Election bannerElection banner
Published:Updated:

`உய்குர் மக்களை அழிக்க சீனா திட்டம்; இனப்படுகொலை!’- மைக் பாம்பியோ விமர்சனம்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ( Andrew Harnik )

`உய்குர் இன மக்கள் மற்றும் ஜின்ஜியாங்கிலுள்ள பிற மதச் சிறுபான்மை குழுக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடைபெற்றுவருகிறது’ - மைக் பாம்பியோ.

சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்தில், முஸ்லிம்கள் மற்றும் இன சிறுபான்மையினர் மீதான சீனாவின் கொள்கைகள் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் என்றும், இனப் படுகொலை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டியிருக்கிறார்.

சீனாவின் வடக்குப் பகுதியிலுள்ள ஜின்ஜியாங் மாகாணம் - ரஷ்யா, மங்கோலியா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. அங்கு வசிக்கும் உய்குர் இன முஸ்லிம் மக்களை, காணாமல்போகச் செய்ய அந்நாட்டு அரசு முயன்றுவருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்துவருகிறது. இந்தநிலையில், உய்குர் இன மக்களை, சீனமயமாக்க ஆவணப்படுத்தப்பட்ட முகாம், சிறைகளை சீனா ரகசியமாக வைத்திருப்பதாக அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் கிழக்கு துர்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கம் கூறியிருந்தது.

சமீபத்தில், செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில், புனிதத் தலங்கள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் தன்னார்வ புள்ளியியல் நிறுவனமான ஏ.எஸ்.பி.ஐ (ASPI), ``சீனாவின் வடமேற்கு பகுதிகளிலிருந்த 16,000 மசூதிகளைக் கடந்த மூன்று ஆண்டுகளில் சீன அதிகாரிகள் இடித்திருக்கிறார்கள்" என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்தநிலையில், அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் பதவியேற்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சீனாவின் கொள்கைகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய மைக் பாம்பியோ,``தற்போது கிடைத்துள்ள தரவுகளைவைத்து கவனமாக ஆராய்ந்த பின்னர், மார்ச் 2017-ம் ஆண்டு முதல், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ், உய்குர் முஸ்லிம்களுக்கு மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு நான் வந்தேன். உய்குர் இன மக்கள், ஜின்ஜியாங்கிலுள்ள பிற மத சிறுபான்மை மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடைபெற்றுவருகிறது. சீன அரசு, உய்குர் முஸ்லிம்களை அழிக்கத் திட்டமிட்டு முயன்றுவருவதைப் பார்க்க முடிகிறது. காணாமல்போன குடும்பங்களைப் பற்றி உலகுக்குச் சொல்ல ஒரு தளத்தை உய்குர் பெண்களுக்கு வழங்கியிருக்கிறது அமெரிக்கா.

மைக் பாம்பியோ
மைக் பாம்பியோ
Andrew Harnik

உய்குர் மக்களிடையே பிறப்புக் கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியே மைக் பாம்பியோ `இனப் படுகொலை’ என்ற வாதத்தை முன்வைத்திருக்கிறார். ஐந்து நாள்களுக்கு முன்னர், ஜின்ஜியாங்கிலிருந்து பருத்தி மற்றும் தக்காளி இறக்குமதி செய்வதை நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

ஆட்சி முடிவுக்கு வரும் நேரத்தில், சீனாவுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதல், ட்ரம்ப் நிர்வாகம் சீன அரசுக்கு பல்வேறு விவகாரங்களில் அழுத்தம் கொடுத்துவருகிறது. தைவான், திபெத், ஹாங்காங் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் சீன நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சீனா மறுத்திருக்கிறது. ஜின்ஜியாங் பகுதியில் எடுத்துவரும் நடவடிக்கைகள், அதன் கொள்கைகள் யாவும் பிராந்தியத்தில் பொருளாதார, சமூகரீதியான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் தீவிரவாதத்தை முடக்குவதற்காக மட்டுமே என்று சீனா கூறியிருக்கிறது.

பொதுவாக, ட்ரம்ப் நிர்வாகக் கொள்கைகளை விமர்சிக்கும் மனித உரிமைகள் குழுக்கள், இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளன.

பாம்பியோ கருத்து குறித்துப் பேசிய அகதிகளுக்கான சர்வதேச அமைப்பின் (Refugees International) தலைவர் எரிக் ஸ்வார்ட்ஸ், ``ஜின்ஜியாங்கில் நடந்த இனப்படுகொலை குற்றத்துக்காக, சர்வதேச விசாரணை மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கடந்த ஆகஸ்ட் 2017-ம் ஆண்டு தொடங்கி ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான கொடூரமான தாக்குதல்களும் இனப்படுகொலைதான் என்பதை பாம்பியோ மறுத்துவிட்டார்" என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு