Published:Updated:

`அதிபர் பதவி தனிநபருக்குச் சொந்தமல்ல..!’ - ட்ரம்ப் மீது மிச்சல் ஒபாமா காட்டம்

`2016-ல், ட்ரம்ப்பை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பது எனக்கு விருப்பமானதாக இல்லை. இருந்தாலும், ஏமாற்றத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, அவரை நானும் என் கணவரும் வரவேற்றோம்’ என்று கூறியிருக்கிறார் மிச்சல் ஒபாமா.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெரும்பான்மையுடன் வெற்றிபெறறிருக்கும் நிலையில், தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துவருகிறார். அதிபர் தேர்தலில் மோசடி நடைபெற்றிருப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டிவருகிறார். இந்தக் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் பதற்றமான, பிளவுபடுத்தும் அரசியல் சூழலை உருவாக்கியிருக்கின்றன.

ஜோ பைடன் வெற்றி பெற்றதற்கு உலகத் தலைவர்களும், குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில், ட்ரம்ப் ட்விட்டரில், `நான் தேர்தலில் வென்றுவிட்டேன்!’ என்று ட்வீட் செய்து, தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்திருந்தார். ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினரின் பல்வேறு ட்வீட்களை `சர்ச்சைக்குரியவை’ மற்றும் `தவறானவ’ என்று கூறி ட்விட்டர் நிர்வாகம் அடையாளப்படுத்திவருகிறது.

Trump | ட்ரம்ப்
Trump | ட்ரம்ப்
Alex Brandon / AP

இந்தநிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமா, கடந்த நவம்பர் 17-ம் தேதியன்று, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை விமர்சித்து பதிவிட்டிருக்கிறார்.

ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மிச்சல் ஒபாமா, ``அதிபர் பதவி எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. ட்ரம்ப் தலைமையிலான தற்போதைய நிர்வாகம், மாற்றத்தை அனுமதிக்க மறுப்பது சரியானதல்ல’’ என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்கா: `விரைவில் ட்ரம்ப் ஆட்சியின் இரண்டாம் அத்தியாயம்..!’ - மைக் பாம்பியோ சொல்வதென்ன?

மேலும், ``நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நான் இருந்த இடத்தை நினைத்துப் பார்க்கிறேன். முந்தைய தேர்தலில், இந்த ஆண்டு நாம் கண்டதைவிட மிக நெருக்கமான வித்தியாசத்தில் ஹிலாரி கிளின்டன் தோல்வியடைந்திருந்தார், அதிபராக டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். அது எங்களுக்கு வேதனையையும் ஏமாற்றத்தையும் அளித்தது. இருப்பினும், மக்கள் குரலுக்கு மதிப்பளிப்பதுதான் அதிபர் பதவியின் முக்கியப் பொறுப்பு. அதனால், எங்களுக்கு ஜார்ஜ் மற்றும் லாரா புஷ் செய்ததை ட்ரம்ப்புக்குச் செய்யும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினோம். தடையற்ற அதிகார மாற்றத்தைச் செயல்படுத்தினோம். அதுவே அமெரிக்க ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு.

மிச்சல் ஒபாமா
மிச்சல் ஒபாமா

ட்ரம்ப் அப்போது, எனது கணவர் ஒபாமா மீது இனவெறிப் பொய்களைப் பரப்பியிருந்தார். அந்தச் சமயம் என் குடும்பம் ஆபத்தில் இருந்தது. அதனால் ட்ரம்ப்பை மன்னிக்க மனம் ஒப்புக்கொள்ளவில்லை. நம் நாட்டுக்காக, எனது கோபத்தை ஒதுக்கிவைத்து அவரை வரவேற்றேன். நம் ஜனநாயகம் யாருடைய பிடிவாதத்தையும்விட மிகப்பெரியது. முடிவுகளை நாம் விரும்பாவிட்டாலும், அவற்றை மதிக்க வேண்டும். அதிபர் பதவி எந்தவொரு தனிநபருக்கோ, ஒரு கட்சிக்கோ சொந்தமானது அல்ல. மோசடி நடந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைவைத்து விளையாடுவது நாட்டின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் நல்லதல்ல" என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார் மிச்சல் ஒபாமா.

மிச்சல் ஒபாமாவின் இந்தப் பதிவு, சில மணி நேரங்களில் 3.5 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளுடன் வைரலானது. அந்தப் பதிவுக்கு ,`அழகாகச் சொன்னீர்கள்’, `இதுதான் நாம் அனைவரும் கேட்க வேண்டியது’ போன்ற கருத்துகளைப் பதிவிட்டு, நெட்டிசன்கள் ட்ரம்ப்புக்கு எதிரப்பைப் பதிவு செய்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு