில்லை, போராட்டம் இன்னும் முடிவுபெறவில்லை என்றே அங்கிருந்து வரும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் இன்னொரு முக்கியமான விஷயம், இயல்பு நிலை திரும்பும் என்ற செய்தி. உண்மையில் மார்ச் மாதத்திலிருந்து நடக்கும் இந்தப் போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை இதுவரையில் எந்த வகையிலும் பாதிப்படையவில்லை.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்....

முதலாவது,

ஹாங்காங்கில் மக்கள் போராட்டம் முழுமையாக வெற்றி பெறவில்லை. சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடங்கிய போராட்டம் மேலும் சில கோரிக்கைகளைச் சேர்த்து அதன் நோக்கத்தை விரிவுபடுத்திக்கொண்டது. அவை...

  1. மக்களுக்கு எதிரான, குற்றவாளிகளை சீன அரசிடம் ஒப்படைக்கும் சட்டத்திருத்த மசோதா முழுவதுமாக ரத்து செய்யப்பட வேண்டும்.

  2. மக்களின் போராட்டத்தை ஹாங்காங் அரசு கலவரம் என்று வகைப்படுத்துவதைக் கைவிடுதல் வேண்டும்.

  3. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின், மருத்துவச் சான்றிதழை வைத்து அவர் போராட்டத்தில் கலந்திருக்கலாம் என்று அனுமானித்து போலீஸார் சிலரைக் கைதுசெய்தனர். இது, ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதித்திருக்கிறது; இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் போராட்டத்தில் கலந்துகொண்டதாகக் கைது செய்திருப்பவர்களைக் குற்றமற்றவர் எனக் கூறி விடுவிக்க வேண்டும்.

  4. போராட்டத்தின்போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி, முறையின்றி நடந்துகொண்ட போலீஸார் மீது விசாரணை நடத்த தனி ஆணையம் அமைக்க வேண்டும்.

  5. சீன ஆதரவாளராகச் செயல்படும் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம் பதவி விலக வேண்டும். ஹாங்காங் நிர்வாக (சட்டமன்ற) உறுப்பினர்கள், பொதுமக்கள் வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். (தற்போது நிர்வாகத் தலைவர் 1,200 பேர் கொண்ட குழுவின் மூலமும், 70 சதவிகித உறுப்பினர்கள் குறிப்பிட்ட சில மக்கள் பிரதிநிதி குழு மூலமும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.)

இந்த ஐந்து கோரிக்கைகளில் ஒன்றுக்கு மட்டுமே ஹாங்காங் நிர்வாகம் பணிந்திருக்கிறது. எனவே, போராட்டம் முழுவதுமாக வெற்றிபெறவில்லை.

Hong Kong
Hong Kong

இரண்டாவது,

ஹாங்காங்கில் போராட்டம் இன்னும் முடிவுபெறவில்லை.

'ஹாங்காங்கில் போராட்டம் வெற்றி' என உலக ஊடகங்களும் பலரும் மகிழ்ச்சியடையும்போது, உண்மை நிலவரம் அப்படி இல்லை என்கின்றனர், போராட்டக்காரர்கள். ஹாங்காங்கில் இருக்கும் விகடன் செய்தியாளர் ராம், "நேற்றைய அறிவிப்பில் ஹாங்காங் முதன்மை அதிகாரி கேரி லாம் கைதிகள் ஒப்படைப்பு சட்டத்திருத்தத்தை வாபஸ் வாங்கிவிட்டதாகவே அறிவித்துவிட்டார். இதனால் இந்த வாரத்துடன் போராட்டம் முடிந்துவிடும் என்று நினைத்தால் அது உண்மை இல்லை. ஏனெனில், இதுவரை போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை எந்தச் சட்ட நடவடிக்கையும் இல்லாது விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது. ஹாங்காங்போல சட்டத்தை மதிக்கும் ஊரில் இதுபோல வன்முறைகள் செய்தோரை நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்தே ஆக வேண்டும் என்பது அரசின் வாதம். கேரி லாம் விட்டுக் கொடுத்தாலும், இன்னொரு பக்கம் விடாப்பிடியாகவே இருப்பதால் இந்தப் போராட்டம் உடனடியாக முடிவுக்கு வரும் என்று தோன்றவில்லை. மீண்டும் விமான நிலையம் செல்லும் பாதைகளை அடைத்து சிக்கல் ஏற்படுத்தப்போவதாக அறிவித்திருக்கின்றனர் போராட்டக்காரர்கள்!" என்கிறார். ஆகவே, போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

மூன்றாவது,

மார்ச் மாதத்திலிருந்து நடக்கும் போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையவில்லை:

வார இறுதிகளில் போராட்டம் வலுப்பெறுவதால், அதில் பங்கெடுக்காதவர்கள் வீட்டுக்குள் முடங்கியேதான் இருக்கிறார்கள். அதைத் தவிர, பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றாலும் இயல்பு வாழ்க்கையில் பெரிதாகப் பாதிப்பில்லை என்கிறார் ராம். ஹாங்காங்வாழ் இந்தியர் ஒருவரிடம் அவர் கண்ட சிறு பேட்டி இங்கே...

Hong Kong Protests
Hong Kong Protests

ஜெயா பீசபதி எனும் அவர்,

"97-லிருந்து ஹாங்காங்கில் இதுபோல ஒரு போராட்டத்தைப் பார்த்ததே இல்லை. அன்றாட வாழ்க்கை இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கான்னு கேட்டா இல்லைன்னுதான் சொல்லுவேன். ஏன்னா சாயங்காலம்தான் போராட்டத்தைத் தொடங்குறாங்க. அதே மாதிரி, வார இறுதி நாள்கள்லதான் திரும்பவும் போராடுறாங்க. இதுவே நமக்கெல்லாம் புதுசு. அது மாதிரி போராட்டம் நடக்கிற இடத்திலயும் சரி, முடிஞ்சு போகும்போதும் சரி, குப்பைகளைப் போடுறது இல்ல. ஏதாவது ஆம்புலன்ஸ் வந்தா வழிவிடுறாங்க. பொதுச் சொத்துக்கு எந்தச் சேதமும் பண்றதில்லை. இவையெல்லாம்தான் ஆச்சர்யமான விஷயங்கள். ஆனா, எதிர்பாராத அரசியல் திருப்பங்கள் இவங்க வாழ்க்கையில நெறைய பிரச்னைகள் ஏற்படுத்துமோன்னு பயமா இருக்கு. போராடும் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியா இருக்குன்னு இவங்களுக்கு வருத்தப்படறதா... இல்லைன்னா, ஏசியாவுலயே தலைசிறந்த நகரம் இப்படிப் பிரச்சினைல இருக்குன்னு வருத்தப்படறதா தெரியலை" என்கிறார்.

இவர் மட்டுமல்ல, ஒருமுறை விமான நிலையத்தை முற்றுகையிட்டு ஹாங்காங் மக்கள் போராடியதைத் தவிர, வேறு எவ்விதத்திலும் பாதிப்பின்றியே போராட்டம் நடைபெறுகிறது. போராட்டக்காரர்களை அடக்குவதற்காக போலீஸார் வன்முறையைக் கையாளும் இடங்கள் மட்டுமே அமைதியிழந்து பாதிப்படைகிறது என்பதே மற்ற சில ஹாங்காங்வாழ் இந்தியர்களின் கருத்தாக இருக்கிறது.

Hong Kong Protests
Hong Kong Protests

சுதந்திரம், அங்கீகாரம், தனித்தன்மை, உரிமை இவற்றைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடுகிறார்கள் ஹாங்காங் மக்கள். உலகின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றான ஹாங்காங் அமைதியிழந்திருக்கிறது. நாளுக்குநாள் போராட்டக்காரர்களின் உறுதி கூடிக்கொண்டே இருக்கிறது. ஹாங்காங் மக்கள் தங்கள் போராட்டத்தில் வெற்றிபெற்றால், அதிகார வர்க்கங்களுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் உலகின் எந்த மூலைக்கும் அந்த வெற்றி நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சுமென்பது உறுதி.

அடுத்த கட்டுரைக்கு