Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `உலகின் மிக பாரமான சடலம்’ | பகுதி- 6

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு ( மாதிரி படம் )

இழப்புகளை நேரடியாக அனுபவிப்பதைவிட, அதைச் சந்தித்து மீண்டவர்களை எதிர்கொள்வது உணர்வுகளில் புதிரான பதற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `உலகின் மிக பாரமான சடலம்’ | பகுதி- 6

இழப்புகளை நேரடியாக அனுபவிப்பதைவிட, அதைச் சந்தித்து மீண்டவர்களை எதிர்கொள்வது உணர்வுகளில் புதிரான பதற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு ( மாதிரி படம் )
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

ஆஸ்திரேலியாவிலிருந்து நான்காயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள கொக்கோஸ் தீவுக்குப் படகை இழுத்துச் சென்ற கடற்படையினர், அங்கு எல்லோரையும் இறக்கிச் சோதனை போட்டார்கள். நூற்று நாற்பத்து ஆறு பேர் படகில் வந்திருப்பது, படையினர் சோதனை போட்டபோதுதான் வந்தவர்களுக்கும் தெரிந்தது.

வந்த படகைக் கரையிலிருந்து பார்த்தபோது, படகின் பெயர் `லூர்து மாதா’ – என்ற பெரிய எழுத்துடன், ஆட்களற்ற வெற்று மரப்பேழையாக கடலுக்குள் ஆடியபடி அமிழ்ந்து எழுந்தது. பேரதிசயம்மிக்க பயணத்தை நடத்தி முடித்த களைப்பில் மூச்சு வாங்கியது.

அனைவரையும் வரிசையில் நிற்கவைத்த படையினர், ஒரே கேள்வியைத்தான் கேட்டார்கள்.

``படகு எந்த இடத்திலிருந்து புறப்பட்டது?”

சொல்லிவைத்ததுபோல, அத்தனை பேரும் ``தெரியாது” – என்றார்கள். ஆஸ்திரேலியாவிடம் தங்களது முதலாவது பொய்யை அவிழ்த்துவைத்த திருப்தி எல்லோர் முகத்திலும் தெரிந்தது.

கடல் எல்லோரையும் மன்னித்து வழி அனுப்பிவைத்தது.

அகதிக்காரர்கள் சகலரும் பெர்த் வழியாக மெல்பேர்னுக்குக் கொண்டுவரப்பட்டார்கள். கடலிடமிருந்து மீட்டெடுத்த வாழ்வின் எச்சம், எல்லோரது முகங்களிலும் பிரகாசமாக ஒளிர்ந்தது.

குயிலனும் மனைவியும் - வரும் வழியில் - குழந்தையைத் தொலைத்த தகவல், கொக்கோஸ் தீவிலேயே அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது. ஒழுங்கு செய்யப்பட்ட சிறப்பு மருத்துவர், இருவருக்கும் அருகிலிருந்து மெல்போர்ன் வரை வந்தார். வரும் வழியெல்லாம், குயிலனின் மனைவியை மிகக்கவனமாக சோதனை செய்து, குளிசைகளைக் கொடுத்து விழுங்கச் சொன்னார்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
மாதிரி படம்
மெல்பேர்ன் வந்தவர்களில் இருபத்து ஆறு தனி ஆண்களையும் `அல்பா’ கம்பவுண்டில் தனி அறைகளில் போட்டார்கள். குடும்பங்களுக்கும் தனிப்பெண்களுக்கும் `சார்ளி’ கம்பவுண்டில் அறைகள் கொடுத்தார்கள்.

இவர்கள் வந்த நாள், எனக்கு இன்னமும் நல்ல நினைவிருக்கிறது. நான் வேலையை முடித்து, புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தபோது, குடிவரவு அமைச்சு அலுவலகத்திடமிருந்து அவசர அழைப்பு வந்தது.

``நாளை காலை வருவதாக இருந்த, பேர்த் அகதிகள் விமானம் இன்று மாலையே தரைதட்டியிருக்கிறது. எல்லோரும் இன்னும் ஓரிரு மணித்தியாலங்களில் முகாமுக்கு வந்துவிடுவார்கள்.”

சொன்ன சேதியில், தகவலைவிட வழக்கம்போல உத்தரவு தொனிதான் அதிகம் நனைந்திருந்தது.

வந்த அகதிகளில் பலர் தமிழர்கள் என்பதாலும், அந்த இரவில் போதிய மொழிபெயர்ப்பாளர்கள் பணியில் இல்லாத காரணத்தினாலும், என் கடன் அப்பணி செய்து கிடக்க வேண்டியதாகிவிட்டது.

முதலில் நீதன்தான் என்னிடம் வந்து பேசினான். அடர்ந்த தாடியும் இளைத்த கண்களும் அவனது முகத்துக்குச் சம்பந்தமே இல்லாத தோற்றத்தைக் காண்பித்தது.

அகதிகள் ஒவ்வொருவரையும் குடிவரவு அதிகாரிகள் அழைத்து, முதற்கட்ட குறிப்புகளைக் கேட்டு, கோப்புகளில் எழுதினார்கள். தனித்தனியாகப் படமெடுத்தார்கள். விரல் அடையாளங்களைப் பதிவு செய்தார்கள். கட்புல ரேகையைப் பதிவுசெய்வதற்கு ஒவ்வொருவரின் தாடைகளையும் ஒரு கருவியில் பொருத்தி, கண்களுக்குள் வெளிச்சமடித்தார்கள்.

நாடிழந்து வந்தவர்களுக்கு கடவுச்சீட்டு இருக்கவில்லை. பொருந்தச் சொல்வதற்கு பொருத்தமான பொய் இருக்கவில்லை.

ஆனால், சொந்தமாகப் பெயர் இருந்தது. ஆனால், குடிவரவு அமைச்சு, எல்லோருக்கும் மூன்று இலக்க எண் வழங்கி, அதுவே முகாமில் அவர்களின் அடையாளம் என்றது.

``அண்ணே, வாற வழியல குழந்தையைத் தவறின தாயும் தகப்பனும் எங்களோட வந்திருக்கினம். தமிழ் ஆக்கள்தான். நீங்கள் கொஞ்சம் இமிகிரேசனோட கதைக்கிறதுக்கு உதவி செஞ்சா நல்லாயிருக்கும்.”

தனக்கான உதவியில்லாமல், இன்னொரு குடும்பத்துக்காக வந்து விநயமாகக் கேட்டு நின்றது, முதல்நாளே நீதன் மீது எனக்குப் பரிவையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

படகு கவிழ்ந்து குழந்தையைப் பறிகொடுத்த தமிழ்க் குடும்பமொன்று வந்திருப்பதாக, எனக்கு முதலே தகவல் வந்திருந்தது. ஆனால், பலர் வந்திருந்த நெருக்கடியான சூழ்நிலையில், அதை மறந்திருந்தேன். நீதன் வந்து சொன்னபோது, அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல், மனம் சஞ்சலமானது.

நீதன் என்னோடு பேசிக்கொண்டு நிற்கும்போதே, கணவனும் மனைவியுமாக மதிப்பிடக்கூடிய - மெலிந்த தோற்றமுடைய – வெளுத்த கண்களுடைய - இருவர் அருகில் வந்தார்கள்.

``இவயள்தான் அண்ணே…”

இழப்புகளை நேரடியாக அனுபவிப்பதைவிட, அதைச் சந்தித்து மீண்டவர்களை எதிர்கொள்வது உணர்வுகளில் புதிரான பதற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.

ஒரு முகாம் அதிகாரியாக என்னைப் பாராமல், தங்கள் உணர்வுகளை இறக்கிவைத்துவிடக்கூடிய தங்கள் மொழி பேசுபவனாக அவர்கள் எனை நோக்கிய தவிப்பின் வெக்கை கண்களில் தெரிந்தது.

ஆனால், எனது சீருடை என்மீது தடித்துக்கிடந்தது.

புதிய அகதிகளைக் கதிர்வீசி சோதனை செய்வதற்கு, அன்று மேலதிக பாதுகாப்பு அதிகாரிகளும் குடிவரவு அலுவலர்களும் பொலீஸ் புலனாய்வுத்துறையினரும்கூட அவ்விடத்தில் குவிந்திருந்தார்கள். குடிவரவு அமைச்சின் நிர்வாகத்தில் இயங்கும் தடுப்பு முகாம்கள் எனப்படுபவை ஆஸ்திரேலியாவின் எந்த மாநிலத்திலும், மாநில அரசின் கீழ் வருபவை அல்ல. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுபவை. ஆக, இங்கு யாராவது அகதிக்கு ஒக்ஸிஜன் மேலதிகமாக தேவையென்றால்கூட, மத்திய அரசு அதிகாரிகள்தான் `சிலிண்டர் கொடுக்கலாம்’ என்று அனுமதி வழங்கவேண்டும்.

புதிய அகதிகளில் வித்தியாசமான நடத்தைகள் தென்படுகின்றனவா... கொண்டுவந்த பொதிகளில் முகாமுக்கு ஒவ்வாத பொருள்கள் உள்ளனவா... பயங்கரவாதிகள் யாராவது அகதிகள் என்ற போர்வையில் வந்து இறங்கியிருக்கிறார்களா? முக்கியமாக, ஆள் கடத்தல்காரர்கள் - படகை ஓட்டிவந்தவர்கள் - இந்தக் கூட்டத்தில் இருக்கிறார்களா என்றறிய புலனாய்வுக்காரர்கள் மொய்த்தபடி நின்றார்கள். பிரத்யேகமாக அங்கு நின்றுகொண்டிருந்த நான்கு அதிகாரிகள், மண்டபத்தில் நடைபெறும் அத்தனை நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தார்கள்.

``உங்கட முழுப்பெயர் என்னவாம்?”

``குலசேகரம் குயிலன்.”

குடிவரவு அதிகாரிகளின் முன்னிலையில் மொழிபெயர்ப்புக்கு உதவி செய்துவிட்டு, `சார்ளி’ கம்பவுண்டின் ஏழாவது அறையில் தங்கவைப்பதற்கு குயிலனையும் மனைவியையும் ஒரு பெண் அலுவலரோடு அனுப்பிவைத்தேன்.

அன்று வீடு திரும்பும்போது, முகாமில் இடம்பெறப்போகும் உலகின் மிகக்கொடிய நிகழ்வொன்றுக்கு நான் சாட்சியமாவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை.

நீதன், குயிலன் குடும்பம் உட்பட பலரோடு நடுக்கடலில் வெடித்து மூழ்கிய படகிலிருந்தவர்களின் சடலங்கள் இரண்டு நாள்களாக இந்தோனேசியாவில் கரையொதுங்கத் தொடங்கியிருந்தன.

கடலில் கிடந்து உப்பிப் பெருத்த குயிலனின் குழந்தை உட்பட பலரது சடலங்கள் இந்தோனேசிய பண்டபக் கடற்கரையிலிருந்து மூன்றரை கிலோமீற்றர் தூரத்தில் ஒருநாள் காலை மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. பொலீஸாருக்குத் தகவல் கொடுக்க, அவர்கள் அம்புலன்ஸ் ஒழுங்கு செய்து வந்து, பத்திரமாக தூக்கிச் சென்றிருக்கிறார்கள். மனிதாபிமான அடிப்படையில், இந்தோனேசிய அரசு இந்தத் தகவலை ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சுக்கு அறிவித்தது. இதையடுத்து, மெல்போர்ன் முகாமிலிருந்த குழந்தையின் பெற்றோருக்கு செய்தியைத் தெரியப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

முகாம்
முகாம்
மாதிரி படம்

குடிவரவு அமைச்சிலிருந்த எனது நெருங்கிய நண்பன், காலை குறுந்தகவல் அனுப்பி, இதைச் சொன்னான். காயப்பட்ட கடலில் சீழ் வடிவதுபோலிருந்தது. ஆறு மாத சிசுவை விழுங்கிய – வெறிபிடித்த - கடலை உலகின் எல்லா மொழிகளிலும் சபிக்கலாம்போலிருந்தது.

வேலைக்கு வந்தேன். குடிவரவு அமைச்சு அலுவலகத்தில் வழக்கமான காலை சந்திப்பு இடம்பெற்றது. எதிர்பார்த்தபடி, குழந்தையின் தகவல் தெரிவிக்கப்பட்டது. குயிலன் குடும்பத்தை, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு அறை ஒன்றுக்கு அழைத்து, செய்தியைச் சொல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அதிகாரத் தரப்புக்கு இது வெறும் செய்திதானே!

கூடுதலாக இன்னொரு அறிவித்தலும் அந்தச் சந்திப்பில் சொல்லப்பட்டது.

குழந்தையின் சடலம் இந்தோனேசிய அரசு ஏற்பாட்டில் அன்றைய தினம் அடக்கம் செய்யப்படவிருந்தது.

குழந்தையின் இறுதி நிகழ்வை முகாமிலிருக்கும் பெற்றோர் பார்ப்பதற்கு விரும்பினால், அதனை `ஸ்கைப்’ மூலம் பெற்றோருக்கு காண்பிக்க தாங்கள் தயார் என்று இந்தோனேசிய தரப்பு `ஸ்கைப்’ விவரங்களை ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சிடம் வழங்கியிருந்தது.

விவரங்கள் அடங்கிய பிரதியை அதிகாரி ஒருவர் மேசையின் எதிர்ப்புறத்திலிருந்து என்னை நோக்கித் தள்ளினார். இந்தோனேசிய நேரம் காலை ஒன்பது மணிக்குச் சடலங்களை அடக்கம் செய்யப்போவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

`சார்ளி’ கம்பவுண்டிலிருந்து குயிலனும் மனைவியும் மதியமளவில் குடிவரவு அமைச்சின் சந்திப்புகள் நடைபெறும் பிரத்யேக அறைக்கு அழைத்துவரப்பட்டனர். இருவரது முகங்களும் நான்கு நாள்களில் ஓரளவுக்குத் தேறியிருந்தன. களைப்பு தீராத கண்களில், குழந்தையின் இழப்பு மாத்திரம் அழியாத துயர் வரிகளாக தெரிந்துகொண்டேயிருந்தன. படகில் தங்கள் குடும்பங்களைப் பறிகொடுத்த ஏனைய ஏழு குடும்பங்களும் வெவ்வேறு சந்திப்பு அறைகளுக்கு, அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஒவ்வோர் அறைக்கு வெளியிலும் உள்ளேயும் மேலதிக உத்தியோகத்தர்களும் ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவ தாதியும் வெளியில் நின்றுகொள்வது என்று தயார்செய்யப்பட்ட திட்டத்தில் குறித்துக்கொண்டோம்.

ஆஸ்திரேலிய நேரப்படி மதியம் பதினொன்றே முக்காலுக்கு ஒவ்வொரு குடும்பமும் குறிப்பிட்ட அறைக்கு அழைக்கப்பட்டனர்.

குயிலனையும் மனைவியையும், சந்திப்பு அறையிலிருந்த குடிவரவு அதிகாரியிடம் அழைத்துப் போனேன்.

``உங்கட வீட்டில எல்லாரும் நல்லா இருக்கிறாங்களா அண்ணா?”

வந்த நாள் முதல் தங்கள் துயரங்களையே சொல்லிச் சொல்லி அழுவது போன்ற குற்ற உணர்வினால் தீண்டப்பட்ட குயிலனின் மனைவி, தனது காயப்பட்ட மனதை இயன்றவரை மறைத்துக்கொண்டு அந்தக் கேள்வியை கேட்டாள்.

என்ன பதில் சொல்லிட முடியும் அவளுக்கு?

முகாமில் கொடுத்த மலிவான `டைலி’ சோப்பு குயிலனிலும் மனைவியிலும் ஆஸ்திரேலிய அகதி வாசத்தைப் பூசியிருந்தது.

குழந்தை தொடர்பான விவரத்தையும், தங்களது மனநிலை சார்ந்த பிரச்னைகளையும் நான்கு நாள்களாகத் தொடர்ந்து கேட்டுக் கேட்டு, கவனிப்பதாகக் காண்பித்துக்கொண்ட, முகாம் நிர்வாகத்தின் இன்னொரு சந்திப்புத்தான் இதுவும் என்ற எதிர்பார்ப்பில் இருவரது கண்களிலும் சலிப்பு தெரிந்தது.

சந்திப்பு அறைக்குள் சென்ற நான்காவது நிமிடத்தில் குடிவரவு அதிகாரி சொன்ன செய்தியால் குயிலனின் மனைவி மேசையில் தலையை அடித்துக்கொண்டு குழறி அழுதாள்.

குயிலன் தனது இரண்டு கைகளாலும் நெஞ்சில் அறைந்து ஓலமிட்டான். அருகிலேயே நின்றுகொண்டிருந்த நான், குயிலனைத் தாங்கிக்கொண்டேன். இன்னொரு பெண் அதிகாரி, குயிலனின் மனைவியை - தலையில் காயம் ஏற்பட்டுவிடாமல் - தன்னோடு அணைத்து, அழுவதற்கு அனுசரணையாயிருந்தாள்.

எதிர்பார்த்த காயமென்றாலும் வலிகளைத் தாண்டிச் செல்ல வாழ்க்கை எந்த குறுக்குவழியையும் கண்டுபிடித்துவிடவில்லையே...

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
மாதிரி படம்

உலகின் மிகக்கொடூரமான மரண வீட்டின் சாட்சியாக நானும் அங்கு நின்றுகொண்டிருந்தேன்.

``உங்களுக்கு இறுதி நிகழ்வைப் பார்க்க விருப்பமில்லையென்றால், தவிர்த்துவிடலாம். இது முற்ற முழுதாகவே உங்களது முடிவு.”

சட்டத்தையும் மனிதாபிமானத்தையும் இரு கண்களாக வைத்துக்கொண்டு குடிவரவு அதிகாரி தெரிவு கொடுத்தாள்.

``ஐயோ….நான் என்ர பிள்ளைய பாக்கவேணும்... என்ர பிள்ளை…”

குயிலன் மனைவியின் குரலற்ற ஓலம் வெறும் கேவல்களாக வார்த்தைகளைக் கொட்டியது.

நான் கணினியில் ஸ்கைப் தொடர்பை ஏற்படுத்தினேன். மறுமுனையில், இந்தோனேசிய அதிகாரி ஒருவர் இறுதி நிகழ்வில் பொருத்தப்பட்டிருந்த கமராவை ஸ்கைப்பில் இணைத்து தெளிவான காட்சியைத் திரையில் கொண்டுவந்தார்.

வெள்ளைத்துணியில் சுற்றப்பட்ட சடலங்கள் வரிசையாக பெட்டிகளில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. பார்த்த மாத்திரத்தில் குயிலனின் மனைவி வீறிட்டாள். தன் குழந்தையைக் காணும் முன்னமே, அவளது பெற்ற உடம்பு பதற்றத்தில் நடுங்கியது. பக்கத்திலிருந்த மற்ற அறைகளிலும் குழறும் சத்தங்கள் கேட்டன.

மெதுவாக அசைந்து சென்ற கமரா, ஒவ்வொரு சடலத்தின் முகத்தையும் சிறிது நேரம் காண்பித்தது.

ஈற்றில், அந்த சிறிய மரப்பேழையின் மீது கமராவின் கண்கள் விறைத்துப்போய் நின்றன. தான் அகதியென்றே தெரியாமல் மூச்சடைத்துப் பலியாகிப்போன பிஞ்சுச் சடலம் பொதி செய்யப்பட்டுக் கிடந்தது. உலகின் மிகக்குறைந்த காட்சிகளை – மனிதர்களை - ஒரே ஒரு கடலை - பார்த்ததோடு கண்களை மூடிக்கொண்ட அக்குழந்தை, கடைசியாகச் சிந்திய சிரிப்பின் பாதி இன்னமும் கன்னங்களில் மிச்சமிருந்தது. இந்த உலகில் யாரையும் சபிக்காமலேயே சென்றுவிட்ட அதன் மன்னிப்பு, அந்த அறையில் நின்றுகொண்டிருந்த எல்லோரையும் முகத்தில் அறைந்தது. எனக்கு நெஞ்சில் மூச்சு போதாது போன்று உள்ளே இரைந்துகேட்டது. காதுகள் அடைத்துப்போயின.

குயிலனின் மனைவி மூர்ச்சையாகி விழுந்தாள்.

(தொடரும்...)