Published:Updated:

`14 மணி நேர விவாதம்; எதிராக 198; ஆதரவு 229!' - நிறைவேறியது அதிபர் ட்ரம்புக்கு எதிரான தீர்மானம்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராகப் பதவிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. செனட் சபையிலும் இவருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ட்ரம்ப்பின் பதவி பறிபோகும். 223 ஆண்டுக்கால அமெரிக்க வரலாற்றில் பதவிநீக்கத் தீர்மானத்தை எதிர்கொள்ளும் மூன்றாவது அதிபர் ட்ரம்ப்.

ஜோ பிடென்
ஜோ பிடென்

ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு!

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடெனும் போட்டியிடவுள்ளனர். அந்தத் தேர்தலில்தான் வெற்றி பெறுவதற்காக அதிபர் ட்ரம்ப், பிற நாடுகளின் உதவிகளைக் கோருவதாக விசில் ப்ளோவர் (whistleblower - ஒரு பொது அமைப்பில் நடக்கும் தவறு, குற்றங்களைச் சுட்டிக்காட்டி வெளிச்சத்துக்குக் கொண்டு வருபவர்) குற்றம்சாட்டியிருந்தார்.

உக்ரைன் நாட்டில் புரிஸ்மா ஹோல்டிங் (Burisma Holdings) என்ற இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனம் உள்ளது. 2014-ம் ஆண்டு ஜோ பிடென் துணை அதிபராக இருந்தபோது அவரின் மகன் ஹண்டர் பிடென், புரிஸ்மா நிறுவனத்தின் கட்டண வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்போது, இந்நிறுவனம் தொடர்பான முறைகேடு வழக்கை விசாரித்த அதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

உக்ரன் அதிபர் - ட்ரம்ப்
உக்ரன் அதிபர் - ட்ரம்ப்
AP

அதில் ஜோ பிடெனின் தலையீடு இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, ஜோ பிடென் மற்றும் அவரின் மகன் ஹண்டரைப் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கு (Volodymyr Zelensky) ட்ரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார் எனக் கூறப்பட்டது. மேலும், இந்தப் புகார் தொடர்பாக விசாரணையைத் தடை செய்ய ட்ரம்ப் முயற்சி செய்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

`நான் மட்டும் இல்லை என்றால்... மூன்றாம் உலகப்போர்தான்!’ -நேட்டோ மாநாட்டில் ட்ரம்ப்

அமெரிக்க அரசியல் நடைமுறை!

அமெரிக்காவைப் பொறுத்தவரை தேசத் துரோகம், ஊழல், அல்லது பிற பெரிய குற்றங்களில் ஈடுபட்டால் அதிபராக இருப்பவர் பதவியிலிருந்து நீக்கப்படுவார். இதுதான் அங்குள்ள அரசியல் நடைமுறை. அதிபர் பதவி நீக்கத்துக்கான முதல் குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்தப்படும். அது உறுதியானால் அடுத்தபடியாக பிரதிநிதிகள் சபையில் அதிபருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

அமெரிக்க நாடாளுமன்றம்
அமெரிக்க நாடாளுமன்றம்
AP

தற்போது செயல்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை பிரதிநிதிகள் சபையில் ஆளும் குடியரசு கட்சிக்கு 198 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 232 உறுப்பினர்களும் உள்ளனர். அதிபர் மீதான குற்றச்சாட்டுக்குப் பிரதிநிதிகள் சபையில் உள்ள இந்த உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். இங்கு அதிபருக்கு எதிராகப் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தால் அடுத்து அதே தீர்மானம் 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபைக்குக் கொண்டு செல்லப்படும். அங்கும் அதிபருக்கு எதிரான பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி விலக வேண்டும்.

ட்ரம்ப் மீதான வாக்கெடுப்பு!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்தச் செயல்களால் அரசியலமைப்புச் சட்டம் , தேசியப் பாதுகாப்பு மற்றும் தேர்தலுக்கான நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு அவர் ஆபத்து விளைவித்துவிட்டார் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில் ட்ரம்ப் மீது அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பதவிநீக்கத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இந்தத் தீர்மானம் தொடர்பான விவாதம் நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுமார் 14 மணி நேரம் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) நடந்துள்ளது.

சபாநாயகர் நான்சி
சபாநாயகர் நான்சி
AP

இறுதியாக அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி, ட்ரம்ப் மீதான பதவிநீக்கத் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பை அறிவித்தார். இதில் ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 229 உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக 198 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். இதனால் அமெரிக்கப் பிரதிநிகள் சபையில் ட்ரம்ப் மீதான பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்தத் தீர்மானம் செனட் சபைக்குச் செல்லவுள்ளது.

தற்போதுள்ள நிலவரப்படி அமெரிக்க செனட் சபையில் ஆளும் குடியரசு கட்சி சார்பில் 53 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் 47 உறுப்பினர்களும் உள்ளனர். இதனால் ட்ரம்புக்கு எதிரான தீர்மானம் செனட் சபையில் நிறைவேற வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள ட்ரம்ப், `அதிபர் மீது பதவிநீக்கத் தீர்மானம் கொண்டுவருவது நாட்டின் மீதான அவமதிப்பு' எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் நான்சிக்கு 6 பக்கக் கடிதத்தையும் எழுதியுள்ளார். அதிலும்,``இந்த நடைமுறை என் மீது நடத்தப்படும் திட்டமிட்ட சதி, பழிவாங்கல் நடவடிக்கை. இந்தக் குற்றச்சாட்டு மீதான விசாரணை தொடங்கப்பட்டதிலிருந்து என் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்தப் பதவி நீக்கத் தீர்மானம் எந்தச் சட்டத்தின் கீழும் அடங்காது. நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராகப் பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள விவகாரம் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு