Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | மஞ்சள் வயல் கனவு | பகுதி - 23

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

இந்த உலகின் எல்லா உண்மைகளின் பின்னணியிலும் மிகப்பெரிய பொய்களின் கள்ள வாசனை ஒட்டியிருப்பதுபோல, தவறுகளின் பாதைகளுக்கும் உண்மைதான் கதவு திறந்துவிடுகின்ற அரும்பணியையும் செய்துவிடுகிறது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | மஞ்சள் வயல் கனவு | பகுதி - 23

இந்த உலகின் எல்லா உண்மைகளின் பின்னணியிலும் மிகப்பெரிய பொய்களின் கள்ள வாசனை ஒட்டியிருப்பதுபோல, தவறுகளின் பாதைகளுக்கும் உண்மைதான் கதவு திறந்துவிடுகின்ற அரும்பணியையும் செய்துவிடுகிறது.

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

விருந்தினர் மண்டபத்திலிருந்து தனது அறைக்கு வந்தது நீதனுக்கு நினைவில்லை. உள்ளே கதவைப் பூட்டிவிட்டு, அதில் சாய்ந்து நின்றுகொண்டிருந்த தனது கால்களில் மெல்ல மெல்ல குளிர் படரத்தொடங்குவதுபோல உணர்ந்தான். மேலுடம்பு கொதித்தது.

அவனால் தன்னை நிலைப்படுத்தவோ, எதையும் சிந்திக்கவோ முடியவில்லை. தன்னுடலில் ஒரு படகின் ஆட்டத்தை உணர்ந்தான்.

“இரண்டு மூன்று நாள்கள் டைம் தா ராதா.”

சொல்லிவிட்டு எழுந்தபோது, அவள் இறுக்கி அணைத்துத் தந்த முத்தம், கன்னத்தின் வழியாக தனக்குள் கதவு திறந்து நுழைந்ததுபோலிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறையினுள் கனத்த இருட்டு பரவியிருப்பதுபோல் உணர்ந்த நீதன், மெல்ல நகர்ந்து சென்று கட்டிலில் அமர்ந்தான். வெளியில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களின் கூச்சல்கள் மங்கலாகக் காதில் விழுந்தன.

திடீரென்று அடிவயிற்றைப் பிசைந்து குடலை உருவியெடுத்து வெளியில் தள்ளியதுபோல வாந்தி வர, ஓடிச் சென்று கழிவறையில் முகம் கவிழ்த்தான். பொங்கலும், தின்ற பழசுகளும் கருந்திரவமாகப் பெருக்கெடுத்து ஓடின. கண்களின் முன்னால் நட்சத்திரங்கள் திசைக்கொன்றாகக் காற்றில் வெடித்தன. மூச்செடுப்பதற்கே அனுமதி வழங்காத வாந்தி ஆறாக ஓடியது.

உலகின் கடைசிக் கணமொன்றில், தான் உடைந்து திரவமாக ஓடுவதுபோலிருந்தது நீதனுக்கு.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

வெளியில் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

நீதன் வாந்தியெடுத்த சத்தம் கிட்டத்தட்ட `அல்பா கம்பவுண்ட்’ முழுவதற்கும் ஒலிபரப்பாகியதில், சக அகதிகளுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கூடவே நீதனின் அறைக்கு ஓடிவந்தார்கள். அறை உள்ளே பூட்டியிருந்தாலும், தங்களது சாவியைப் போட்டுத் திறந்து உள்ளே வந்த உத்தியோகத்தர்கள், நீதன் முழந்தாளில் கிடந்து வாந்தியெடுக்கும் காட்சியைப் பார்த்த மாத்திரத்திலேயே –

``ரெஸ்போன்ஸ்… ரெஸ்போன்ஸ்… கோர்ட் புளு” – என்று வானொலியில் கூவினார்கள்.

நீதனுக்குக் கண்கள் இருண்டன. வாந்தியெடுத்ததில் களைத்த உடம்பு, அருகிலிருந்த சுவரில் அவனை மீறிச் சாய்ந்தது. ஓடிச் சென்று அவனைத் தாங்கிய உத்தியோகத்தர்கள், வாயைத் தண்ணீரால் அடித்துக் கழுவினார்கள். கட்டிலில் கிடந்த துவாயை எடுத்து, முகத்தை ஒற்றியெடுத்தார்கள். மெதுவாகத் தூக்கி வந்து அவனைக் கட்டிலில் கிடத்தினார்கள்.

ஓடிவந்த தாதியர்கள், அறைக்குள் வந்த மாத்திரத்தில் ஜன்னலைத் திறந்து காற்றோட்டத்தைச் சீர்படுத்தினார்கள்.

பழைய உணவுகள் வயிற்றில் சிக்கலைக் கொடுத்திருக்கின்றன என்று கூறி, இரண்டு மாத்திரைகளை நீதனுக்கு ஊட்டிவிட்டார்கள்.

“இதற்கெல்லாம் எங்களை அழைக்கிறீர்களே” என்ற வெறுப்போடு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களைப் பார்த்து முகத்தை முக்கோணமாக வைத்தபடி அங்கிருந்து வெளியேறினார்கள்.

`அல்பா கம்பவுண்ட்’ சக அகதிகள், ஒவ்வொருவராக நீதனைப் பார்ப்பதற்கு வெளியே வரிசைகட்டினார்கள். தாதியர்கள் வெளியேறிய கையோடு ``அவன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று யாரோ சொன்னதும், அதை ஏற்றுக்கொண்டு எல்லோரும் அங்கிருந்து வெளியேறினார்கள்.

கதவை மெதுவாக மூடிச் சென்ற மாத்திரத்திலேயே, நீதன் சாதுவாகக் கண்களைத் திறந்தான். ஜன்னலின் வழியாக அறைக்குள் வழிந்த காற்று, உடலில் மோதி, பொட்டுப் பொட்டாக எரிவதுபோலிருந்து.

கொப்புளங்களால் தனது தோல் வெடிப்பதுபோலிருந்த முகத்தை ஒரு கணம் சோர்ந்த விரல்களினால் வருடிப் பார்த்தான்.

அதன் பிறகு, பேரச்சத்தோடு தலையைத் திருப்பி, பக்கத்தில் ஒட்டப்பட்டிருந்த அனீஸாவினதும் லியோவினதும் படத்தைப் பார்த்தான்.

வெளியில் சிறுவர்கள் கூச்சலிடுவது இப்போது பேரொலியாகக் கேட்டது. காதுக்குள் இறங்கி நின்று கத்துவதுபோலக் கேட்ட அந்தச் சத்தம், தன்னை நகைத்தெழுப்பும் கூச்சல்களாக அவனுக்கு முகத்தில் அறைந்தன.

எந்தத் தீர்மானத்துக்கும் முதல் மூலதனம் சுயநலம். அதுதான் வெற்றியில் ரகசிய விதி.

குற்றமே செய்யாமல், போர் செய்வது எப்படி முடியாத காரியமோ, அதுபோலத்தான் துரோகமே செய்யாமல், ஒரு வாழ்க்கைக்கு எங்களை ஒப்புக்கொடுப்பதும் மிகப்பெரிய பழி.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

இந்த உலகின் எல்லா உண்மைகளின் பின்னணியிலும் மிகப்பெரிய பொய்களின் கள்ள வாசனை ஒட்டியிருப்பதுபோல, தவறுகளின் பாதைகளுக்கும் உண்மைதான் கதவு திறந்துவிடுகின்ற அரும்பணியையும் செய்துவிடுகிறது.

நீதனின் கண்களுக்குள் மெது மெதுவாக இருள் நுழைந்துகொள்கிறது.

அரிவு வெட்டு முடிந்த வெட்டையான வயல் நடுவில் நீதன் அப்போதுதான் நித்திரைவிட்டு எழுகிறான். படுப்பதற்கு முன்னர் பஞ்சு உதிர்த்துவிட்டதுபோல முகில்களால் நிறைந்துகிடந்த வானம், இப்போது தலைகுனிந்து பார்த்தபடி கறுத்துக்கிடக்கிறது.

மெதுவான காற்று தூரத்தில் புழுதியைக் கிளப்பிக்கொந்தளிக்கிறது.

உடலை நகர்த்தி எழுந்தபோது, காலடியில் ராகவன் மாஸ்டர்.

“நீதன்…”

வார்த்தைகளைக் கோர்த்துக்கொள்ள முடியாமல் திணறி அழுகிறார்.

தான் படுத்திருந்த கயிற்றுக் கட்டிலிலிருந்து உதறி எழுகின்ற நீதனிலிருந்து செதில்கள் கொட்டுகின்றன. எழுந்தோடி வந்த ராகவன் மாஸ்டர், அழுதுகொண்டு நீதனின் உடம்பிலிருந்து செதில்களைத் தட்டிவிடுகிறார்கள். இறந்த தசைக்கழிவுகள் சருகுகளாக அவனிலிருந்து விழுகின்றன. ராகவன் மாஸ்டரையே நீதன் பார்க்கிறான்.

சற்று திரும்பிப் பார்த்தபோது,

புழுதியெழும்பும் காற்றுவழி அனீஸா கையில் ஒரு குழந்தையோடு நடக்கிறாள்.

லியோ அவளது கையைப் பிடித்தபடி போகிறான். ஒரு கணம் திரும்பிப் பார்த்தவள், நீதனுக்குக் கையசைத்துவிட்டு, திரும்பிப் பாராமலேயே நடக்கிறாள்.

“அங்க பார்க்காத நீதன், தயவுசெய்து, முதல் தடவையா கெஞ்சிக் கேட்கிறன். என்னைப் பார்” என்கிறார் ராகவன் மாஸ்டர்.

காலடியில் விழுந்த செதில்கள் குவியலாகக் கிடக்கின்றன.

இரண்டு கைகளாலும் நீதனின் தாடையைத் தாங்குகிறார்

“மாஸ்டர்” என்றபடி அவரது தோள்கைத் தொட்டபோது, ராகவன் மாஸ்டர் இரண்டு துண்டுகளாக உடைந்து நிலத்தில் விழுகிறார்.

“மாஸ்டர்” என்றபடி பாய்ந்து குனிந்த நீதன், கட்டிலில் வியர்த்து மூச்சு வாங்கியபடி எழுந்திருந்தான். வெளியில் இப்போது இருட்டியிருந்தது. தூரத்து வெளிச்சமும் ஜன்னலின் வழியாக அறையில் விழுகிறது. கூடவே கொஞ்சம் காற்றும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எழுந்து சென்று அறை லைட்டைப் போட்டான்.

தாதியர்கள் வைத்துவிட்டுப்போன மாத்திரைகளும், பிளாஸ்திக் குடுவையில் தண்ணீரும் மேசையில் அப்படியே இருந்தன.

களைத்துப்போன உடலில், மூச்சு வேகமாக ஏறி இறங்கியது. குடுவையிலிருந்த தண்ணீரை எடுத்து, தொண்டையில் நேரடியாக ஊற்றினான்.

தனக்குள் நொதித்துக்கிடக்கும் அமிலத்தைக் கரைத்துக்கொண்டுபோவதுபோல, தண்ணீர் வேகமாக உள்ளே இறங்கியது. உடல் மீண்டும் சமநிலை அடைவது போன்ற உணர்வு, தசையெங்கும் பரந்தோடுவது புரிந்தது.

கட்டிலில் இருக்கப்போனபோதுதான் பார்த்தான். தலைப்பக்கமாக சுவரில் ஒட்டியிருந்த படம் கிழித்து, கசக்கி, கட்டிலில் துண்டு துண்டாகக் கிடந்தது. மீண்டும் தலைசுற்றியது. குடித்த தண்ணீர் வயிற்றில் கொந்தளிப்பதுபோலிருந்தது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

கைகளைப் பார்த்தான். தனது வலது கை விரல்கள் எங்கும் சுவரைப் பிராண்டியதில் பெயின்ட் துகள்கள் ஒட்டிக்கிடந்தன.

தலையணைப் பக்கமாகக் கசங்கிப் பிய்ந்து கிடந்த படத்தை எடுத்து, மீண்டும் ஒட்டினான். கட்டிலில் விரித்துப் பார்த்தான். முடியவில்லை. அனீஸாவின் முகம் முற்றாகவே சிதைந்திருந்தது. கடைசியாக, வயல்வெளியில் தன்னைத் திரும்பிப் பார்த்துவிட்டுப்போன அந்தப் பார்வையை அந்தப் படத்தில் அவனால் காண முடியவில்லை. லியோவின் படம் முழுதாகவே கிழிந்து, அவனது கால் பகுதி மாத்திரம் கசங்கிக்கிடந்தது.

திடீரென்று குயிலனின் குழந்தையின் நினைவுகள் முகத்தில் அறைந்ததுபோலிருந்தது. கட்டிலிலிருந்து துள்ளியெழுந்தான். மீண்டும் வியர்த்தது.

வெளியில் ஆட்கள் நடக்கும் சத்தம் கேட்டது. இந்த அறை அவனுக்குத் திடீரென்று அந்நியமாகிவிட்டதுபோலிருந்து. இந்த அறையில் இதுநாள் வரைக்கும் தன்னுடனிருந்தவை அனைத்தும் வெளியேறிவிட்டதுபோலிருந்தது.

நீதன் அறைக்கு வெளியில் போனான். `அல்பா கம்பவுண்ட்’ இருளின் அமைதியில் தூங்கிக்கொண்டிருந்தது. ஒரேயொரு உத்தியோகத்தர் மாத்திரம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்.

பைப்பில் கொதிநீர் எடுத்து, தேநீர் ஊற்றினான். வெளியில் போனபோது, வழக்கமாக வரவேற்கும் காற்றுக்கூட அங்கில்லை. புழுக்கமாக இருந்தது. மைதானத்துக்கு இறங்கி, வட்டமாக நடக்கத் தொடங்கினான்.

முழு உடம்பிலும் ஏதோவொரு நிரந்தரப் பதற்றம் ஏறிவிட்டது போன்ற நடுக்கம் கால்களிலும் தெரிந்தது.

கையில்வைத்திருந்த தேநீர் குவளை நீதனின் கட்டுப்பாட்டை மீறி நடுங்கியது.

ராதா வந்துபோனது கொஞ்சம் கொஞ்சமாக நினைவில் மேலெழத் தொடங்கியது. அவளது கரங்கள் வருடிய தருணங்களும், கடைசியாகப் போகும்போது கன்னத்தில் முத்தமிட்டுச் சென்றதும் இப்போது அழுத்தமாக நினைவில் வரத் தொடங்கியது. மஞ்சள் நிற சல்வாரில் அவள் பக்கத்திலேயே நடந்து வருவதுபோலிருந்தது.

ராதாவோடு பேசிய அனைத்துமே நினைவிலிருந்து சுருள் சுருளாக இதயத்தில் தாவித் தாவி மேல் எழுந்துகொள்வதை நீதன் உணர்ந்தான்.

வாழ்க்கையின் அடுத்த அந்தத்திலிருந்து அவள் தன்னை அழைத்துக்கொள்ளும் சத்தங்கள் மிகத் தெளிவாக அவனுக்குக் கேட்கக்கூடியதாயிருந்தன.

அவளது குரலின் ஒலியும் தெளிவும் சீராக நீதனுக்குள் இறங்கின.

சற்று நிமிர்ந்து பார்த்தான். ஓங்கி வளர்ந்த இரும்பு மரங்கள்போல முகாம் வேலிகளில் தொங்கிய மின்குமிழ்கள் சீரான இடைவெளியில் வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி தெரிந்தன. இருளில் இன்னும் திமிராகவே நிமிர்ந்து நின்றன. ஜனநாயகம், நீதி, சமத்துவம் என்று சொல்லப்படுகின்ற எல்லா கண்றாவிகளையும் காறித்துப்பிவிட்டு, பொய்களின் பொதுமரமாக ஓங்கி வளர்ந்திருப்பதுபோல அந்தக் கம்பிவேலிகள் தெரிந்தன.

இந்த வேலிக்கு அப்பால் போய் சேர்வதற்கு எது செய்தாலும் தவறில்லை. எதுவுமற்ற என் கையில் எந்த ஆயுதத்தை ஏந்தினாலும் பிழையில்லை.

நீதனின் மனம் திடமானது. அந்த இரும்புவேலிகளைப்போலவே தானும் திமிரோடு நிமிரும் உணர்வு அவனுக்கும் இறுக்கமாகப் பரவியது.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism