Published:Updated:

சிந்துதேஷ் கோரிக்கை! - பாகிஸ்தான் பேரணியில் பிரதமர் மோடி, உலகத் தலைவர்களின் படங்கள்!

பாகிஸ்தான்
பாகிஸ்தான் ( ANI )

பாகிஸ்தானின் சிந்துவில் நடந்த சுதந்திரப் பேரணியில், பிரதமர் நரேந்திர மோடி, பிற உலகத் தலைவர்களின் பதாகைகளைப் பயன்படுத்திய மக்கள், பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் பெற உலகத் தலைவர்களின் ஆதரவைக் கோரினர்.

பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் ஒன்றான சிந்து மாகாணத்தின் தலைநகரம் கராச்சி. `சிந்தி’ என அழைக்கப்படும் மக்கள் வசித்துவரும் இப்பகுதி பாகிஸ்தானின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. சிந்துப் பகுதியை பாகிஸ்தான் ஆளுகையிலிருந்து பிரித்து, தனி நாடாக (சிந்துதேஷ்) ஆக்க வேண்டும் என இம்மாகாண மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். சிந்துதேஷ் புரட்சிகர ராணுவம் உள்ளிட்ட அமைப்புகள் சிந்தி மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருகின்றன.

மோடி பதாகை - சிந்துதேஷ்
மோடி பதாகை - சிந்துதேஷ்
ANI

ஜி.எம்.சையத் மற்றும் பிர் அலி முகமது ராஷ்டி ஆகியோரின் தலைமையில் 1967-ம் ஆண்டு தனித் தாயகத்துக்கான (சிந்துதேஷ் - Sindhudesh) அடித்தளம் அமைக்கப்பட்டது. இந்தநிலையில், ஜி.எம்.சையத்தின் 117-வது பிறந்தநாளான ஜனவரி 17-ம் தேதி 'பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடந்தது.

பாகிஸ்தானின், சிந்து (Sindh) பகுதியிலுள்ள சான் (Sann) நகரில் சிந்தி மக்கள் சார்பில் நடைபெற்ற சுதந்திரப் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற உலகத் தலைவர்களின் பதாகைகளை ஏந்திய சிந்துதேஷ் சுதந்திர இயக்கத்தினர் (Sindhudesh Freedom Movement), பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற உலகத் தலைவர்களின் ஆதரவுகளைக் கோரினர்.

போராட்டக்காரர்கள் சுதந்திர கோஷங்களை எழுப்பினர். அவர்கள், கையிலிருந்த பதாகையில் `நரேந்திர மோடி - பாகிஸ்தானிடமிருந்து எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்' (Mr.Narendra Modi jee - Sindh wants freedom from Pakistan) என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், ``சிந்துப் பகுதி, சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் வேத மதத்தைச் சார்ந்தவர்களுக்கு சொந்தம் என்றும், அதை பிரிட்டிஷ் பேரரசு சட்டவிரோதமாக ஆக்கிரமித்து 1947-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வழங்கிவிட்டது" என்றும் தெரிவித்தனர்.

பேரணியின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெய் சிந்து முத்தாஹிதா மஹாஸின் (Jeay Sindh Muttahida Mahaz) தலைவர் ஷஃபி முஹம்மது பர்ஃபாத் (Shafi Muhammad Burfat), ``வரலாறு மற்றும் கலாசாரத்தின் மீதான இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் அனைத்தையும் கடந்து சிந்து, தனது தனி வரலாற்று மற்றும் கலாசார அடையாளத்தை, பன்முகவாத, சகவாழ்வு, சகிப்புத்தன்மை மற்றும் இணக்கமான சமுதாயமாக தக்கவைத்துக்கொண்டு பராமரித்துவருகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு