Published:Updated:

`சீன அதிபருக்கு உற்சாகம் தந்த விமான நிலைய வரவேற்பு!’ - முதல்நாளில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என்ன?

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் தனியாக ஆலோசனை நடத்தியபோது இருவரும் பேசிய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார் இந்திய வெளியுறவு செயலர்.

மோடி - ஜி ஜின்பிங்
மோடி - ஜி ஜின்பிங் ( Twitter/@narendramodi )

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்கும் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சுமார் 63 ஆண்டுகளுக்குப் பிறகு சீன தலைவர் தமிழகம் வந்துள்ளதால் இவர்களின் சந்திப்பு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

modi - xi  Xi Jinping
modi - xi Xi Jinping
Twitter/@narendramodi

நேற்று பிற்பகல் சென்னை விமானநிலையத்தில் வந்து இறங்கிய சீன அதிபருக்குத் தமிழகப் பாரம்பர்ய முறையில் இசை வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து நேராகக் கிண்டி ஹோட்டலுக்கு சென்ற அதிபர், சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மாலை 4 மணியளவில் மாமல்லபுரம் சென்றார். அதிபருக்கு முன்னதாகவே அங்கு சென்ற இந்தியப் பிரதமர் மோடி, ஜி ஜின்பிங்கை வரவேற்றார்.

Live Updates: `இரவு விருந்து; ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை!' - மோடி - ஜி ஜின்பிங் முதல்நாள் சந்திப்பு நிறைவு

இதையடுத்து இரு நாட்டுத் தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்கள், கடற்கரை கோயில் போன்றவற்றை சுற்றிப் பார்த்தனர். அங்குள்ள சிற்பக்கலைகளின் வரலாற்றைச் சீன அதிபருக்கு விளக்கினார் பிரதமர் மோடி. தொடர்ந்து இருவரும் நீண்ட நேரம் உரையாடினர். இதையடுத்து மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை இரு நாட்டுத் தலைவர்களும் பார்வையிட்டனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு, நடந்த இரவு விருந்து வழங்கப்பட்டது.

modi - xi  Xi Jinping
modi - xi Xi Jinping
Twitter/@narendramodi

இதையடுத்து இரு நாட்டுத் தலைவர்களும் தனியாக ஆலோசனை நடத்தினர். சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக இவர்களின் ஆலோசனை நீடித்தது. பின்னர் ஜி ஜின்பிங்கை வழி அனுப்பிவிட்டு, தன் ஹோட்டலுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி. நேற்று மாமல்லபுரத்தில் நடந்த இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு மற்றும் அவர்கள் ஆலோசனை நடத்தியது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் பேசினார்.

மோடி- ஜின்பிங் பாதுகாப்புக்குத் தமிழகக் காவல்துறை உருவாக்கிய `ஃபோட்டோகிராமெட்ரிக் மேப்பிங்'!

``தமிழகம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் அவரை வெகுவாகக் கவர்ந்துள்ளதாகக் கூறினார். மாமல்லபுரத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் ஐந்து மணிநேரம் தங்கள் சிறந்த நேரங்களைச் செலவிட்டுள்ளனர். இதில் கலை நிகழ்ச்சி நடந்த நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் இருவரும் தனியாகவே உரையாடியுள்ளனர்.

vijay gokhale
vijay gokhale
ANI

தமிழக கலைநிகழ்ச்சிகளைக் கண்டு மிகவும் பாராட்டியுள்ளார் ஜி ஜின்பிங். இரவு விருந்துக்குப் பிறகு, நடந்த ஆலோசனையில் இருவரும் தங்கள் நாட்டில் உள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். குறிப்பாக, வர்த்தக விவகாரங்கள், முதலீடு, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் அளவை அதிகரிப்பது தொடர்பாக விவாதித்துள்ளனர்.

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்துக்காக ஆதரவு அதிகரித்து வருவது தொடர்பாக இரு தலைவர்களும் கவலை தெரிவித்து விவாதித்துள்ளனர். தீவிரவாதத்தை எதிர்க்க இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என இருவரும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்” என வெளியுறவு செயலர் கூறியுள்ளார்.