Published:Updated:

`இந்தியாவில் 5 பைடன்கள் இருக்கிறார்களாமே’ , `இந்த கோப்புகள் உதவலாம்’ - மோடி, பைடன் சந்திப்பில் கலகல

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் ``தான். கடந்த 2014-ம் ஆண்டு மற்றும் 2016-ம் ஆண்டுகளில் அவருடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை இங்கு நினைவு கூற விரும்புகிறேன்” - ஜோ பைடன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மூன்று நாள் அரசு முறை சுற்றுப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேற்றிரவு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அதற்காக வெள்ளை மாளிகைக்குச் சென்றிருந்த நரேந்திர மோடியைத் திரளான அளவில் கூடியிருந்த இந்திய வம்சாவளிகள், அமெரிக்க அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன மற்றும் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தபடியே பிரதமர் மோடி அந்நாட்டின் அதிபர் இல்லமான வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தார்.

அங்கு அவரை வரவேற்று அழைத்துச் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சுமார் 1 மணி நேரம் பிரதமர் மோடியுடன் பேசினார். அமெரிக்க அதிபராக பைடன் தேர்வு செய்யப்பட்டதற்குப் பின்னர், நரேந்திர மோடி முதன் முறையாக அமெரிக்காவுக்குச் சென்று அவரை சந்தித்ததால் இருவரும் பல்வேறு விஷயங்களைக் கலந்தாலோசித்தனர். இருவரின் சந்திப்பில், பொருளாதாரம், வணிகம் , கொரோனா நிலவரம், சர்வதேச பிரச்னைகள் மற்றும் ஆப்கன் விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

நரேந்திர மோடி - ஜோ பைடன்
நரேந்திர மோடி - ஜோ பைடன்

அப்போது பேசிய ஜோ பைடன், "இந்தியப் பிரதமரின் அமெரிக்கா வருகை எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் தான். கடந்த 2014-ம் ஆண்டு, 2016-ம் ஆண்டுகளில் அவருடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை இங்கு நினைவு கூற விரும்புகிறேன். அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாக இணைந்து பல்வேறு உலக பிரச்னைகளையும், சவால்களையும் சந்தித்து வருகின்றன. நான் முன்னதாக 2006-ல் அமெரிக்கத் துணை அதிபராக இருந்த போது, 2020 காலகட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் நட்பு ரீதியாக மிக நெருக்கமான நாடுகளாக மாறும் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தற்போது நிஜமாகி இருக்கிறது. இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாள் அமெரிக்காவிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படவிருக்கிறது. இந்தியாவுடனான இந்த பிணைப்பு வரும் நாள்களில் இன்னும் வலுவாகும். " என்றார்.

`உங்களின் வெற்றி உலக மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது!' - கமலா ஹாரிஸுடனான சந்திப்பில் மோடி

தொடர்ந்து பேசிய அவர், "நான் கடந்த காலங்களில் மும்பை வந்திருந்த போது, செய்தியாளர்கள் சிலர் என்னிடம் இந்தியாவில் உங்களுக்கு உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டனர். பைடன் என்ற பெயரில் இந்தியாவில் மொத்தம் 5 பேர் இருக்கிறார்கள் என்றும் கூறினார்கள். இந்த விஷயத்தை இப்போது இங்கு நினைவுக் கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இப்போது இந்தியாவில் கிழக்கிந்தியத் தேநீர் நிறுவனத்தில் பணியாற்றிய கேப்டன் ஜார்ஜ் பைடன் என்ற ஒருவர் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அது கிழக்கிந்தியத் தேநீர் நிறுவனம் என்பதால், அவர் அயர்லாந்துகாரராக இருக்கலாம். ஆனால் என்னால் அதனை நம்ப முடியவில்லை. அவரைத் தவிர்த்து வேறு பைடன்கள் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. அப்படி இருந்தால் பிரதமர் மோடி தான் கண்டுபிடித்துத் தர வேண்டும்" என்று நகைச்சுவையாகக் கூறினார்.

அதைக் கேட்டு அரங்கம் முழுதும் சிரிப்பலையில் அதிர, பைடனுக்கு எதிர்வினையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியாவில் உங்களின் குடும்ப பெயர் இருப்பது குறித்து நீங்கள் ஏற்கனவே என்னிடம் விரிவாக கூறியிருக்கிறீர்கள். நிச்சயமாக உங்களுக்கு உதவுகிறேன். அதற்காகத் தான் இந்தியாவிலிருந்து நிறையக் கோப்புகளைக் கொண்டு வந்திருக்கிறேன். அவை உங்களுக்கு நிச்சயம் உதவும்" என்று சிரித்தபடியே கூறினார். இரு நாட்டுத் தலைவர்களின் இந்த அரட்டையால் நிசப்தமாக இருந்த வெள்ளை மாளிகையில் சிரிப்பு சத்தம் சிறிது நேரம் நீடித்தது.

பின்னர், ஜோ பைடனை தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்லுறவு மிகப்பெரிய அளவில் மேம்பட்டிருக்கிறது. அதற்கு இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மிக முக்கிய காரணம் எனலாம். வர்த்தகமும், தொழில்நுட்பமும் தான் இரு நாட்டு உறவை இயக்கி வருகிறது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு, வளர்ந்த நாடான அமெரிக்காவின் பல்வேறு அம்சங்கள் தேவைப்படுகிறது. அதே போல், சில விஷயங்களில் இந்தியாவின் உதவியும் அமெரிக்காவுக்குப் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவில் அதிகமாக இருந்த நேரத்தில் அமெரிக்கா செய்த உதவிகள் என்றென்றும் நினைவு கூறத்தக்கது" என்றார்.

அதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜோ பைடன் இருவரும் இந்திய நேரப்படி இரவு 11.30-க்கு வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டில் குவாட் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பருவநிலை மாற்றம் மற்றும் கொரோனா பெருந்தொற்று குறித்த விவாதங்கள் பிரதானமாக இருந்தது. இந்தியா சார்பாக மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, "உலகளவில் 2004-ல் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகான, மிகப்பெரிய மற்றும் தீவிரமான பிரச்னையாக இந்த கொரோனா உருவெடுத்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி, மக்களைப் பாதுகாக்க வேண்டியது மட்டுமே இந்த நேரத்தில் நம்முடைய மிக முக்கிய பணியாக இருக்க வேண்டும். எனவே தான் குவாட் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதற்கு முன்வந்திருக்கிறோம்.

குவாட்ட கூட்டமைப்பின் தலைவர்கள்
குவாட்ட கூட்டமைப்பின் தலைவர்கள்

குவாட் நாடுகளில் தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலம் நம் நாட்டு மக்கள் பயன் பெறுவார்கள். உலக நம்மைக்கான மிகப்பெரிய சக்தியாக இந்த மாநாடு மாறும். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும். குவாட் நாடுகளுக்கு இடையே மட்டுமல்லாமல் மொத்தத்தில் உலக நம்மைக்கான திட்டங்களை இந்த குவாட் செயல்படுத்தும்" என்றார்.

தொடர்ந்து, மாநாட்டில் பேசிய ஜப்பான் பிரதமர் யோஷி, "முன்னதாக ஜப்பான் மீது அமெரிக்கா விதித்திருந்த இறக்குமதி தடை நீக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்க விஷயம். இந்தோ-பசிபிக் பகுதியில் பிராந்தியத்தில், குவாட் நாடுகள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் சென்று வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

அதையடுத்து பேசிய ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், "கொரோனா பெருந்தொற்றிற்கு எதிரான உலக நாடுகளின் இந்த மிகப்பெரிய மற்றும் மிகநீண்ட போராட்டத்தில் எங்களின் கொரோனா தடுப்பூசி தொழில்நுட்பங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். முந்தைய மாநாடு முடிந்த அடுத்த 6 மாத காலத்தில் நாம் பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு தீர்வு கண்டிருக்கிறோம். எனவே, தற்போதும் அதே போல் சவால்களைச் சந்திப்போம்" என்றார்.

அமெரிக்காவில் மோடி | குவாட் கூட்டணி உருவானது ஏன்... சீனாவின் கோபமும், ஆபத்துகளும்!

பின்னர் இறுதியாகப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "குவாட் ஃபெல்லோஷிப் என்ற திட்டத்தை நான் இந்த மாநாட்டில் அறிமுகப்படுத்துகிறேன். இந்த திட்டத்தின் மூலம், வருடத்திற்கு குவாட் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 4 நாடுகளைச் சேர்ந்த 25 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி படிக்க வழிவகை செய்யப்படும். ஆண்டுக்கு 4 நாடுகளிலிருந்து 100 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இன்றைய சூழலில், ஒட்டுமொத்த உலகமும் சந்தித்து வரும் மிகப்பெரிய சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த மாநாட்டில் 4 ஜனநாயக நாடுகள் ஒன்று கூடியிருக்கிறோம். குவாட் நாடுகள் கூட்டாக இருந்து சர்வதேச பிரச்னைகள் முதல் பருவநிலை மாற்றம், கொரோனா என அனைத்து விஷயங்களிலும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். அதிலும் குறிப்பாக, நேர்மறை கொள்கைகளை நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும்" என்று குவாட் நாடுகளை வலியுறுத்தினார்.

குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை ஐ.நா சபையின் பொது கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு