Published:Updated:

இலங்கை: அடம்பிடித்த ராஜபக்சே... திடீர் ராஜினாமா ஏன்? - முழுப் பின்னணி!

ராஜபக்சே ராஜினாமா

மக்கள் போராட்டத்துக்கு துளியும் இசைவு கொடுக்காத மகிந்த, திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். இதன் பின்னணி என்ன..?

இலங்கை: அடம்பிடித்த ராஜபக்சே... திடீர் ராஜினாமா ஏன்? - முழுப் பின்னணி!

மக்கள் போராட்டத்துக்கு துளியும் இசைவு கொடுக்காத மகிந்த, திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். இதன் பின்னணி என்ன..?

Published:Updated:
ராஜபக்சே ராஜினாமா

2015-ம் ஆண்டு ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டு, துரத்தியடிக்கப்பட்டபோது, அவர் ஆதரவாளர்கள் அவருக்குக் கண்ணீர்மல்க விடைகொடுத்தனர். சில ஆயிரம் பேர் அவரது அதிகாரபூர்வ அரசு இல்லமான ‘அலரி மாளிகை’யிலிருந்து அவரது வீடு இருக்கும் மெதமுனல வரை சென்று அவரை வழியனுப்பினர்கள். ஆனால், இன்று அதே ஆதரவாளர்கள் மகிந்த ராஜபக்சேவின் ராஜினாமாவை வரவேற்றிருக்கிறார்கள்.

மக்கள் போராட்டத்துக்குத் துளியும் இசைவு கொடுக்காத மகிந்த, திடீரென ராஜினாமா செய்திருப்பதன் பின்னணி என்ன..?

ராஜபக்சே குடும்பத்தையே இலங்கை மக்கள் வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலைமை கைமீறிவிடக் கூடாது என்பதற்காக, ராஜபக்சே குடும்பத்தினர் ஒன்றுசேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். அந்தப் பேச்சுவார்த்தையே குடும்பத்துக்குள் பூகம்பத்தை உண்டாக்கியிருக்கிறது. கோத்தபய, மகிந்த மேல் பாய்ந்திருக்கிறார். ``நீ பதவி விலகு... மக்களைச் சற்று சாந்தப்படுத்தலாம்!’’ என அதிபர் கோத்தபய சொன்ன ஆலோசனைக்கு முதலில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் மகிந்த. ``அனைத்துக் கட்சி அரசாங்கம் அமைக்க அதிபர் ஏற்பாடு செய்யலாம். அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க நான் தயார். மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்வேன். ஆனால், 69 லட்சம் பேர் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள். அவர்களை நான் ஏமாற்ற முடியாது” என்று பேசிவந்தவர், திடீரென்று இன்று மதியம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

இலங்கை
இலங்கை

இருந்தபோதிலும் மகிந்தவின் சகாக்களில் சிலர், ``மகிந்தவின் முகத்தை வைத்துத்தானே கோத்தபய ஆட்சிக்கு வந்தார்... அவர் பதவி விலகுவதே சரியானது’’ என்று இன்னமும் சொல்லிவருகிறார்கள். மகிந்த பதவி விலகுவதற்கு முன்பே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார் அதிபர். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியைக் கூட்டி ஆலோசனை நடத்திய சஜித், ``அதிபர் பதவி விலகினால் மட்டுமே... ஆட்சிப் பொறுப்பு ஏற்போம்” என பதிலளித்துள்ளார். அதிபர் அதிகாரத்தை சட்டரீதியாகக் குறைக்கும் முயற்சியிலும் சஜித் இறங்கியிருக்கிறார்.

ராஜபக்சேக்கள் ஒருசேர பதவி விலகினால், இனி இலங்கை அரசியலுக்குள் ராஜபக்சே குடும்பம் தலைதூக்கவே முடியாது என்பதால், மகிந்த மட்டும் தற்போது பதவி விலகியிருக்கிறார். காரணம், நாட்டின் முழு அதிகாரமும் அதிபரின் கைவசம் என்பதால், கோத்தபய தன் பதவியைத் தக்கவைத்துக்கொண்டு... அழுத்தத்தின் மூலம் சகோதரரின் பதவியைப் பறித்திருக்கிறார். மகிந்த பதவி விலகியதன் மூலம் மக்கள் சற்று சாந்தமடைவார்கள் என ஆளும் தரப்பு எதிர்பார்க்கிறது. ஆனாலும் மக்கள், அதிபரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து பின்வாங்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இலங்கை போராட்டம்
இலங்கை போராட்டம்

மீண்டும் அவசரகாலநிலை!

அதிபரால் ஏப்ரல் 2-ம் தேதி அவசரகாலநிலை அமல்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள், மக்களின் எதிர்ப்பு, வெளிநாடுகளின் அழுத்தம் ஆகியவை காரணமாக ஏப்ரல் 5-ம் தேதி அந்த நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டது. மே 6-ம் தேதி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையைக் கலைக்கச் சொல்லி நாடு முழுவதும் ஹர்த்தால் (ஸ்டிரைக்) நடைபெற்றது. நாடே ஸ்தம்பித்தது. அன்றே, `நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது, பொது வாழ்க்கைக்கான அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளைப் பராமரிப்பது, பொதுப் பாதுகாப்பு’ என மூன்று காரணங்களைச் சொல்லி, அரசியலமைப்பின் 155-வது பிரிவின் கீழ் அவசரகாலநிலையை மீண்டும் பிரகடனப்படுத்தினார் அதிபர்.

இந்தச் சட்டத்தால், மக்கள் பயந்து, தயங்கி, போராட்டத்திலிருந்து பின்வாங்குவார்கள் என்று ஆளும் தரப்பினர் எதிர்பார்த்தனர். ஆனால், எழுச்சி குறையாமல் போராட்டம் நடைபெற்றுவந்தது. ``வன்முறை மற்றும் பயத்தால் எங்களை கோத்தபயவால் அடக்க முடியாது” என மக்கள் சொல்லிவந்த நிலையில், இன்று மதியம், ‘கால் ஃபேஸ்’ பகுதிக்குள் நுழைந்த ராணுவம், தடியடி நடத்தி, தண்ணீரைப் பீய்ச்சியடித்து போராட்டக்காரர்களைக் கலைத்தது.

மகிந்த ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே

கால்ஃபேஸிலிருந்து போராட்டக்காரர்களை அடித்து அப்புறப்படுத்தியதில், ராணுவத்தினருடன் சேர்ந்து கோத்தபய ஆதரவாளர்களும் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. அங்கிருந்த போராட்டக்காரர்களின் கூடாரங்களை அவர்கள் அடித்து நொறுக்கியுள்ளார்கள். இந்தநிலையில், நாடு முழுவதுமே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், மக்கள் அனைவருமே மிகுந்த பதைபதைப்புடன் காணப்படுகிறார்கள்.

நாட்டில் ஜனநாயகமும் இல்லை; பொருளாதாரமும் இல்லை... நிர்க்கதியாக நிற்கும் இலங்கை மக்களுக்குத் தீர்வு தரப்போவது யார்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism