Published:Updated:

`முன்னர் 2 டிரில்லியன்; விரைவில் 5 டிரில்லியன்!' - அமெரிக்க மாநாட்டில் மோடி #BloombergGBF

வணிக உலகம் இந்தியாவுடன் கைகோக்க வேண்டிய நேரம் இது. எங்கள் மக்கள் வறுமையைத் தோற்கடித்துள்ளனர்.

Modi
Modi ( Twitter )

பிரதமர் நரேந்திர மோடி 7 நாள் அரசுமுறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டுள்ளார். அதன் ஒருபகுதியாக, நியூயார்க் நகரில் நடைபெறும், `ப்ளூம்பெர்க் குளோபல் பிசினஸ் போரம்’ மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது அவர், தொழில் முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். மோடி பேசுகையில், ``இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்யுங்கள்’ என்று வணிக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

modi
modi

தொடர்ந்து பேசுகையில்,``தொழில் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு இந்திய அரசு இயங்கிவருகிறது. கார்ப்பரேட் வரிகள் குறைப்பு நடவடிக்கை அங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஸ்டார்ட் அப்புகளில் முதலீடு செய்ய இந்தியாவுக்கு வருகை தாருங்கள். வரும், காலங்களில் இந்தியாவின் நவீன உள்கட்டமைப்பு வசதிக்காக நாங்கள் 1.3 டிரில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்போகிறோம். நீங்கள் ஒரு மிகப்பெரிய உள்கட்டமைப்பு வசதிகொண்ட, நகரமயமாக்கப்பட்ட சுற்றுச்சூழலை உள்ளடக்கிய நாட்டில் முதலீடு செய்யவிரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள். அண்மையில் கார்ப்பரேட் வரி குறைப்பு என்ற முக்கியமான சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறோம்.

`பேசியது போதும்; செயல்படவேண்டிய நேரம் வந்துவிட்டது!' - ஐ.நாவில் பிரதமர் மோடி #ClimateChange

இந்தியாவில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இது ஒரு தொடக்கம்தான். நாங்கள் வணிகத் தோழமையைப் பின்பற்றுபவர்கள். வணிக உலகம் இந்தியாவுடன் கைகோக்க வேண்டிய நேரம் இது. எங்கள் மக்கள் வறுமையைத் தோற்கடித்துள்ளனர். எங்கள் நாட்டின் ஜனநாயகம், நீதித்துறை பாதுகாப்பான முதலீடுகளை உறுதிசெய்கின்றன. சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்தியா உலகத்தரத்தில் உயர்ந்துள்ளது. முன்பு வரிகளில் பல்வேறு சிக்கல் நிலவி வந்தன; அதற்குத் தீர்வாக ஜி.எஸ்.டி வந்துள்ளது.

Global Business Forum 2019
Global Business Forum 2019

உங்கள் தொழில்நுட்பமும், எங்கள் திறமையும் உலகை மாற்றும். உலகம் முழுவதும் அந்நிய நேரடி முதலீடு வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும்போது, இந்தியாவில் அது உயர்ந்துகொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற நிறுவனங்கள் அடிப்படையில் இந்தியா 3வது இடத்தில் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 2 டிரில்லியன் டாலராக இருந்தது. தற்போது கூடுதலாக 1 டிரில்லியன் வளர்ச்சி பெற்றுள்ளது. விரைவில், 5 டிரில்லியன் டாலர்களை எட்டுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.