இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, தலைநகர் கொழும்பில், ராஜபக்சே அரசுக்கு எதிராகத் தீவிரப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த நாட்டின் உண்மை நிலவரம் பற்றித் தெரிந்துகொள்ள நேரடியாக இலங்கைக்குச் சென்றிருந்தோம். அங்கு காலி முகத்திடல் என்றழைக்கப்படும் கால் ஃபேஸ் என்ற இடத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றுவருகிறது. போராட்டக் களத்துக்கு குடும்பத்தோடு வந்திருந்த சிலரிடமும் பேசினோம். ``எங்க பிள்ளைகள் படிப்பையே மறந்துட்டாங்க... இப்படியே போனா அவங்க எதிர்காலம் என்ன ஆகும்'னே தெரியலை'' என்பதைத்தான் பலரும் கவலையுடன் கூறினர்.
போராட்டக் களத்துக்கு இரண்டு பிள்ளைகள், கணவருடன் வந்திருந்த கவிதா, ``நாங்க இந்தியாவுக்கு அகதியா போயிரலாம்'னு இருந்தோம். எங்க காலம் முடிஞ்சுடுச்சு... நாங்க அங்க போய் முகாம்'ல ஓட்டிடலாம். ஆனா, பிள்ளைங்களோட எதிர்காலத்தை யோசிச்சுதான், இந்தியா போகிற எண்ணத்தை மாத்திக்கிட்டு, இங்கே போராட வந்துட்டோம்'' என்றார். மேலும் நம்மிடம் பேசிய சிலர், ``ஒரு வாரம் பள்ளிக்கூடம் வைக்குறாங்க... அடுத்த வாரம் லீவ் விட்டுறாங்க. இப்படியே போனா குழந்தைங்க படிப்பு என்ன ஆகுறது. எப்படி அவங்க பெரிய ஆளானதும் பொழப்பு நடத்துவாங்க. பெரிய பெரிய கனவுகளோடு இருந்தோம். அதையெல்லாம் இந்த ராஜபக்சே குடும்பமும்... அரசும் சுக்கு நூறாக்கிட்டாங்க'' என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பெற்றோர்கள் நம்மிடம் கூறியதை வைத்து, இலங்கையில் கல்வித்துறை எந்த அளவுக்குப் பாதிப்படைந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது. இது குறித்து `சிலோன் ஆசிரியர் சங்க'த்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினிடம் விரிவாகப் பேசினோம். ``கொரோனா காரணமாக ஏற்கெனவே இலங்கையிலுள்ள பிள்ளைகளின் படிப்பு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. மாணவர்களுக்கான வகுப்புகளும், தேர்வுகளும் கொரோனாவால் காலதாமதமாகத்தான் நடந்துவந்தன. ஜனவரியிலேயே தொடங்க வேண்டிய மூன்றாம் பருவ வகுப்புகள், ஏப்ரலில்தான் தொடங்கின. கொரோனா ஊரடங்கு சமயத்தில் பிள்ளைகளுக்குப் பாடம் எடுப்பதற்காக எந்தவொரு திட்டத்தையும் இந்த ராஜபக்சே அரசு செய்துதரவில்லை. ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினார்கள்.
கொரோனாவைத் தொடர்ந்து, தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி மாணவர்களை வெகுவாக பாதித்திருக்கிறது. இங்கிருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் வேனில்தான் பள்ளிகளுக்கு வருவார்கள். முன்பு மாதத்துக்கு 4,000 ரூபாயாக (இலங்கை ரூபாய்) இருந்த வேன் கட்டணம், தற்போது 12,000 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. பெற்றோர்களால் எப்படி இவ்வளவு பணம் கட்டி பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்ப முடியும்?'' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``பேப்பர், பேனா, ரப்பர் எனக் கல்வி சார்ந்த அனைத்துப் பொருள்களும் வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்நிய செலாவணிக் கையிருப்பு இல்லாததால் அரசுக்கு இறக்குமதி செய்வதிலும் பிரச்னை இருக்கிறது. கிடைக்கும் பொருள்களும் விலை அதிகமாக இருப்பதால் பெற்றோர்கள் கஷ்டப்படுகிறார்கள்'' என்றவரிடம், `மாணவர்களின் எதிர்காலம் குறித்து அரசுக்கு எந்தக் கவலையும் இல்லையா?' என்று கேட்டோம்.
அதற்கு, ``ராஜபக்சே குடும்பம் தங்களை மட்டுமே காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறது. மாணவர்களைப் பற்றிய கவலை மட்டுமல்ல... மக்கள் இறந்துபோனால்கூட அவர்களுக்குக் கவலையில்லை. இது எதையுமே அவர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். ரம்புகணை என்ற இடத்தில் நடந்த போராட்டத்தில், இளைஞர் ஒருவரைச் சுட்டுக் கொன்றிருக்கிறது இந்த அரசு. தமிழ் மக்கள் எவ்வளவு பேரைப் படுகொலை செய்தது இந்த ராஜபக்சே அரசு என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் தங்களைத் தவிர யாரைப் பற்றியும் இந்த அரசுக்குக் கவலையில்லை'' என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
`பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா?' என்ற கேள்வியை ஜோசப் ஸ்டாலினிடம் முன்வைத்தோம். ``இலங்கையில் மொத்தம் 43 லட்சம் மாணவர்கள் இருக்கிறார்கள். 2,47,000 ஆசிரியர்கள் இருக்கிறோம். 10,154 பாடசாலைகள் இருக்கின்றன. இன்றைய தேதிக்கும் 100-ல் 80 மாணவர்கள் மட்டுமே கல்வி கற்க வருகிறார்கள். இந்த நிலை நீடித்தால், இந்த எண்ணிக்கை மேலும் குறையும்'' என்றார்.
தொடர்ந்து பகல் உணவுத் திட்டம் பற்றிப் பேசிய அவர், ``இலங்கையின் அரசுப் பள்ளிகளிலுள்ள 12 லட்சம் மாணவர்களுக்குப் பகல் உணவு வழங்கும் திட்டம் இருக்கிறது. அந்தத் திட்டத்தின்படி நாளொன்றுக்கு ஒரு மாணவருக்கு மதிய உணவு வழங்க 20 ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த விலையேற்றத்துக்குப் பிறகு, 20 ரூபாய்க்கு நிச்சயம் சாப்பாடு கொடுக்க முடியாது. அதற்காக இந்த அரசு என்ன செய்தது தெரியுமா? ஒரு முட்டையை நான்கு துண்டுகளாக்கி நான்கு மாணவர்களுக்குக் கொடுக்கச் சொல்லியிருக்கிறது. சாப்பாட்டையும் அப்படியே பிரித்துத்தான் கொடுக்கிறார்கள்'' என்றார் ஜோசப் ஸ்டாலின்.
ஆசிரியர்கள் சந்திக்கும் சிரமம் பற்றிக் கேட்டபோது, ``பெட்ரோல் விலையேற்றத்தால் பாடசாலைகளுக்கு வருவதே பெரும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. பேருந்துக் கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், சம்பளம் மட்டும் உயரவில்லை. வெகு தூரத்திலிருந்து வரும் ஆசிரியர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே, கல்வி அமைச்சகத்திடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தோம். `வெகு தூரத்திலிருந்து வரும் ஆசிரியர்கள், அவர்கள் வீட்டருகே இருக்கும் பாடசாலைகளில் வகுப்புகள் எடுக்க அனுமதிக்க வேண்டும்' என்பதுதான் அந்தக் கோரிக்கை. ஆனால், அதையும் இந்த அரசு நிராகரித்துவிட்டது'' என்றார் வருத்தமாக.
இலங்கையிலுள்ள பெற்றோர்கள் பலரும், ``உணவுக்குக்கூடக் கிடைப்பதை வைத்துச் சமாளித்துக் கொள்வோம். ஆனால், பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது. பிள்ளைகளின் எதிர்காலத்தோடு இந்த அரசு விளையாடுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது'' என்கிறார்கள்.