கமலா ஹாரிஸ், ப்ரமிளா ஜெயபால்... அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி பெண்களின் ஆளுமை!

இன்று உலகின் தலைப்புச் செய்தியாக இருக்கும் அமெரிக்கத் தேர்தலில், கவனம் ஈர்த்த இந்திய வம்சாவளி பெண்கள் பற்றியும், மற்றும் `முதல் திருநங்கை' கௌரவம் பெற்றுள்ளவர் பற்றிய அறிமுகத்தையும் பார்க்கலாம்.
உலகமே உற்று நோக்கிக் காத்திருந்த அமெரிக்கத் தேர்தல் முடிவுகள், சில பெண்களை சிறப்புச் செய்தி ஆக்கியிருக்கின்றன. இந்தியர்களுக்குக் கூடுதல் சந்தோஷமாக, அதில் இரண்டு இந்தியப் பெண்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்கள் இருவருமே சென்னைப் பெண்கள் என்பது, கூடுதல் சிறப்பு.
மேலும், அமெரிக்காவின் செனட்டர் பதவிக்கு முதன்முதலாக ஒரு திருநங்கை தேர்வாகியிருக்கிறார். இன்று உலகின் தலைப்புச் செய்தியாக இருக்கும் அமெரிக்கத் தேர்தலில், கவனம் ஈர்த்த இந்திய வம்சாவளி பெண்கள் பற்றியும், மற்றும் `முதல் திருநங்கை' கௌரவம் பெற்றுள்ளவர் பற்றிய அறிமுகத்தையும் பார்க்கலாம்.
ட்ரம்ப்பின் கடும் எதிர்ப்பை சந்திக்கும் கமலா ஹாரிஸ்!
அமெரிக்காவில் முக்கியக் கட்சிகளாக ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் உள்ளன. இவற்றில், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ட்ரம்ப். ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன். இந்தக் கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

56 வயது சீனியர் அரசியல்வாதி கமலா ஹாரிஸ். இவரின் தாய் இந்தியாவைச் சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். தாய் ஷியாமளா சென்னைவாசி என்றாலும், இவர்கள் குடும்பத்தின் பூர்விகம் மன்னார்குடி அருகில் உள்ள துளசேந்திரபுரம். புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலும் சட்டம் பயின்ற கமலா ஹாரிஸ், 2003-ம் ஆண்டு சான்ஃபிரான்ஸிஸ்கோவில் அட்டர்னி ஜெனரலாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது ஜனநாயக் கட்சியின் நட்சத்திர வேட்பாளராக வளர்ந்து நிற்கிறார். இவர் 2014-ம் ஆண்டு ஆமெரிக்க வழக்கறிஞரான டக்ளஸை திருமணம் செய்துகொண்டார். அவரும் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்.
கறுப்பினப் பெண்ணாக அறியப்படும் கமலா, அமெரிக்க வரலாற்றின் மூன்றாவது பெண் துணை அதிபர் வேட்பாளர்; இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் துணை அதிபர் வேட்பாளர். துணை அதிபர் பதவிக்கு இதற்கு முன்பு போட்டியிட்ட பெண்கள் இருவருமே வெற்றிபெறவில்லை என்பதால், இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால் கமலா ஹாரிஸ்தான் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர்.
இரண்டு நாள்களுக்கு முன்னர் ட்ரம்ப், ``கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால் அது அமெரிக்காவுக்கும், பெண்களுக்கும் மோசமான விஷயமாக இருக்கும்" என்று கமலாவை தாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது முறையாக அவை பிரதிநிதியான ப்ரமிளா ஜெயபால்!
55 வயதான ப்ரமிளா ஜெயபால், ஜனநாயகக் கட்சி சார்பாக 2016-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளிப் பெண் அவை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சென்னையில் பிறந்த ப்ரமிளா, வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்து, நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பயின்றவர். இந்த வருட தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கிரேக் கெல்லரை அபாரமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம் மூன்றாவது முறையாக அவை பிரதிநிதியாக பதவியேற்கவுள்ளார்.
தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு ப்ரமிளா தன் சமூக வலைதளத்தில், 'தவிர்க்கமுடியாத, தேர்தலுக்கு முந்தைய இரவு ஆக்டிவிட்டி: இதமான உணவை சமைப்போம். அது, பனீர் டிக்கா. கமலா ஹாரிஸ் தன் இன்ஸ்டாவில் தனக்கு விருப்பமான உணவு டிக்கா என்று தெரிவித்திருந்தார். இது அவர் பெறப்போகும் வெற்றிக்காக...' என்று தான் செய்த பனீர் டிக்கா புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அமெரிக்க அரசியலில் ஆளுமைகளாகக் கலக்கிக்கொண்டிருக்கும் இந்த சென்னைப் பெண்களின் அன்பும் குறும்பும் ரசிக்கப்பட்டது. கூடவே, கிரேவி பதத்தில் இருந்த அந்த உணவை, 'என்னது, இது பனீர் டிக்காவா..?!' என்று கேட்டு ஜாலி மீம்கள் வரிசைகட்ட ஆரம்பிக்க, பனீர் டிக்கா ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.

அமெரிக்க வரலாற்றின் முதல் திருநங்கை செனட் உறுப்பினர் சாரா!
30 வயதான சாரா மெக்ப்ரைடு, டெலொவேர் மாகாணத்தில் வெற்றிபெற்று செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரும் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்தவரே. குடியரசுக் கட்சியின் ஸ்டீவ் வாஷிங்டனை தோற்கடித்ததன் மூலம் அமெரிக்காவின் முதல் திருநங்கை செனட் உறுப்பினராகி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
அமெரிக்க பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த சாரா, எல்.ஜி.பி.டி (LGBT) இயக்கத்தின் வழக்கறிஞர்கள் குழுவில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். ஒபாமா அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையில் பணிபுரிந்தவர்.

இந்தத் தேர்தலில் வெற்றி முகம் காட்டியிருக்கும் இப்பெண்களைக் கொண்டாடினாலும், பொதுவாக அமெரிக்க அரசியலை பொறுத்தவரை பெண்களுக்கான முக்கியத்துவம் மிக மிகக் குறைவு என்பதே உண்மை. அதிகாரத்தில் ஆண்களே ஓங்கியிருக்கும் அமெரிக்க அரசியல் சபையில், இம்முறை வெற்றி பெற்றுள்ள பெண்கள் கைப்பற்றியுள்ள இடங்கள், மாற்றத்துக்காக சிறு பொறியாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பைடனின் வெற்றி கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. புதிய அரசு பெண்களுக்கான அரசாக அமையட்டும்.