Published:Updated:

அமெரிக்கா: `பொறுப்பற்ற அதிபருக்கு ஓர் உதாரணம்..!' - ட்ரம்ப்பைக் கடுமையாக விமர்சித்த ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் | ட்ரம்ப் - ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் தேர்தல் | ட்ரம்ப் - ஜோ பைடன்

`ட்ரம்ப் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். அவரது செயல்கள் அனைத்தும் மூர்க்கத்தனமாக இருக்கின்றன’ என்கிறார் ஜோ பைடன்

``அமெரிக்க வரலாற்றில் பொறுப்பற்ற ஜனாதிபதிகளில் ஒருவராக டொனால்ட் ட்ரம்ப் இருப்பார்" என்று அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெரும்பான்மையுடன் வெற்றி பெறறிருக்கும் நிலையில், தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துவருகிறார். அதிபர் தேர்தலில் மோசடி நடைபெற்றிருப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டிவருகிறார். இந்தக் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் பதற்றமான அரசியல் சூழலை உருவாக்கிவருகின்றன.

ஜோ பைடன்
ஜோ பைடன்

இந்தநிலையில், நேற்று குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஆளுநர்களுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜோ பைடன், ட்ரம்ப்பின் அசாதாரண நடவடிக்கைகள் பற்றிப் பேசினார், "ட்ரம்ப்பின் நம்ப முடியாத, பொறுப்பற்ற தன்மைக்கு அமெரிக்கர்களே சாட்சியாக இருக்கிறார்கள். இதன் விளைவாக, ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி நம்ப முடியாத அளவுக்கு தீங்கு விளைவிக்கும் செய்தி உலகின் பிற பகுதிகளுக்குப் பரவிவருகிறது" என்று ஜோ பைடன் கூறினார்.

அப்போது, டொனால்டு ட்ரம்ப் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துவருவதைப் பற்றி ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜோ பைடன், ``ட்ரம்ப் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். அவரது செயல்கள் அனைத்தும் மூர்க்கத்தனமாக இருக்கின்றன" என்றார்.

மேலும், ``ட்ரம்ப்பும், அவரது சட்டக்குழுவும் அதிபர் தேர்தல் முடிவுகளை முறியடிக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். மோசடி குறித்து ஆதாரமற்ற தகவல்களை முன்வைக்கின்றனர். ட்ரம்ப்பின் தற்போதைய செயல்களே, அவர் அமெரிக்க வரலாற்றில் கொஞ்சமும் பொறுப்பற்ற அதிபராக இருப்பதற்கு ஓர் உதாரணமாக இருக்கும்” என்றார்.

ட்ரம்ப் மற்றும் பைடன்
ட்ரம்ப் மற்றும் பைடன்

தனது நிர்வாகத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னேறிவருவதாகவும் கூறிய ஜோ பைடன், கருவூலத்துக்கான செயலாளரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். மேலும், அவரது இடைநிலைக்குழு ஜோ பைடனின் வெள்ளை மாளிகை ஊழியர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்திவருகிறது என்றார்.

இறுதியாக, ``கொரோனா தடுப்பூசி கிடைத்தவுடன், அதை விரைவாக விநியோகிக்கும் யோசனையில் இருக்கிறோம். எந்தவொரு சூழலிலும் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. நாங்கள் கொரோனா வைரஸுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறோம்" என்றார் ஜோ பைடன்.

அடுத்த கட்டுரைக்கு