Published:Updated:

தென்னை மரத்தில் அமர்ந்தபடி செய்தியாளர் சந்திப்பு; அசத்திய அமைச்சர்! - ஏன் தெரியுமா?

அமைச்சர் - செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் - செய்தியாளர் சந்திப்பு ( SL VLOG/Youtube ScreenShot )

அமைச்சர் அருந்திகா தென்னை மரத்தில் அமர்ந்தபடி செய்தியாளர்களைச் சந்தித்தது இலங்கை மக்களைப் பெருமளவில் கவர்ந்திருக்கிறது... இந்த விநோதச் செய்தியாளர் சந்திப்பு ஏன் தெரியுமா?!

இலங்கையில், தேங்காய், பனை மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்துறையின் அமைச்சராகப் பணியாற்றிவருபவர் அருந்திகா பெர்னாண்டோ. இவர் தென்னை மரத்தில் அமர்ந்தபடி செய்தியாளர்களைச் சந்தித்தது, இலங்கை மக்களைப் பெருமளவில் கவர்ந்திருக்கிறது.

நேற்று (18.9.2020) இலங்கை தங்கொட்டுவையிலுள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ. அப்போது தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களைப் பறித்த அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ, மரத்திலிருந்தபடியே செய்தியாளர்களிடம் பேசினார். ``இலங்கையில் தேங்காய்க்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இலங்கையிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் நுகர்வோருக்குத் தேங்காயின் தேவை அதிகரித்திருப்பதே இந்தப் பெரும் பற்றாக்குறைக்குக் காரணம். இலங்கையில் 70 கோடி தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது. கிடைக்கும் வெற்று இடங்களிலெல்லாம் தென்னை மரங்களை நடுவதற்குப் பயன்படுத்திக்கொள்வோம். இலங்கை அரசுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் இந்தத் தென்னைத்துறைக்கு ஊக்கமளிப்போம்'' என்றார்.

அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு
SL VLOG/Youtube ScreenShot

மேலும் பேசிய இலங்கை அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ...

தேங்காய் பறிக்கும் தொழிலாளர்களுக்கு, ஒரு மரத்துக்கு 100 ரூபாய் வழங்க வேண்டும். தேங்காயின் விலை எவ்வளவு உயர்ந்தாலும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
அருந்திகா பெர்னாண்டோ, இலங்கை அமைச்சர்
மரத்தில் ஏறுவதற்காகத் தென்னை மரம் ஏறும் பிரத்யேக இயந்திரத்தைப் பயன்படுத்தினார் அமைச்சர் அருந்திகா. இந்த சிறப்புத் தென்னை மரம் ஏறும் இயந்திரம், வரக்கபொலா பகுதியைச் சேர்ந்த ஒருவரால் தயாரிக்கப்பட்டது என்றும், `இதைக்கொண்டு ஆண்கள் மட்டுமல்ல... பெண்களும் எளிதாக ஏறி தேங்காய்களைப் பறிக்கலாம்’ என்றும் அருந்திகா தெரிவித்தார். மேலும், அடுத்த சில மாதங்களில் இந்தச் சிறப்பு இயந்திரம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பதாகவும் அமைச்சர் அருந்திகா கூறினார்.
Vikatan

தேங்காய் பற்றாக்குறை குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தென்னை மரத்தில் ஏறி செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோவின் விநோதச் செயல் உள்ளூர் ஊடகங்களின் கவனத்தை மட்டுமல்ல, சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு