Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `அகதிப் பொங்கல்' | பகுதி - 20

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

உண்மையைச் சொல்லப்போனால், முகாமிலிருக்கிற நீண்டகால அகதிகளுக்கு இந்த அக்ரிவிட்டிகளில் பெரிய ஈடுபாடில்லை. அவர்கள் கூடிய அளவு ஜிம்மில் பொழுதைக் கழிப்பார்கள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `அகதிப் பொங்கல்' | பகுதி - 20

உண்மையைச் சொல்லப்போனால், முகாமிலிருக்கிற நீண்டகால அகதிகளுக்கு இந்த அக்ரிவிட்டிகளில் பெரிய ஈடுபாடில்லை. அவர்கள் கூடிய அளவு ஜிம்மில் பொழுதைக் கழிப்பார்கள்.

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

சிஸ்டர் மரீனா, மெல்போர்ன் முகாமிலுள்ள அகதிகளின் உள, உடல் வள மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வாரத்தில் மூன்று நாள்கள் வந்து போகும் பேரன்புமிக்க பெண் உத்தியோகத்தர்.

அவிக்காத நூடுல்ஸ் போன்ற வெள்ளை முடி, சிஸ்டர் பேசும்போது மேலும் கீழுமாகக் கும்மியடிக்கும். அதை வாரிக்கொண்டே அவர் பேசுவதை, சுருக்கமாகச் சிரிக்கிறார் என்ற வரையறைக்குள் அடக்கிவிடலாம். ஏனெனில், அவரின் பேச்சில், சொற்களைவிட சிரிப்பொலிகள்தான் அதிகமிருக்கும். கொலையையே செய்துவிட்டு எதிரில் ஒருவன் கத்தியோடு வந்து நின்று கதைத்தாலும், சிஸ்டர் அவனுடன் சிரித்தபடிதான் பேசுவார். கூரான மூக்கு. பழுத்த கனிகள்போல கன்னத்தின் நடுவில் மாத்திரம் சிவப்பு வண்ணம் தூக்கலாக இருக்கும். தோள்களுக்கும் தலைக்கும் இடையில் நீண்ட தூரம். அந்த தூரத்தை இணைக்கும் கழுத்து, அவரது உயரத்தை எப்போதும் எடுப்பாகவே காட்டும். சிஸ்டர் முகாமில் எங்கு அகதிகளோடு பேசிக்கொண்டிருந்தாலும் கண்டுபிடித்துவிடலாம். அப்படியொரு வளர்த்தி.

திங்கட்கிழமைகளில் ஒன்பது மணிக்கே வந்துவிடும் சிஸ்டர், முகாமிலுள்ள பெண்கள் அனைவரையும் மேற்குப் புற வேலியோரமாக் கூட்டிச் சென்று, தோட்ட வேலைகள் சொல்லிக்கொடுப்பார். மிளகாய், பூசணி, தக்காளி என்று மரக்கறி வகைகளை நீண்ட தூரத்துக்குப் பாத்தி கட்டி, சிறப்பான மண் நிரப்பி, அதில் விதைகளை நாட்டித் தோட்டம் செய்வதற்குப் பயிற்றுவிப்பார். அதற்கான சகல பொருள்களையும் குடிவரவு அமைச்சு அலுவலகத்துடன் பேசி, வாங்கி வைத்துக்கொண்டுதான், அகதிகளை இந்த வேலையில் ஈடுபடுத்துவார். அவர்களுடன் சேர்ந்து உடல் முழுவதும் மண் குளித்தபடி தானும் தோட்ட வேலை செய்வார்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான்கு சுவர்களுக்குள் குந்தியிருந்து எந்நேரமும் விசா நினைப்பாகவே வருந்திக்கொண்டிருக்கும் பெண்களுக்கு, திங்கட்கிழமைகளில் சிஸ்டரின் வருகை பெரும் தளர்வைத் தந்தது. ஸிஸ்டருடன் சேர்ந்து எல்லாப் பெண்களும் மிகுந்த சிரத்தையோடு தோட்டம் செய்வர். தோட்ட வேலைகளின்போது, மண்வெட்டி, கத்தி போன்ற உபகரணங்கள் பயன்படுத்தப்படவேண்டிய தேவையிருப்பதால், சிஸ்டருடன் நான்கு பாதுகாப்பு உத்தியோத்தர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பர்.

மனம் இளைப்பாறுவதற்கும் உடல் பயிற்சிக்கும் இந்தத் தோட்ட வேலை மருந்தளித்தது என்பதற்கு அப்பால், இப்படியான முகாம் நிர்வாகம் ஒழுங்கும் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களுக்குப் புள்ளி வழங்கும் ஒழுங்கொன்றும் நடைமுறையிலிருந்தது.

அதாவது,

முகாமில் இப்படியான நடவடிக்கைகளில் (அக்ரிவிட்டி) ஈடுபடுபவர்களுக்கு, ஒவ்வோர் அக்ரிவிட்டிக்கும், தலா பத்துப் புள்ளிகள் வழங்கப்படும்

ஒவ்வோர் அகதியும் அதிகபட்சம் நூறு புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஆகவே, முகாமிலுள்ள அனைத்து அகதிகளும் அக்ரிவிட்டிகளில் மனமுவந்து பங்குபற்றுவார்கள், மரக்கறிகளோடு சேர்ந்து புள்ளிகளையும் அறுவடை செய்வார்கள்.

இந்தப் புள்ளிகளைவைத்து, முகாமிலுள்ள சிறிய கடையில், அகதிகள் தமக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். அகதிகளுக்கான அடிப்படைத் தேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் முகாமில் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆனால், மேலதிகமாக சில சிறப்பான பொருள்கள் தேவைப்படுபவர்கள், முகாமில் சம்பாதிக்கும் இந்தப் புள்ளிகளைப் பயன்படுத்தி, பிரார்த்தனை அறைக்குப் பக்கத்தில் புதன்கிழமைகளில் மாத்திரம் திறக்கும் சிறு கடையில் அந்தப் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.

உதாரணமாக, முகாமிலுள்ள அகதிகள் அனைவருக்கும் குளிப்பதற்கு சோப் வழங்கப்பட்டாலும், சிலருக்கும் சில குறிப்பிட்ட பிராண்ட் சோப் தேவையென்றால், அதை இந்தக் கடையில் வாங்கலாம். அதுபோல, நூடுல்ஸ் பாக்கெட், சவரம் செய்யும் இயந்திரம், சொக்லேட்டுக்கள் என்று ஏகப்பட்ட எடுப்பான பொருள்களை, அகதிகள் தாங்களே முகாமில் சம்பாதித்து வாங்குவதற்கு, இந்தக் கடை பெரும் வாய்ப்பாக அமைந்திருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குடும்பத்தின் தேவைகளை உய்த்துணர்ந்து நிறைவேற்றுவதில், மேலதிகச் சிரத்தையோடு செயல்படுகின்ற பெண்கள், இதைக் கருத்தில்கொண்டு சிஸ்டர் வழிநடத்துகின்ற அனைத்து, அக்ரிவிட்டிகளிலும் பங்கெடுப்பர். தவறாமல் தங்களது பெயர்களைப் பதிவுசெய்வர்.

புள்ளிகளை அறுவடை செய்து குடும்பத்துக்குப் பொருள்களை வாங்கக்கூடிய இலகுவான முறையைப் பயன்படுத்துவதில், அக்கறையோடு செயல்படுவார்.

இந்த முகாமில் அவதானித்தவரை, பெண்கள்தான் இடத்துக்கு ஏற்றவாறு தங்களைத் துரிதமாக மாற்றிக்கொள்ளக்கூடியவர்களாகக் காணப்பட்டார்கள். குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்களாகத் தங்களை உருமாற்றியிருந்தார்கள். விசா விடயமோ, வேறு சிக்கல்களோ எதுவென்றாலும், அவற்றை உணர்வுபூர்வமாக அணுகாமல், திட்டமிட்டுக் காரியமாற்றும் சமயோசிதம் நிறைந்தவர்களாகச் செயல்பட்டார்கள்.

பெண்களுக்கான எந்தக் கட்டுப்பாடும் இங்கிருக்கிவில்லை என்பது அவர்களுக்குக் கூடுதல் சுதந்திரத்தைக் கொடுத்தது.

அல்பா கம்பவுண்டில் வந்து ஆண் அகதிகளிடம் சிகரெட் வாங்கிப் புகைக்கக் கற்றுக்கொண்ட சில இரான், ஆப்கன் அகதிப் பெண்கள், தங்களுக்கு இதுவரை காலமும் விதிக்கப்பட்டுவந்த தடைகளை உடைத்துவிட்ட உணர்வில் திளைத்தார்கள். இவ்வளவு காலமும், தாங்கள் உலகின் இருண்ட மூலையில் வாழ்ந்துவந்த களைப்பிலிருந்து வெளியில் வந்து முகாமில் ஆசுவாசம் கொண்டிருந்தார்கள்.

திங்கள் காலைகளில் தோட்ட வேலைகள் ஓரளவுக்கு முடிந்து, நேரம் மதியத்தை முட்டுகின்றபோது, சிஸ்டர் எல்லோரையும் குளித்துவிட்டு உணவு மண்டபத்துக்கு வரச்சொல்வார்.

மதியச் சாப்பாடு முடிந்த பிறகு, தையல் வேலை செய்கின்ற இன்னொரு அக்ரிவிட்டிக்கு அனைத்துப் பெண்களையும் கைவினை மண்டபத்து அழைத்துப்போவார். ஏற்கெனவே, கொள்முதல் செய்த வண்ண வண்ண நூல் பந்துகளுடன் வேலைகள் ஆரம்பமாகும். குல்லாக்கள், தொப்பிகள், வண்ணச் சால்வைகள், கைக்குட்டைகள் போன்றவற்றைச் செய்வதற்குச் சொல்லிக் கொடுப்பார்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

பெண்களுக்கு இது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்காக அமைந்தது. கூடவே, புள்ளிகளைச் சம்பாதிப்பதற்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பம். மதிய உணவின் களைப்புத் தெரியாமலேயே மாலைவரை, அங்கு சிஸ்டரைச் சூழ்ந்திருந்த தையல் வேலைகளில் லயித்தனர்.

பெண்களுக்கு திங்கட்கிழமைகளில் இந்த அக்ரிவிட்டிகளைப் பொறுப்பெடுத்துச் செய்கின்ற சிஸ்டர் மரீனா, புதன்கிழமைகளில் ஆண்களுக்கான அக்ரிவிட்டிகளை நடைமுறைப்படுத்துவார்.

ஆண்களுக்குச் சற்றுக் கடினமாக தோட்ட வேலைகளைச் செய்வதற்கான பொருள்களை வாங்கி, அதை நெறிப்படுத்துவார்.

பெண்களின் தோட்டவேலைகளுக்குத் தேவையான மண்ணை, வேறு இடத்திலிருந்து அள்ளிவருவது போன்ற பாரமான வேலைகளை அவர் அருகில் நின்று ஒழுங்கு செய்வார்.

உண்மையைச் சொல்லப்போனால், முகாமிலிருக்கிற நீண்டகால அகதிகளுக்கு இந்த அக்ரிவிட்டிகளில் பெரிய ஈடுபாடில்லை. அவர்கள் கூடிய அளவு ஜிம்மில் பொழுதைக் கழிப்பார்கள். பிறகு, அறையில் படம் பார்ப்பது, தூக்கம் என்று நாள் கழிந்துவிடும். மாலையில் கரப்பந்து அல்லது உதைபந்து விளையாடுவார்கள். ஏனைய அகதிகள் வேலை செய்துதான் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றிருந்த தேவை, நீண்டகால அதிகளுக்கு இருக்கவில்லை. ஏனெனில்,

நீண்டகால அகதிகள் என்ற அடிப்படையில், அவர்களுக்கு வாரா வாரம் நூறு புள்ளிகளை வழங்கும் சலுகையை முகாம் நிர்வாகம் வழங்கியிருந்தது.

