Published:Updated:

கொரோனாவுக்கு பிறகான உலகில் அகதிகளின், தஞ்சம் தேடுபவர்களின் நிலை என்னவாக இருக்கும்?

அகதிகள்
News
அகதிகள்

கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள உலக நாடுகள் திணறிவரும் சூழ்நிலையில் அகதிகள், தஞ்சம் தேடி வருபவர்களின் நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது.

கொரோனா நெருக்கடி உலகையே புரட்டிப் போட்டிருக்கிறது. தேசத்தின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. தொழில்கள் முடங்கியுள்ளன. உலகப் பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறது. கற்பனையிலும்கூட சாத்தியமானது எனக் கருதப்பட்ட வாழ்க்கை முறை இன்று அசாத்தியமானதாகி இருக்கிறது.

கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி அரசுகள் மக்களின் மீது கண்கானிப்புகளை அதிகப்படுத்துவதும், அதிக அதிகாரங்களை தன்வசம் கையில் எடுத்துக்கொள்கிற நிகழ்வுகளும் ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நடந்துவருகின்றன. மக்களின் அடிப்படை உரிமைகள் பல வழிகளில் முடக்கப்பட்டிருக்கின்றன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சுகாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, அரசுகள் அதிக அதிகாரங்களைத் தன்வசம் குவித்துக்கொள்வதை நிறுத்த வேண்டும் என்கிற குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. ஒரு நாட்டில் குடிமக்களின் உரிமைகளே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது என்றால், அகதிகளாக, தஞ்சம் தேடுபவர்களாக, சட்டவிரோத குடியேறியகளாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் நிலை என்னவென்று கேள்வி எழுந்துள்ளது.

பல்வேறு அகதிகள் முகாம்களும் அளவுக்கு அதிகமான மக்கள் தொகை, முறையான சுகாதார வசதிகள், போதுமான இடப்பரப்பு இல்லாமல்தான் இருந்துவருகின்றன. கொரோனா வைரஸ், பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது. அதை எதிர்கொள்வதிலும் எந்தவித பாரபட்சமும் காட்டப்பட்டுவிடக்கூடாது. அகதிகள், தஞ்சம் கேட்டு வந்தவர்களின் நலனையும் உலக நாடுகள் பாதுகாக்க வேண்டும் என ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அகதிகள் தஞ்சம் புகுந்துள்ள நாடுகளின் சுகாதார கட்டமைப்புகள், தங்கள் குடிமக்களுக்கே போதுமானதாக இல்லை என்கிற நிலையில், அகதிகள் பற்றிய கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. ஐ.நா தரவுகளின்படி மட்டுமே உலகம் முழுவதும் 25.9 கோடி பேர் அகதிகளாகவும், 35 லட்சம் பேர் தஞ்சம் கேட்டு வருபவர்களாகவும் உள்ளனர்.

கொரோனா நெருக்கடி முடிகிற வரையில், போர்ச்சுக்கல் நாட்டில் தஞ்சம் கேட்டு குடியேறியவர்கள் அனைவரும் குடிமக்களாகவே கருதப்படுவர் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சுகாதாரம் போன்ற அடிப்படை மருத்துவ சேவைகள் யாருக்கும் நிராகரிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக, போர்ச்சுக்கல் அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், மற்ற நாடுகளிலோ நிலைமை இவ்வாறு இல்லை.

அகதிகள் சென்ற படகு
அகதிகள் சென்ற படகு

வங்கதேசத்தில் காக்ஸ் பஜாரில் உள்ள அகதிகள் முகாமில் ரோஹிங்யா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம்களில் இதுவும் ஒன்று. கடந்த பிப்ரவரி மாதம் காக்ஸ் பஜார் முகாமிலிருந்து 400-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மூலம் மலேசியா நோக்கி பயணம்செய்தனர். கொரோனா நெருக்கடியால் அவர்களைத் தங்கள் எல்லைக்குள் அனுமதிக்க மலேசிய அரசு மறுத்துவிட்டது.

இதனால் அவர்கள் மீண்டும் வங்கதேசத்திற்கே திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டால் முப்பதுக்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள் படகிலே உயிர்விட நேர்ந்தது. அவர்களின் சடலங்கள் கடலிலே வீசப்பட்டன. பின்னர், வங்கதேச கடற்படையினர் இவர்களை மீட்டு, அதே முகாமிற்கு திரும்பவும் அழைத்துச்சென்று தனிமைப்படுத்தியுள்ளனர். இவர்களில் யாருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டு, அது காக்ஸ் பஜார் முகாமில் பரவினால், அது பெரும் நெருக்கடியை உருவாக்கிவிடும். கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா அகதிகள் வங்கதேசத்தில் வசித்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மியான்மரில் ரோஹிங்யாக்கள் வசித்துவரும் ரகைன் மாகாணத்தில், மியான்மர் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், இணைய சேவையை முடக்கி, மருத்துவ உதவிகள் கிடைப்பதைக்கூட மியான்மர் அரசு தடுத்துவருவதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமடையத் தொடங்கியதுமே உலக நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நா அழைப்பு விடுத்திருந்தது. அதையும் மீறி, மியான்மர் அரசு செயல்பட்டுவருவதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது.

மியான்மர் ராணுவம்
மியான்மர் ராணுவம்

கொரோனா நெருக்கடியைக் காரணம் காட்டி, அமெரிக்க அரசு உரிய ஆவணங்கள் இல்லாமல் தஞ்சம் கேட்டு வருபவர்களை நாடு கடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஒரு மாத காலத்திற்குள் 10,000-க்கும் மேற்பட்டோர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும், மெக்சிகோ மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவ்வாறு கௌதமாலா நாட்டிற்கு அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, அமெரிக்காவுக்குள் பிற நாட்டினர் குடியேற தற்காலிகமாக தடை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தஞ்சம் கேட்டு வருவோர் மீது விரோதமான போக்கையே கடைபிடித்துவருகிறார். இந்த நிலையில், கொரோனா நெருக்கடி அதிகார துஷ்பிரயோகம் செய்ய ட்ரம்ப்புக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைபவர்களைத் தடுக்க, எல்லையில் சுவர் எழுப்புவேன் என்று பிரசாரம் செய்துவருபவர் ட்ரம்ப். இன்று மெக்சிகோ, கொரோனா பாதிப்பைக் காரணம் காட்டி, அமெரிக்கா உடனான தன்னுடைய எல்லையை மூடியிருக்கிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அரச குடும்பம், பிரதமர், அமைச்சர்கள் தொடங்கி தேசமற்ற, உரிமைகளற்ற அகதிகள் வரை கொரோனா யாரிடமும் பாரபட்சம் காட்டவில்லை. ஆனால், பாதிப்படைந்தவர்களுக்கு சமமான வாய்ப்புகள் கிடைக்கிறதா என்றால் இல்லை. கொரோனா, உலகம் முழுவதும் இரக்கறமின்றி சூறையாடிக்கொண்டிருந்தாலும், இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தியிருக்கிறது. உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் அகதிகள் விரோதப் போக்கு மாற வேண்டும் என்பதே கொரோனா கற்றுக்கொடுத்த படிப்பினையாக இருக்கட்டும். கொரோனாவிலிருந்து மீண்டு உதயமாகிற பூவுலகு பாரபட்சங்களற்ற, ஏற்றத்தாழ்வுகளற்ற அனைவருக்குமான உலகாக இருக்கட்டும்!