Published:Updated:

உக்ரைன் போர்: போலந்தில் விழுந்த ரஷ்ய ஏவுகணை... 2 பேர் உயிரிழப்பு... நீடிக்கும் பதற்றம்!

போலந்தில் ரஷ்ய ஏவுகணை ( ட்விட்டர் )

ரஷ்ய ஏவுகணை ஒன்று போலந்து நாட்டின் மீது விழுந்ததில் இரண்டு நபர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உக்ரைன் போர்: போலந்தில் விழுந்த ரஷ்ய ஏவுகணை... 2 பேர் உயிரிழப்பு... நீடிக்கும் பதற்றம்!

ரஷ்ய ஏவுகணை ஒன்று போலந்து நாட்டின் மீது விழுந்ததில் இரண்டு நபர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
போலந்தில் ரஷ்ய ஏவுகணை ( ட்விட்டர் )

ரஷ்யா- உக்ரைன் போர் நீடித்துவரும் நிலையில், ரஷ்யா உக்ரைன்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திவருகிறது. இந்த நிலையில், உக்ரைன் எல்லையிலுள்ள போலந்தின் லுபெல்ஸ்கி மாகாணத்தில் இரண்டு ஏவுகணைகள் விழுந்திருப்பதாக போலந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதற்கிடையே, உக்ரைன் - போலந்து எல்லை மண்டலத்தை குறிவைத்து ரஷ்ய ராணுவம் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மறுத்திருந்தது.

இந்த நிலையில்தான், ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று போலந்தில் விழுந்து இரண்டு நபர்கள் பலியானதாக போலந்து குற்றம்சாட்டியிருக்கிறது. மேலும், ரஷ்யத் தூதருக்கு போலந்து வெளியுறவு அமைச்சர் சம்மன் அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.

போலந்தில் ரஷ்ய ஏவுகணை
போலந்தில் ரஷ்ய ஏவுகணை
ட்விட்டர்

இது தொடர்பாக போலந்து வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் லுகாஸ் ஜசினா வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில், ``நவம்பர் 15, 2022 உக்ரைனின் முழுப் பகுதியிலும், ரஷ்யக் கூட்டமைப்பின் ஆயுதப் படைகளால் அதன் முக்கியமான உள்கட்டமைப்பு மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிற்பகல் 3:40 மணியளவில், போலந்தின் லுபெல்ஸ்கி மாகாணத்தின் ஹ்ரூபிஸ்ஸோ மாவட்டத்திலுள்ள ப்ரெஸ்வோடோவ் கிராமத்தில் ரஷ்யா தயாரித்த ஏவுகணை விழுந்திருக்கிறது. இதன் விளைவாக போலந்து நாட்டைச் சேர்ந்த இருவர் இறந்துவிட்டார்கள். எனவே, இது தொடர்பாக ரஷ்யா விளக்கமளிக்க வேண்டும்" எனக் குறிப்பிடபட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் துடா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏவுகணை விபத்து தொடர்பாக போலந்து நாடு நடத்தும் விசாரணைக்கு அமெரிக்கா முழு ஆதரவு தரும் என பைடன் உறுதியளித்தார். ரஷ்ய ஏவுகணைகள் போலந்தைத் தாக்கியதாகச் செய்தி வெளியான நிலையில், நேட்டோ அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

போலந்து
போலந்து

உக்ரைனைத் தாண்டி, போலந்தில் தாக்குதல் நடைபெற்றிருப்பது உலக நாடுகளை அதிரவைத்திருக்கிறது. காரணம், பல மாதங்களாக நடைபெறும் யுத்தத்தில், உக்ரைனுக்கு உலக நாடுகள் உதவினாலும், நேரடியாகப் போரில் களம் காணவில்லை. தற்போது போலந்து நாட்டில் ஏவுகணை வீசப்பட்டிருப்பது இந்த யுத்தத்தில் மூன்றாவது நாட்டை இணைக்கும்படி ஆகிவிட்டது. எனினும், உடனடியாகப் பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.