ஆக, அவர்கள் அக்ரிவிட்டிகளில் சென்று மூச்சுவாங்குவதற்கான தேவையிருக்கவில்லை. விரும்பினால் போகலாம். அவ்வளவுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தைப்பொங்கல் பண்டிகை தொடர்பாக ஏற்கெனவே அறிந்திருந்த சிஸ்டர் மரீனா, அதைச் சிறப்பாக ஏற்பாடு செய்வதற்கு, குடிவரவு அமைச்சு அலுவலகத்திடம் பேசியிருந்தார். பொங்கலுக்கான பொருள்களை வாங்குவதற்கு அனுமதி கிடைத்திருந்தது. முகாமின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவருடன் சென்று, மெல்போர்னிலுள்ள தமிழ்க் கடையொன்றில் பொங்கலுக்கான பொருள்கள் அனைத்தையும் கொள்முதல் செய்த சிஸ்டர் மரீனா,

அகதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காகத் தனது திட்டத்தை ரகசியமாக வைத்திருந்தார்.

தமிழ் உத்தியோகத்தர் என்ற முறையில் என்னுடன் இது குறித்துப் பேசிய சிஸ்டர் மரீனா, பொங்கல் செய்வதற்குச் சரியான ஓர் ஆள் தேவை என்றார். பொங்கல் தினத்தன்று குடிவரவு அமைச்சின் அதிகாரிகளையும் அழைத்து, அகதிகளோடு சேர்ந்திருந்து பொங்கல் சாப்பிடுவதற்கு ஒழுங்கு செய்ய வேண்டும். அதுவொரு சுமுகமான உணர்வை முகாமில் ஏற்படுத்தும். ஆளுக்காள் மன அழுத்தம்கொண்டவர்களாகத் திரிகின்ற அகதிகளுக்கு, இப்படியான பாரம்பர்ய நிகழ்வுகள், அவர்களை இயல்பு வாழ்வுக்குள் சற்றுத் தணித்துக்கொள்ளும் என்று சிஸ்டர் என்னிடம் விளக்கம் சொன்னார்.

எனக்குத் தெரிந்தவரை, முகாமில் நீதனைப்போல ஒரு சமையல் கலைஞன், சமையல் மண்டபத்தில்கூட இல்லை. மனது இறுக்கமான நேரங்களில், முகாமின் சமையல் மண்டபத்தில் போய் வேலை செய்யும்படி, நீதனிடம் நான் பல தடவை எடுத்துச் சொன்னபோதும், அவன் அதில் பெரிய அளவில் அக்கறை காண்பிக்கவில்லை.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

பொங்கலுக்கு நீதன்தான் சரியான ஆள் என்று பரிந்துரை செய்ததும், சிஸ்டர் முகமெல்லாம் மத்தப்பாகப் பூரித்தார். நீதனிடம் சென்று ரகசியமாகப் பேசப்போவதாகச் சொன்னார். ஒரு நாள், அல்பா கம்பவுண்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த நீதனை அழைத்துச் சென்று பொங்கல் திட்டத்தைச் சொன்னார். நீதனும் புதிய அனுபவமாக உணர்ந்தான். சிஸ்டருடன் பேசிக்கொண்டிருந்தபோதே என்னைப் பார்த்து, ``உங்களுக்கும் இது தெரியுமா” – என்ற தோரணையில் தலையை அசைத்தான். அவன் அப்படிக் கேட்டது ``இது உங்கள் வேலையா” – என்ற மாதிரி எனக்குப் புரிந்தது.

பொங்கல் தினத்துக்கு முதல் நாளிரவு, முகாமின் சகல அறைகளுக்கும் உத்தியோகத்தர்கள் அறிவித்தல் பிரசுரம் ஒன்றை வழங்கினார்கள். அடுத்த நாள், அல்பா கம்பவுண்டுக்கு முன்னாலுள்ள உதை பந்தாட்டத் திடலில் பொங்கல் விழா நடைபெறப்போவதாகவும் காலையிலேயே - சூரிய உதயத்துக்கு முன்னதாக – அனைவரையும் வந்துவிடும்படியும் அழைப்பு விடுக்கப்பட்டது.

அடுத்த நாள், எல்லா நாட்டு அகதிகளாலும் உதை பந்தாட்டக் களம் நிறைந்தது.

நீதன், முதல் நாளே கோலம் போட்டு, கரும்பு நாட்டி, பூர்வாங்க பொங்கல் ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத்தான் உறங்கப்போயிருந்தான்.

காலையில் எழுந்து, புதுப்பானையில் மாவிலை கட்டி, அடுப்பில் வைத்தான். வடை, அவல் போன்றவை வெளியிலிருந்து வாங்கி வரப்பட்டிருந்தன. முகாம் பெண்கள் சிலர், நீதனுக்கு உதவியாக, அடுப்புக்கு அருகில் வந்து வெட்கப்பட்டவாறு நின்றனர். நீதனின் செய்நேர்த்திமிக்க பொங்கல்படிமுறைகளை பெண்கள் மாத்திரமல்ல, முகாம் முழுவதும் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது.

ஏழரை மணிக்கு, கிழக்கு வானில் சூரியன் எழுந்தபோது, அலாரம் வைத்ததுபோல, பால் பொங்கிச் சரிந்தது. கடவுள் உட்பட ஒவ்வொரு நாட்டுக்காரரையும் அரிசி போடுவதற்கு அழைத்தான் நீதன். பார்த்துக்கொண்டு நின்ற முகாம் உத்தியோகத்தர்களுக்கு நெகிழ்ச்சியாயிருந்தது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

பொங்கல் தயாராகி திரண்டு வந்தபோது, குடிவரவு அமைச்சின் அலுவலகத்திலிருந்து நான்கு அதிகாரிகள் அங்கு ஆஜரானார்கள். அகதிகளுக்கு அது வித்தியாசமானதொரு சூழலாக அமைந்தது. முகாமில் ஒவ்வொரு நாளும் எல்லோருக்குள்ளேயும் திரண்டிருக்கின்ற அழுத்தம் அகன்று, தமக்காக யாரோ ஒருவர் இங்கு இருக்கிறார் என்ற சகோதரத்துவ நிலை நிலவியது.

உண்மையில், இந்தப் பொங்கலை முற்றிலும் எதிர்பாராத அகதிகள் அனைவரும் சிஸ்டர் மரீனாவையும் நீதனையும் கனிவோடு பார்த்தபடி நின்றார்கள்.

பொங்கல் தயாரானதும், அதை வரிசையில் நின்று வாங்கி உண்ட அனைவரும், அந்தக் கணம் தங்கள் சுற்றத்தின் நினைவில், சொந்த முற்றத்தின் உணர்வில் கலங்கினார்கள். இந்த அகதி நிலத்தில் நித்தமும் அநாதையாக உணர்ந்தவர்கள், திடீரென்று தாங்கள் சாய்ந்துகொள்ள ஒரு விருட்சத்தைக் கண்டதுபோது, பாரம் தணிந்து உணர்ந்தார்கள்.

படகில் வரும்போது, மறக்காமல் தனது திருமணநாள் வேட்டியைக் கொண்டுவந்த மகாலிங்கம் என்ற அகதி, அன்று பொங்கலுக்கு அந்த வேட்டியை அணிந்து வந்திருந்தார். அவர் நீதனின் கைகளால் பொங்கல் வாங்கிச் சிறிது நேரத்தில், வீட்டு நினைவு வர, அல்பா கம்பவுண்ட் வாசற்படியில் குந்தியிருந்து குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கிவிட்டார். அவர் அருகில் சென்ற கடவுள், தேற்றுவதற்கு மொழி இல்லாவிட்டாலும், தனது உணர்வினால் அள்ளி அணைத்து, மகாலிங்கத்தைத் தனது தோளில் போட்டுக்கொண்டான். அந்த அரவணைப்பு மகாலிங்கத்துக்கு மேலும் அழுகையைக் கூட்டியது.

அந்தக் காட்சி அங்கு நின்றுகொண்டிருந்த எல்லா அகதிகளின் நினைவுகளையும் கண்களில் திரவமாக்கியது.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism