கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஜி-7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ஜெர்மனியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாராக கலந்துகொண்டார். அப்போது மாநாட்டுக்கு வந்திருந்த உலக நாடுகளின் தலைவர்களுக்கு, இந்தியாவின் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' என்ற திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்ட கலை மற்றும் கைவினைப் பொருள்களை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு `குலாபி மீனகாரி ப்ரூச்', `கஃப்லிங்க் செட்' ஆகியவற்றைப் பரிசாக வழங்கினார். குலாபி மீனகரி என்பது வாரணாசியின் புவிசார் குறியீடு பெறப்பட்ட கலை வடிவமாகும். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிளாட்டின உலோக வண்ணப்பூச்சுடன் கிராக்கரி கோடிட்ட தேநீர் கோப்பை செட்டை மோடி வழங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதே போல, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அத்தர் மிட்டி, மல்லிகை எண்ணெய், அத்தர் ஷமாமா, அத்தர் குலாப், அயல்நாட்டுக் கஸ்தூரி, கரம் மசாலா ஆகியவை அடங்கிய 1 லிட்டர் பாட்டில்கள்கொண்ட ஜர்தோசி பெட்டியை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார். கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மென்மை மற்றும் கைவினைத்திறனுக்காக உலகம் முழுவதும் பிரபலமான பட்டு கம்பளங்களைப் பிரதமர் வழங்கினார்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு உ.பி மாநிலம் நிஜாமாபாத்தில் கைவினைக் கலைஞர்களால் செய்யப்பட்ட கருப்பு மண்பாண்ட பொருள்களைப் பரிசாக வழங்கினார். இத்தாலியின் பிரதமர் மரியோ ட்ராகிக்கு அழகான மார்பிள் இன்லே டேபிள் டாப்-ஐ வழங்கியிருக்கிறார். தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுக்கு ராமாயணத்தை விளக்கும் விதமாக ராமாயண கருப்பொருளுடன் கூடிய டோக்ரா கலையைப் பிரதமர் பரிசாக வழங்கினார்.

அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸுக்கு நந்தி டோக்ரா கலைப்பொருளைப் பிரதமர் பரிசாக வழங்கினார். செனகல் அதிபர் மேக்கி சாலுக்கு மூஞ்ச் கூடைகள் மற்றும் பருத்தி டர்ரிகளை பிரதமர் பரிசாக வழங்கினார்.