Published:Updated:

`கொரோனா பரவல்... தீவிரமடையும் போராட்டம்... கவலையில் ஆட்சியாளர்கள்!’ - சிக்கித் தவிக்கும் அமெரிக்கா

போராட்டம்
போராட்டம்

``எங்களுக்கு கறுப்பினத்தைச் சேர்ந்த மகன்கள், சகோதரர்கள், நண்பர்கள் உள்ளனர். அவர்கள் இறப்பதை நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.”

கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமைதியான முறையில் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் வன்முறைகளும் வெடித்தன. நாடு முழுவதும் பல இடங்களிலும் நடைபெறும் போராட்டத்தில் பங்கெடுத்த சுமார் 4,000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கறுப்பின மக்கள் மீது நடத்தப்படும் தொடர் வன்முறைகளுக்கு எதிராக இரவும் பகலுமாக சுமார் ஆறு நாள்களாக ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவின் அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் எனப் பலரும் போராட்டம் தொடர்ந்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரமான அபாய கட்டத்தை எட்டும் எனத் தங்களது அச்சத்தைத் தெரிவித்துள்ளனர்.

போராட்டம்
போராட்டம்

போராட்டங்களில் பங்கெடுத்துள்ள மக்களிடம் அந்நாட்டு அரசியல் தலைவர்கள் பலரும், தங்களது உரிமைகளுக்காகப் போராட வேண்டியது அவசியம். எனினும், தங்களை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசங்களை அணிந்து, தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில், ஏற்கெனவே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அந்நாட்டில், வெள்ளையின மக்களை விடவும் கறுப்பின மக்கள் இந்த கொரோனா வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை செய்யப்பட்ட சம்பவம், பல ஆண்டுகளாகக் காவலர்கள் கறுப்பின மக்கள் மீது நிகழ்த்தும் வன்முறைக்கு எதிராக மக்களைப் போராடத் தூண்டியுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

`நோ ஜஸ்டிஸ்.. நோ பீஸ்..’ - காவலரால் கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்; பற்றியெரியும் அமெரிக்கா

ஆட்சியாளர்களின் கவலை!

கறுப்பின மக்களின் போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைகளால், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள வைரஸ் பரிசோதனை நிலையங்களைக் கடந்த சனிக்கிழமை மூடும் நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நகரத்தின் மேயர் எரிக் கேர்செட்டி, தற்போது நடக்கும் போராட்டங்கள் தீவிரமான பரவலுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுவித்துள்ளார். மேலும், இரண்டாம் அலைக்கு இந்தப் போராட்டங்கள் வழிவகுக்கும் என அதிகாரிகள் அச்சப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேரிலேண்ட் மாகாண ஆளுநர் லேரி ஹோகன், தங்கள் மாகாணத்தில் இரண்டு வாரங்களில் வைரஸ் தொற்று பரவல் கடுமையாக அதிகரிக்கும் எனக் கவலை தெரிவித்துள்ளார். அட்லாண்டா பகுதியைச் சேர்ந்த ஆளுநர் கெய்ஷா லேன்ஸ், `இந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்’ எனப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மினசோட்டா மாகாண மேயரும் வைரஸ் பரவுவது தொடர்பான அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் - அமெரிக்கா
கொரோனா வைரஸ் - அமெரிக்கா

நியூயார்க்கின் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ பேசும்போது, ``போராட்டம் செய்ய உங்களுக்கு உரிமை உண்டு. எதிர்ப்புகளை தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், மற்றவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்த உங்களுக்கு உரிமை இல்லை. பொது சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட உங்களுக்கு உரிமை இல்லை. எனவே, முகக்கவசங்களை அணிந்தபடி போராட்டங்களில் ஈடுபடுங்கள். கொரோனா வைரஸானது சொல்ல முடியாத அளவுக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கில் வசிக்கும் பலரும் தங்களில் ஒருவரை இழந்துள்ளனர். ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் அதிகமாகவே பாதிப்படைந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

தொற்றுநோய் நிபுணர்களின் எச்சரிக்கை

வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்று நோய் நிபுணர் வில்லியம் ஷாஃப்னெர், ``வெளிப்புறங்களில் வீசும் காற்று வைரஸை நீர்த்துப்போக செய்கிறது. மக்களுக்கு தொற்று ஏற்படுவதையும் குறைக்கிறது. போராட்டத்தில் அதிகமாக இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பாதிப்படைந்தாலும் வைரஸை எதிர்ப்பதற்கான சக்தியைக் கொண்டுள்ளனர். ஆனால், அவர்களின் வீட்டில் உள்ள உறவினர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார்.

எனினும், பிற நிபுணர்கள் மக்கள் அதிகளவில் கூடி போராட்டம் நடத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தங்களது அச்சத்தை தெரிவித்துள்ளனர். மருத்துவர் ஹோவர்ட் மார்கெல், 1918-ம் ஆண்டு ஏற்பட்ட தொற்று நோய் பரவலுக்கு மத்தியில் நடந்த போராட்டங்களை முன்வைத்து எச்சரித்துள்ளார். மேலும், ``போராட்டக்காரர்கள் மிகவும் நெருக்கமாக உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் வெளியில் நின்று போராடுவது பாதுகாப்பானதல்ல” என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம்
AP

தொடர்ந்த பேசிய மார்கெல், ``போராட்டக்காரர்கள் பலரும் முகக்கவசங்களை அணிந்துள்ளனர். ஆனால், சிலர் அணியவில்லை. இருமல் மற்றும் தும்மல் வழியாகவும் கொரோனா வைரஸ் பரவுகிறது. இந்தப் போராட்டத்தில் மக்கள் முழக்கங்களை எழுப்பும்போது வைரஸ் பரவ வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எந்தவித அறிகுறிகளையும் வெளியே காட்டாமல் ஆரோக்கியமாக இருப்பதைப் போலவே இருக்கும் நபர்களிடமிருந்து வைரஸ் எளிதில் பரவுகிறது. தொற்று நோய் தொடங்கியதில் இருந்து நிபுணர்களுக்கு கவலையளிக்கும் விஷயம் இதுதான். கொரோனா வைரஸின் ரகசிய ஆயுதமும் இதுதான்” என்று கூறியுள்ளார். மக்களின் கூட்டத்தைக் கலைப்பதற்காகக் காவலர்கள் கண்ணீர்புகைக் குண்டுகள் மற்றும் பெப்பர் ஸ்பிரே ஆகியவற்றைத் தெளிக்கும்போது இருமல் மற்றும் தும்மல் ஏற்படுவது ஆபத்தானது என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.

அமெரிக்காவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 20,000 பேருக்கு புதிதாகத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சி.என்.என் தெரிவிக்கிறது. அங்கு பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய 18 லட்சத்தைக் கடந்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் 1,05,000-ஐ நெருங்கியுள்ளது. இந்த நிலையில்தான் போராட்டங்கள் பாதிப்புகளை இன்னும் அதிகரிக்கும் எனப் பல அதிகாரிகளும் தொடர்ந்து கவலைகளை தெரிவித்து வருகின்றனர்.

சீனாவின் கோரிக்கை மற்றும் பிற நாடுகளின் போராட்டம்

அமெரிக்காவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடக்கும் இனப் பாகுபாடுகளைத் தடுக்க வேண்டும் என சீனாவின் வெளியுறவித்துறை அமைச்சகம் அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹாவோ லிஜியன் இதுதொடர்பாகப் பேசுகையில், ``ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம். சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனப் பாகுபாடு அமெரிக்காவில் சமூக நோயாக உள்ளது. இனத்தின் அடிப்படையில் சிறுபான்மையினராக உள்ள மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது மற்றும் அனைத்து இனப் பாகுபாடுகளை நீக்குவது தொடர்பாக நடவடிக்கைகளை அமெரிக்கா உறுதியாக எடுக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.

தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்களில் சீனா உள்ளிட்ட நாடுகளின் தலையீடுகள் இருப்பதாக அதிகாரிகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ``அமெரிக்க அதிகாரிகளின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. சீனா மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாது” என்று கூறினார்.

லண்டன் போராட்டம்
லண்டன் போராட்டம்

ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணம் அமெரிக்காவைத் தாண்டி உலகின் பல நாடுகளின் மக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இதேபோல நியூசிலாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தச் சம்பவம் தொடர்பான போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vikatan

போராட்டத்தின் நிலை

வன்முறைகள் தொடர்ந்து மிகவும் மோசமாக நடைபெறுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகை அருகே போராட்டம் தீவிரமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், வெள்ளைமாளிகையின் வெளியே கண்ணீர்புகைக் குண்டுகளை காவலர்கள் வீசி மக்களைக் கலைக்க முயன்றுள்ளனர். ஆறு இரவுகளாகத் தொடரும் போராட்டத்தில் பங்கெடுத்துள்ள மக்களை ட்ரம்ப் அரசு உள்நாட்டு பயங்கரவாதிகள் என விமர்சனம் செய்ததால் மோதல்கள் அதிகமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள பூங்காவில் வன்முறைகள் தொடர்ந்து நடப்பதாகக் கூறப்படுகிறது. இங்கு ஃப்ளாஷ் பேங் குண்டுகள், பெப்பர் ஸ்பிரே உள்ளிட்டவற்றை அதிகாரிகள் மக்கள் மீது எறிவதாகவும் கூறப்படுகிறது. மிகப்பெரிய அளவில் நடைபெறும் இந்தப் போராட்டத்தின் இடையே கடைகள் கொள்ளையடிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் ஒருவரான முனா அப்தி என்பவர், ``எங்களுக்கு கறுப்பினத்தைச் சேர்ந்த மகன்கள், சகோதரர்கள், நண்பர்கள் உள்ளனர். அவர்கள் இறப்பதை நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளால் நாங்கள் சோர்வடைந்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

போராட்டம்
போராட்டம்

பாதுகாப்பான சிறை

ஜார்ஜ் ஃப்ளாய்டை கொலை செய்து பணியில் இருந்து நீக்கப்பட்ட காவலரான டெரெக் சவுவின் மிகவும் பாதுகாப்பான ஓக் பார்க் ஹைட்ஸ் என்ற சிறைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சிறையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. பேபோர்ட் மற்றும் ஸ்டில் வாட்டர் ஆகிய நகரங்களுக்கு இடையில் இந்தச் சிறை உள்ளது. அமெரிக்காவால் மிகவும் வெறுக்கப்பட்ட மற்றும் ஆபத்து நிறைந்த கைதிகள் இந்தச் சிறையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சவுவினை திங்கள்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் நிலவும் அசாதாரண சூழலால் அவரின் நீதிமன்ற ஆஜர் ஜூன் 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

`நீங்கள் பேசுவதைக் கேட்க எனக்கு விருப்பமில்லை?’ - ஜார்ஜ் ஃப்ளாய்டின் சகோதரருடன் பேசிய ட்ரம்ப்
அடுத்த கட்டுரைக்கு