Published:Updated:

நேபாள பிரதமராக பிரசந்தா தேர்வானார்... முடிவுக்குவந்த நீண்ட இழுபறி!

 பிரசந்தா
News
பிரசந்தா

"பெரிய கட்சியான நேபாளி காங்கிரஸ், காலக்கெடுவுக்குள் அரசாங்கத்தை அமைக்கத் தவறிவிட்டது. இப்போது, சிபிஎன்-யுஎம்எல் தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சி எடுத்திருக்கிறது. 165 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரசந்தா பிரதமராகவிருக்கிறார்."

நேபாள பிரதமராக பிரசந்தா தேர்வானார்... முடிவுக்குவந்த நீண்ட இழுபறி!

"பெரிய கட்சியான நேபாளி காங்கிரஸ், காலக்கெடுவுக்குள் அரசாங்கத்தை அமைக்கத் தவறிவிட்டது. இப்போது, சிபிஎன்-யுஎம்எல் தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சி எடுத்திருக்கிறது. 165 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரசந்தா பிரதமராகவிருக்கிறார்."

Published:Updated:
 பிரசந்தா
News
பிரசந்தா

நேபாள நாடாளுமன்றத்துக்கு, கடந்த மாதம் 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 275 உறுப்பினர்களைக்கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்கு 13 இடங்கள் தேவை. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை என்பதால், நேபாளத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர் இழுபறி நீடித்துவந்தது. எனினும், ஷேர் பகதூர் தூபா தலைமையிலான நேபாள காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 89 இடங்களில் வென்றது. இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசை அமைப்பதற்கான முயற்சியில் ஷேர் பகதூர் தூபா இறங்கினார்.

 ஷேர் பகதூர் தூபா!
ஷேர் பகதூர் தூபா!

முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா தலைமையிலான சிபிஎன் மாவோயிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஐந்து கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தில் முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு தான் பிரதமராக இருப்பதற்கு ஆதரவளிக்குமாறு தூபாவிடம் பிரசந்தா கேட்டுக்கொண்டார். ஆனால், தூபா அதை ஏற்கவில்லை என்பதால் இந்தக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியின் கட்சி மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தி புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளை பிரசந்தா மேற்கொண்டார்.

இதன்படி, முன்னாள் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தலைமையிலான எதிர்க்கட்சியான சிபிஎன்-யுஎம்எல் (CPN-UML), சிபிஎன் - மாவோயிஸ்ட் மையம் (CPN-MC) , ராஸ்ட்ரிய சுதந்திரக் கட்சி (RSP) மற்றும் பிற சிறிய கட்சிகளின் முக்கியக் கூட்டத்தில் 'பிரசந்தா' தலைமையில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டது. புதிய கூட்டணிக்கு 275 உறுப்பினர்களைக்கொண்ட பிரதிநிதிகள் சபையில் 165 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. இதில் சிபிஎன்-யுஎம்எல் (CPN-UML) 78, சிபிஎன் - மாவோயிஸ்ட் மையம் (CPN-MC) 32, RSP 20, RPP 14, ஜேஎஸ்பி 12, ஜனமத் 6, நகரிக் உன்முக்தி கட்சி 3 ஆகியவை அடங்கும்.

 ஷர்மா ஒலி!
ஷர்மா ஒலி!

"பெரிய கட்சியான நேபாளி காங்கிரஸ், ஜனாதிபதியின் காலக்கெடுவுக்குள் அரசியலமைப்பின் 76(2) பிரிவின்படி அதன் தலைமையின் கீழ் அரசாங்கத்தை அமைக்கத் தவறிவிட்டது. இப்போது, சிபிஎன்-யுஎம்எல்(CPN-UML) தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சி எடுத்திருக்கிறது. 165 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரசந்தா பிரதமராக இருக்கிறார்" என்று சிபிஎன்-யுஎம்எல் (CPN-UML) பொதுச்செயலாளர் சங்கர் போகரேல் செய்தியாளர்களிடம் கூறினார்.

நேபாள பிரதமராக பிரசந்தா தேர்வானார்... முடிவுக்குவந்த நீண்ட இழுபறி!

மேலும், இதில் சுழற்சிமுறையில் அரசாங்கத்தை வழிநடத்துவது என முடிவு செய்யப்பட்டது. சுழற்சியின் முதல் வாய்ப்பை பிரசந்தா பெறுகிறார். இதைத் தொடர்ந்து பிரசந்தா தலைமையில் புதிய அரசு அமையவிருக்கிறது. அதிபர் மாளிகையில் அதிபர் பித்யா தேவி பண்டாரியிடம் இந்த கடிதத்தைச் சமர்ப்பித்த பிரசந்தா, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதிபர் பித்யா தேவி பண்டாரி ஞாயிற்றுக்கிழமை (25-டிசம்பர்-2022) நேபாளத்தின் புதிய பிரதமராக சிபிஎன்-மாவோயிஸ்ட் மையத்தின் (CPN-MC ) தலைவர் புஷ்ப கமால் தஹால் என்ற ‘பிரசந்தா’வை நியமித்தார். இன்று மாலை 4 மணிக்கு பதவி ஏற்பதாக அதிபர் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த சில நாள்களாக நீடித்துவந்த நேபாள அரசியல் இழுபறி தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.