Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | கடல் எனும் நீலக்குருதி | பகுதி- 5

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

உப்பிப்போய்க் கிடந்த உடம்பை, நீதன் படகின் சட்டத்தோடு நிமிர்த்திச் சாய்த்தான். அப்போதுதான், அடுத்த பக்கத்தில் குயிலனும் மனைவியும் அருகருகாகக் கிடந்ததைக் கண்டான்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | கடல் எனும் நீலக்குருதி | பகுதி- 5

உப்பிப்போய்க் கிடந்த உடம்பை, நீதன் படகின் சட்டத்தோடு நிமிர்த்திச் சாய்த்தான். அப்போதுதான், அடுத்த பக்கத்தில் குயிலனும் மனைவியும் அருகருகாகக் கிடந்ததைக் கண்டான்.

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

செத்த படகின் பிண வாசனை கடல் முழுவதையும் ஆக்கிரமித்தது. புகையின் மீதி வானில் மேலெழுவது தெரிந்தது.

கடலில் மிச்சமிருந்த வெளிச்சத்தில் எல்லோருமே ஓரளவுக்கு மூழ்கிக்கொண்டிருந்தனர். மீண்டு எழுகின்றவர்களின் கடைசி ஒப்பாரி, அறுத்த கோழியின் கடைசிக் குரல்போல சகல திசைகளிலும் கூவலாகக் கேட்டது.

படகிலிருந்து பிளந்து மிதக்கும் கருகிய கட்டைகளை நெஞ்சோடு அணைத்தபடி சிலர் குழறினார்கள். மூங்கில் தடிகளை சிலர் இரண்டு கைகளுக்குள்ளேயும் கொடுத்தபடி குரலின்றிக் கதறினார்கள்.

மிதந்து வந்த நீல நிற பிளாஸ்டிக் பேரலை நீதன் பிடித்திருந்தான். அல்லது அது அவனைப் பிடித்திருந்தது. அந்த பேரலை இதற்கு யாரோ பிடித்திருந்து, முடியாமல் மூழ்கிப்போன பின்னர், தனது கைகளுக்கு வந்ததை அவன் உணர்ந்தான். பிளாஸ்டிக் பேரலை கைகளால் கவ்வி, நெஞ்சோடு பிடித்துக்கொள்ளும்போதெல்லாம், அதில் இழுபட்டுக்கொண்டிருந்த ஆடைத்துண்டொன்று கைகளுக்குள் இடறியது.

திரும்பிய இடமெல்லாம் பிளந்த வாய்களோடு தலைகள் ஓலமிட்டன. பழக்கமான மரணத்தைப் பார்த்தபடி அலைகள் விலகிச் சென்றன.

தன் பழிவாழ்வின் கடைசித் தருணங்களை எண்ணி நீதன் தன்னை அறியாமல் அழுதான். தனித்திருந்த தேவதையின் மிருதுவான கைகளில் பேருவகை மிக்க நாள்களை தான் ஒப்படைத்த கணங்களை நினைத்தான். புதைமணலில் நின்ற அவளின் கைகளை அறுத்துவிட்டு, படகேறிய பழிநாளை எண்ணிப் பார்த்தான். தன் உயிரின் மீதியை வருந்திப் பெற்றவளின், ஒருநாள் அன்புக்குக்கூட இனித் தான் தகுதியில்லை என்று நெஞ்சு வெடித்தான். இந்தப் பெருவெளியில் தனது பிணம் மிதப்பதை ஒரு கணம் கற்பனை செய்தான்.

அச்சத்தில் நீல பேரலை இறுக்கிப் பிடித்துக்கொண்டான்.

உடைந்த படகிலிருந்து கொட்டிய மலக்கழிவும் எண்ணெய்ப் படலமும் முகத்தில் வந்து மோதத் தொடங்கின.

புகையோடு சேர்ந்து கடல் நாறியது. அலைகளின் மேலே தெரிந்துகொண்டிருந்த தலைகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.

திடீரென கடலைப் பிளந்தபடி இயந்திரச் சத்தங்கள் கேட்டன. வேகமாக வந்துகொண்டிருந்த வெளிச்சங்கள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வட்டம் போட்டன.

உப்புத்தண்ணீரில் ஊறி நாறிய உடம்பு, வெளிச்சத்தைக் கண்வெடித்துப் பார்த்தது.

நான்கு படகுகளில் வந்த இந்தோனேசியப் படையினர், வெளிச்சமடித்து, தெரிந்த தலைகளுக்கு கயிறு போட்டார்கள். குப்பை அள்ளுவதைப்போலத் தூக்கினார்கள். இருட்டில் யாரையும் யாரென்று தெரியவில்லை. யார் உடலில் உயிருள்ளது என்றும் தெரியவில்லை. படகில் வந்திருந்த மருத்துவர் ஒருவர், ஒவ்வொருவரையும் கன்னத்தில் அடித்து அடித்து, உயிரோடிருப்பதை உறுதிசெய்தார். படையினர் சிலர் வயிற்றை அழுத்தி தண்ணீரை வெளியே பீய்ச்சியெடுத்தனர். படகில் கிடந்த துணிகளை ஒவ்வொருவருக்கும் தூக்கிப்போட்டனர்.

நீதனுக்கு அருகில் யார் கிடக்கிறார்கள் என்று திரும்பிப் பார்ப்பதற்குக்கூட கழுத்தில் பலம் இருக்கவில்லை. அலைச்சத்தமும் மோட்டார் இரைச்சலும் இன்னமும் செவிக்குழியில் அரித்தபடியிருந்தன. எண்ணெய் மணம் நாசியிலேயே ஒட்டிக்கிடந்தது. விழுங்கிய உப்புநீர் உடம்பின் உள்ளே அமிலமாக எரிந்தது. படகுக்குள் தூக்கிப்போட்ட பலரும் மாறி மாறி வாந்தியெடுக்கும் சத்தம், நரம்புகளை அறுத்தது.

வெளியே மீதிப் படகுகள் மிதப்பவர்களைத் தொடர்ந்து துழாவிக்கொண்டிருந்தன.

அப்போது புதிய படகொன்றின் சத்தம் வெளியில் கேட்டது. ஐந்தாவது படகு அங்கு வேகமாக வந்தது. அதிலிருந்த சீருடையணியாத சிலர், கடற்படையினரின் படகுக்கு அருகில் வந்து வெகுநேரமாகப் பேசினார்கள்.

நாடற்றவனின் கடவுச்சீட்டு
நாடற்றவனின் கடவுச்சீட்டு

பிறகு, ஐந்தாவது படகிலிருந்து சில பெட்டிகள் கடற்படையினரின் படகுகளுக்குள் வந்தன. சிறிது நேரத்தில், எல்லோரையும் ஐந்தாவது வேகப்படகில் ஏறச் சொன்னார்கள். நடக்கவே முடியாமல் தள்ளாடியவர்களை, ஐந்தாவது படகில் வந்த ஐந்தாறு பேர் தூக்கிப்போனார்கள். பிளாஸ்டிக் விரிப்பில் எல்லோரையும் வளர்த்தினார்கள்.

நடுக்கடலில் கடற்படையிடம் பணம் கொடுத்து, குருவியில் காப்பாற்றப்பட்ட அகதிகள் அனைவரும், ஏற்கெனவே ஆஸ்திரேலியா போய்க்கொண்டிருந்த இன்னொரு படகில் கொண்டு சென்று ஏற்றப்பட்டார்கள். தன்னோடு சேர்த்து முப்பத்து நான்கு பேர், மூழ்கிய படகிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள் என்ற செய்தி, நீதனுக்கு இரண்டாவது படகில் ஏற்றும்போதுதான் தெரியவந்தது.

அடுத்த நாள் கண்விழித்தபோது கேட்ட படகின் இரைச்சல், முதல்நாள் பேரவலத்தை முகத்தில் அறைந்தது. அலைச்சத்தம் இன்னமும் தலைக்குள் கேட்டபடியிருந்தது. கைகளில் பிடித்திருந்த நீல பேரலை எழுந்து தேடினான் நீதன். சாதுவாக சரிந்து, பகலைப் பார்த்தான். முதலில் மிரண்டான். முதல்நாள் இரவே சாவதற்கு ஒப்புக்கொடுத்த தனது உடல் இன்னமும் உயிரோடிருப்பதாக உணர்ந்தபோது பயந்தான். கடலை எட்டிப் பார்த்தான். அது பரிவோடு படகுக்கு வழிவிட்டபடி, நீலமாகப் படர்ந்திருந்தது. இயந்திர சத்தத்துக்குப் போட்டியாக அலைகளின் ஒலிகள் படகின் அடியில் கேட்டபடியிருந்தன.

முதல்நாள் முறிந்து மூழ்கிய படகைவிட, இது சற்று விசாலமானதாகத் தெரிந்தது. பழைய கப்பலில் பார்த்த சில முகங்கள், அரைத்தூக்கத்தில் அருட்டியபடியிருந்தன. தோய்ந்த ஆடைகளும் கொஞ்ச உயிரும் அவர்களில் ஒட்டியிருந்தன.

நீதன் எழுந்துவிட்டதைக் கண்ட ஒருவன், படகின் மேல் தளத்திலிருந்து தேநீரோடு ஓடி வந்தான்.

உப்பிப்போய்க் கிடந்த உடம்பை, நீதன் படகின் சட்டத்தோடு நிமிர்த்திச் சாய்த்தான்.

அப்போதுதான், அடுத்த பக்கத்தில் குயிலனும் மனைவியும் அருகருகாகக் கிடந்ததைக் கண்டான். நீதனுக்கு அதுவரை கடலுக்குள் கிடந்த மூச்சு, சாதுவாக உடலுக்குள் சுரந்தது. எழுந்து அவர்களிடம் போனான்.

``குயிலன்…”

குரல் கேட்டவுடன், குயிலனின் முகமெல்லாம் விகாரமாய் மாறியது. வார்த்தைகளைக் கோர்த்துவிட முடியாமல் உதடுகள் நடுங்கின. அடிநெஞ்சில் வெடித்த ஓலத்தோடு எழுந்தோடி வந்து நீதனில் விழுந்தான்.

``அண்ணே, குழந்தை தவறிப்போச்சுது அண்ணே…”

மார்பிலும் தலையிலும் அடித்துக் குழறினான். குயிலனின் மனைவி கூடவே

``என்ர ஐயோ…” - என்று ஓலமிட்டபடி தரையில் தலையை இடித்தாள்.

நாடற்றவனின் கடவுச்சீட்டு
நாடற்றவனின் கடவுச்சீட்டு

நீதனுக்கு தலைக்குள் சிலிண்டர் வெடித்ததுபோலிருந்தது. நிற்க முடியாமல் படகின் தரையில் குத்தென விழுந்தான்.

மேல் தளத்திலிருந்தவர்கள் ஓடிவந்தார்கள். மீதிப் பேர் மேலிருந்தவாறே எட்டிப் பார்த்தார்கள்.

``என்ர குழந்தையைக் கொண்டுபோட்டுதே… நாசமாப் போன இந்தக் கடல் பயணம் வேண்டாம், வேண்டாம் எண்டு அம்மா அப்பவும் சொன்னாவே. என்ர ஐயோ...”

இரண்டு பெண்கள், குயிலனின் மனைவியைக் கைத்தாங்கலாகப் பிடித்திருந்தார்கள்.

``காத்துக்கூடப் படாமல் கைக்குள்ளேயே பொத்திப் பொத்திக் கொண்டுவந்தனே... கடைசியில கடலுக்குள்ள கொண்டுவந்து கொட்டிப்போட்டனே...”

அழுவதற்கே வலுவில்லாத குயிலன், ஆறுதல் சொல்லத் தெம்பில்லாமல், மனைவியைத் தன் மீது சாய்த்தான்.

``இனி நான் ஏன் உயிரோடு கிடக்கிறன்... ஐயோ… பாத்துக்கொண்டு நிக்கிறீங்களே, யாராவது குதிச்சு என்ர பிள்ளைய எடுத்துக்கொண்டு வாங்கோவன்…”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முகத்தின் முன்பாக விழுந்த முடி, அவள் கண்ணீரோடு ஒட்டிக்கிடந்தது. கண்கள் சிவந்து, கைகள் முழுவதும் சிராய்ப்பு காயங்களும் தெரிந்தன.

நீதனுக்கு முன்னால், தரையில் அனீஸா நிறைமாத வயிற்றோடு அடித்தடித்து குழறிக்கொண்டிருந்தாள். பிறந்தநாளுக்கு தான் வாங்கிக்கொடுத்த லியோவின் புலிப்பொம்மையை அவள் கைகளில் இறுக்கிப் பிடித்திருக்கிறாள்.

அழுவதை நிறுத்திவிட்டு ஒருகணம் நிமிர்ந்து பார்த்தாள். அனீஸாவின் கண்களில் சிவந்த ரேகைகள் வலை வலையாகத் தெரிந்தன.

``டேய்…” – என்று நீதனை நோக்கிப் பாய்ந்தாள்.

பின்பக்கமாக எழுந்து விழுந்த நீதன், படகின் ஓரமாக மரப்பலகையில் தலையடிபட்டுக்கொண்டான். அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று பிடித்தார்கள்.

நினைவு திரும்பிய நீதனுக்கு, குயிலனின் மனைவி கழுத்து நரம்புகள் தெரிய அழுதுகொண்டிருப்பது மங்கலாகத் தெரிந்தது.

பகல் பயணம் சீராகப்போனது.

படகிலிருந்தவர்கள் ஒவ்வொருவராகக் கீழ்த் தளத்துக்கு வந்து குயிலனுக்கும் மனைவிக்கும் ஆறுதல் சொன்னார்கள். அது இன்னமும் பெருங்கொடூரமாகக் கழிந்தது. படகு கவிழ்ந்த புதினத்தைக் கேட்டறிவதற்கு, படகின் கீழ்த் தளத்துக்கு வந்த சில பெண்கள், குயிலனின் மனைவிக்கு ஆறுதல் சொல்லும் சாக்கில், அங்கேயே குந்தியிருந்தனர்.

``சிலிண்டரில் சிகரெட் பற்றிய நாய் விழுவான் செத்துப்போனானோ அல்லது இஞ்சனேக்கதான் கிடக்கிறானோ...”

நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி நாலா பக்கமும் கொண்டையைத் திருப்பி, கொதி கேத்தல்போலப் பார்வையால் புகைத்தாள்.

``உனக்கு பிஞ்சு உடம்பு பிள்ளை, கவலையை மண்டைக்குள்ள போடாத... அடுத்த குழந்தையும் ஆம்பிளையாத்தான் வருவான்…”

ஆறுதல் சொல்ல வந்தவர்களின் பேச்சு, நேரம் போகப்போக அங்கு அசட்டுக் கதைகளாக மாறிக்கொண்டிருந்தன.

இரவு நெருங்கும்போது கடல் மீண்டும் மிரட்டத் தொடங்கியது. முதல்நாள் நினைவுகள் நீதனுக்கு வானில் பெரும்பூதமாக எழுந்து நிற்பதுபோல தெரிந்தன. நட்சத்திரங்கள் அச்சத்தைத் தந்தன. சுருக்குப் போடுவதற்கு கழுத்தை நோக்கி எறியப்பட்ட வடக்கயிறு போல, படகைச் சுற்றி அலைகள் வளைய வளைய வந்து விழுந்துகொண்டிருந்தன. படகின் ஒவ்வோர் அசைவும், அது கடல் வாயில் அமிழ்வதுபோல நீதன் உணர்ந்தான்.

வெயில் கரைந்து, சாதுவான இருட்டு வானில் தெரிய ஆரம்பித்தவுடன், படகில் பல மூலைகளிலும் சீட்டாடத் தொடங்கினார்கள். பெண்களுக்குப் பேச்சு மாத்திரமே போதுமாயிருந்தது. ஆண்களுக்குப் பொழுதைப் போக்க, படகு போதுமாக இருக்கவில்லை. ஆட்கள் அதிகம் புழங்காத இடங்களைத் தேடிப்பிடித்து அங்கு ஒதுங்கிக்கொள்ளும் சோடிகளுக்கும் அந்தப் படகில் சில அத்தியாவசியத் தேவைகள் இருந்துகொண்டிருந்தன.

``கப்பல் காதல், கருவாடு மாதிரி, நாறிப்போயிடும்! மச்சான் தெரியும்தானே…”

தங்களுக்குள் பேசுவதைப்போல, படகின் பின் அணியப் பக்கமாக பர்மா பெண்ணொருத்தியுடன் தனியாக ஒதுங்கிய யாழ்ப்பாணத்து பெடியனுக்கு, படகின் மேல் தளத்திலிருந்தவர்கள் பூடகமாக – அதேவேளையில் எரிச்சலோடு - வாக்கு சொன்னார்கள் சிலர்.

படகில் எதிர்ப்படுபவர்கள் பலர், தங்களில் தொங்கும் சிறு ஆபரணம்போல வானொலிப்பெட்டியோடு திரிந்தார்கள்.

இரவு நெருங்கியபோது, படகின் மேல் தளத்தில் படுத்திருந்தவர்களில் ஒருவர் வானொலி வைத்திருந்த பெடியனைப் பார்த்து –

``ஒஸ்ரேலியா தமிழ் ரேடியோ ஏதாவது கேக்குதோ எண்டு ஸ்டேசனை உருட்டிப் பாராடா, கிட்ட வந்திட்டமெண்டால் கண்டுபிடிக்கலாம்.”

படகில் தங்களை அதிமேதாவிகளாக எண்ணிக்கொண்ட பலரில் இந்தக் கேள்வியைக் கேட்டவரும் ஒருவர். கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்த நீதனுக்கு இந்த உரையாடல் தெளிவாகக் கேட்டது.

``ஒஸ்ரேலியாவில தமிழ் ரேடியோ இருக்குதோ அண்ணே...”

வானொலி வைத்திருந்த பெடியன் தனது நியாயமான சந்தேகத்தை நடுக்கடலில் வைத்தே தீர்த்துவிட வேண்டும் என்று எண்ணினான்.

படகு
படகு

``முந்தி இருக்காட்டிலும், எங்களுக்கு முதல் போன போர்ட்காரன் தொடங்கியிருப்பானடா. கனடாவில எங்கட ஆக்களிட்ட சவப்பெட்டிக் கடையே இருக்குதாம். ஒஸ்ரேலியாவில ரேடியோ இருக்காதோ? விசர் கேள்வியள் கேட்காமல், உருட்டிப் பார். தெரியாவிட்டால், இஞ்ச என்னெட்ட தா...”

அடுத்தநாள் காலை வானம் வெள்ளை கட்டிக்கொண்டு, வித்தியாசமாகப் படகைப் பார்த்துச் சிரித்தது. அலைகளும் வயதுக்கு வந்த வெட்கத்தோடு, குனிந்துகொண்டே படகில் அடகில் ஒளிந்தன.

தூரத்தில் ஆஸ்திரேலியக் கொடியோடு பெரியதொரு - சாம்பல் நிற - கடற்படைக் கப்பல் படகை நோக்கி வந்துகொண்டிருந்தது.

(தொடரும்...)