Published:Updated:

கியூபா: `ஃபிடல் காஸ்ட்ரோ கட்டி எழுப்பிய கம்யூனிச சாம்ராஜ்யம் சரிகிறதா?' - என்ன நடக்கிறது அங்கே?

கியூபா: ஃபிடல் காஸ்ட்ரோ
கியூபா: ஃபிடல் காஸ்ட்ரோ

கியூபாவில் அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை நன்கு அறிந்தும் மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.

கியூபாவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடிவருகின்றனர். ஞாயிறன்று கியூபாவின் சான்டியாகோ நகரில் தொடங்கிய இந்தப் போராட்டம் பின்பு நாடும் முழுவதும் பரவியது.

கியூபாவில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா பெருந்தொற்றை அரசு கையாண்டவிதம்தான் இந்தப் போராட்டத்துக்கு காரணம்.

உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதும், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரிப்பதும், மறுபுறம் மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதும் மக்களைக் கடுமையான கோபத்துக்கு ஆளாக்கியுள்ளன. இவை தவிர கடுமையான மின்வெட்டும் மக்களை அதிருப்தியின் உச்சத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டக் களத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

கம்யூனிச புரட்சி நாடான கியூபாவில், காஸ்ட்ரோ குடும்பத்தினரின் சகாப்தம் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்து மிகல் தியாஸ் கானெல் அதிபரானார்.

நாடு முழுவதும் நடைபெறும் போராட்டத்தில், மக்கள் தங்களுக்கு ’சர்வாதிகாரம் வேண்டாம்’ என்றும், `விடுதலைதான் வேண்டும்’ என்றும் ஆங்காங்கே முழுக்கம் இட்டும் வருகின்றனர்.

ஒடுக்கப்படும் போராட்டம்:

கியூபாவில் அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை நன்கு அறிந்தும் மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர். போராட்டக்காரர்கள் தாக்கப்படும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் காண முடிகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு படையினர் பெப்பர் ஸ்ப்ரே கொண்டு போராட்டக்காரர்களை ஒடுக்க முயன்றுவருகின்றனர்.

கியூபா
கியூபா
Ismael Francisco

கியூபாவில் அனுமதியின்றி கூட்டம் கூடுவது சட்ட விரோதம். அங்கு போராட்டங்களும் அரிதாகவே நடைபெறும். கியூபாவைப் பொறுத்தவரை காஸ்ட்ரோவின் ஆட்சிக்காலத்திலிருந்தே அங்கு இணைய வசதி பரவலாகக் கிடைக்கும் ஒன்று. ஆனால் இணைய சேவையை அரசு நிறுவனம்தான் வழங்குகிறது. எனவே, போராட்டம் குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் பல்வேறு இடங்களில் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை ஏற்பட்டபோது கியூபா பெரிதும் சமாளித்துக்கொண்டது. ஏன்... தன் நாட்டு மருத்துவர்களை பிற நாடுகளுக்கும்கூட அனுப்பிவைத்தது கியூபா.

ஆனால் இந்த இரண்டாம் அலையில் ஆட்டம் கண்டுவிட்டது என்றே சொல்லலாம். நாள் ஒன்றுக்கு அங்கு 5,000 பேருக்கு மேல் தொற்று ஏற்படுகிறது. சமீபத்தில் ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கியூபா
கியூபா
Ramon Espinosa

கொரோனா பெருந்தொற்றை அரசு சரியாகக் கையாளவில்லை என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் சொல்லும் காரணம். இரண்டாம் அலையில் பலர் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் இறந்துள்ளனர்.

மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதைக் கூறி போராடும் மக்களை கியூபா தனது சொந்தத் தடுப்பு மருந்தை கண்டுபிடித்திருக்கிரது என்று கூறி ஆறுதல்படுத்த முயன்றுவருகிறார் அந்நாட்டின் அதிபர்.

ஆம். கியூபா உலக நாடுகளிலிடமிருந்து தடுப்பு மருந்தை இறக்குமதி செய்யாமல், ஐந்து தடுப்பு மருந்துகளை உருவாக்கிவருகிறது. அவற்றில் ஒன்றுதான் ’சொபெரானா’ (இறையாண்மை) தடுப்பு மருந்து. இது அறிகுறிகள் தென்படும் நோயாளிகளுக்கு 91 சதவிகித பலன் அளிப்பதாக தெரிவித்திருந்தது கியூபா.

கியூபா போராட்டம்
கியூபா போராட்டம்
Daniel A. Varela

கொரோனா தொற்று சுகாதாரக் கட்டமைப்பை சிதைப்பது ஒருபுறம் இருக்க, கொரோனா கட்டுப்பாடுகளால் கியூபாவின் சுற்றுலாத்துறையும் பெரிதும் ஆட்டம் கண்டுள்ளது. கியூபாவின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையைப் பெரிதும் சார்ந்துள்ளது என்பதை இங்கே நினைவுகூர்வது அவசியம்.

காஸ்ட்ரோவுக்கு பிறகு..

கியூபாவைப் பொறுத்தவரை 1959-ம் ஆண்டிலிருந்து ஒரே ஒரு கட்சிதான் ஆண்டுவருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவோடு கியூபாவை ஆட்சி செய்துவந்த பாடிஸ்டாவுக்கு எதிராக கெரில்லா போர் புரிந்து வெற்றிபெற்று, 1959-ம் ஆண்டு கியூபாவின் அதிபரானார் ஃபிடல் காஸ்ட்ரோ.

அதன் பிறகு 2008-ம் ஆண்டு தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்தார் ஃபிடல். கடந்த ஏப்ரல் மாதம் 89 வயதான ராவுல் காஸ்ட்ரோ அதிபர் பதவியிலிருந்து விலகி, காஸ்ட்ரோ சகாப்தத்துக்கு முற்றுப் புள்ளிவைத்தார். ராவுல் காஸ்ட்ரோவுக்கு பிறகு அதிபரானார் மிகல் தியாஸ் கானெல்.

1959-ம் ஆண்டு ஃபிடல் பெற்ற வெற்றியை, கம்யூனிசத்தின் வெற்றியாக கருதிய அமெரிக்கா அதை ஒடுக்க நினைத்து, கியூபாவின் பொருளாதாரத்தை நசுக்க பல்வேறு தடைகளை விதித்தது.

போராட்டம்
போராட்டம்
Marta Lavandier

ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில்தான் அந்தத் தடைகள் தளர்த்தப்பட்டன. ஆனால் டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தில் அந்தத் தடைகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.

தற்போது பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு தடைகள் நீக்கப்படும் என்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், தனது ஆட்சியின் முக்கியக் கடமைகளில் ஒன்றாக அது இல்லை என்று பைடன் நிர்வாகம் கைவிரித்துவிட்டது.

அமெரிக்காவின் சதியா?

கியூபா, காஸ்ட்ரோவின் காலத்திலிருந்து அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்துவரும் நிலையில், கிட்டத்தட்ட 1962-ம் ஆண்டிலிருந்து அந்த நாட்டின் மீது பல தடைகளை விதித்திருக்கிறது அமெரிக்கா.

கியூபா: `ஃபிடல் காஸ்ட்ரோ கட்டி எழுப்பிய கம்யூனிச சாம்ராஜ்யம் சரிகிறதா?' - என்ன நடக்கிறது அங்கே?
Eliana Aponte

கியூபாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்காவின் இந்தத் தடையும் காரணம். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் தொலைக்காட்சியில் உரையாற்றிய கியூபாவின் அதிபர், தற்போது ஏற்பட்டிருக்கும் இந்தப் பதற்றத்துக்கு அமெரிக்காதான் காரணம் என்று தெரிவித்திருக்கிறார். போராட்டக்காரர்கள் அமெரிக்காவால் தூண்டிவிடப்படுகிறார்கள் என்றும், அதற்கு அமெரிக்கா நிதி உதவி வழங்குகிறது என்றும் ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மறுபுறம் பல தசாப்தங்களாக கியூபாவை எதிரியாக பாவித்துவரும் அமெரிக்கா, கியூபாவின் மக்களின் பக்கம் நிற்பதாகவும், ஆட்சியில் உள்ளவர்கள் போராட்டத்தை ஒடுக்குவதை விடுத்து மக்களின் குறைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

- திலகவதி

ஃபிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்த நேரு.... அமெரிக்காவுக்கு அஞ்சாத பிரதமர்! #VikatanRewind
அடுத்த கட்டுரைக்கு