இலங்கையில் பல மாதங்களாக நிலவிவரும் பொருளாதார நெருக்கடிக்கெதிராக, மக்கள் நடத்திவரும் போராட்டத்தை சமாளிக்கமுடியாமல் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே, அமைச்சர் பசில் ராஜபக்சே உள்ளிட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருக்கின்றனர்.
இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றிருந்த ரணில் விக்ரமசிங்க, அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் பதவி விலகலுக்குப் பிறகு, இலங்கையின் இடைக்கால அதிபராகவும் பதவியேற்றார்.

இந்த நிலையில், இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்க இன்று தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே அறிவித்தபடி இலங்கை நாடாளுமன்றத்தில், புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிபர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுரா திசநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். நாடாளுமன்றத்திலிருக்கும் 225 எம்.பி-க்களில், 2 பேர் ரகசிய வாக்கெடுப்பைப் புறக்கணித்ததையடுத்து, 223 பேர் வாக்களித்தனர். பின்னர் இதில் 4 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டதில், அதிகபட்சமாக 134 வாக்குகள் பெற்ற ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதில், டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளும், அனுரா திசநாயக்க 3 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் ரணில் விக்ரமசிங்க, 1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரானார். 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ரணில் விக்ரமசிங்க, அதிபர் பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.