Published:Updated:

`கவனிக்கத்தக்க நாடுகளின் பட்டியலில் இந்தியா?'- சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம் பரிந்துரை

அமெரிக்க நாடாளுமன்றம்

'இந்தியாவை கவனிக்கத்தக்க நாடுகளின் பட்டியலில் அமெரிக்க அரசு வைக்க வேண்டும்' என மத சுதந்திரத்துக்கான அமெரிக்க அரசின் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

`கவனிக்கத்தக்க நாடுகளின் பட்டியலில் இந்தியா?'- சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம் பரிந்துரை

'இந்தியாவை கவனிக்கத்தக்க நாடுகளின் பட்டியலில் அமெரிக்க அரசு வைக்க வேண்டும்' என மத சுதந்திரத்துக்கான அமெரிக்க அரசின் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

Published:Updated:
அமெரிக்க நாடாளுமன்றம்

இந்தியாவில், கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் வரை நாடு தழுவிய அளவில் அணையா நெருப்பாக எரிந்துவந்தன சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்கள். சி.ஏ.ஏ எதிர்ப்பாகத் தொடங்கிய போராட்டங்கள், அதனோடு தொடர்புடைய என்.ஆர்.சி மற்றும் அதற்கு முன்னோட்டமான என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராகவும் பரிணமித்தன. சர்வதேச அளவில் கவனம்பெற்றன. ஐ.நா சபை, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், அமெரிக்க நாடாளுமன்றம் எனப் பல சர்வதேச அமைப்புகளிலும் சி.ஏ.ஏ விவகாரம் எதிரொலித்தது.

சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்கள்
சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்கள்

ஆனால் சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆரை அமல்படுத்துவதிலிருந்து ஒரு அங்குலம்கூட பின்வாங்கப் போவதில்லை என மத்திய அரசு அறிவித்திருந்தது. என்.பி.ஆர் பணிகளை மேற்கொள்ள பல்வேறு மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், சிக்கலான ஒரு அரசியல் சூழலே இந்தியாவில் நிலவிவந்தது. இதற்கு மத்தியில்தான் சென்சஸ் நடவடிக்கையோடு என்.பி.ஆர் பணிகளையும் மேற்கொள்ள அரசாணை வெளியிட்டு, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்திருந்தது மத்திய அரசு. சி.ஏ.ஏ வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதிலிலும் நாடு தழுவிய என்.ஆர்.சி அவசியமானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. என்.பி.ஆர் குறித்தான அச்சம் வழக்கமான சென்சஸ் பணிகளையும் பாதிக்கக்கூடும் என்கிற அச்சமும் நிலவிவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமானதால், நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களும் தற்காலிகமாகப் பின்வாங்கப்பட்டன. சென்சஸ் பணிகளும் தள்ளிவைக்கப்பட்டன.

கடந்த டிசம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்காக சி.ஏ.ஏ சட்டத்தின் வரைவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. அப்போதிலிருந்தே சி.ஏ.ஏ தொடர்பான சர்ச்சைகள் எழ ஆரம்பித்துவிட்டன. சி.ஏ.ஏ சட்டம் நிறைவேற்றப்பட்டால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது தடைகள் விதிக்க வேண்டும் என, சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம், அமெரிக்க அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இதே அமைப்பு, தற்போது இந்தியாவை கவனிக்கத்தக்க நாடாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்க அரசுக்குப் பரிந்துரைக்கிறது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தி தீர்ப்பு, சி.ஏ.ஏ சட்டம், அதனை எதிர்த்த போராட்டங்கள், அவற்றைத் தொடர்ந்து டெல்லியில் ஏற்பட்ட வன்முறை ஆகியவை இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

காஷ்மீர்
காஷ்மீர்

சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம், கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்க அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இதில் இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். கட்சி சார்பற்ற அமெரிக்க அரசின் சுயாதீனமான அமைப்பாக இது குறிப்பிடப்படுகிறது. சர்வதேச அளவில் மத சுதந்திரம் தொடர்பான விஷயங்களைக் கண்காணித்து, அமெரிக்க அரசுக்கு பரிந்துரைகள் வழங்கவேண்டியது இந்த அமைப்பின் பணி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரதமர் மோடிக்கு விசா மறுத்த அமைப்பு:

கடந்த 2002-ம் ஆண்டு, மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இதில், முஸ்லிம்கள் இலக்கு வைத்துத் தாக்கப்பட்டனர். அப்போது, குஜராத் அரசும் காவல்துறையும் வன்முறையை ஊக்குவிக்கும் விதத்தில் மெத்தனமாகச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குஜராத் நீதித்துறையும் ஊழல் மலிந்து மெத்தனமாகச் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, குஜராத் வன்முறை தொடர்பான வழக்குகளும் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மோடி அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று இதே ஆணையம் பரிந்துரைத்திருந்தது. பிரதமர் ஆகின்ற வரையில் மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டேவந்தது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தற்போது, இந்தியா தொடர்பான அறிக்கையை இந்த ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் “2019-ம் ஆண்டு இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது; மத சுதந்திரம் குறைந்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் அரசால் காப்பாற்றப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கும்பல் படுகொலைகள் (Mob Lynching) குறிப்பாக பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்கள் அதிகமாக அரங்கேறியுள்ளன. கும்பல் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் இந்திய அரசு செயல்படவில்லை. சி.ஏ.ஏ சட்டம் மூலம் முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்துள்ளது. நாடு முழுவதும் சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆர் அமல்படுத்தப்படுகிறபோது, இது சிறுபான்மையினருக்கு பாதகமாக அமையும். கேரளா போன்ற மாநிலங்கள் இதை அமல்படுத்த மறுப்பு தெரிவித்துள்ளன.

சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்கள் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டன. ’போராட்டக்காரர்களை பிரியாணியால் அல்லாமல் துப்பாக்கிக் குண்டுகளால் பழி தீர்ப்போம்’ என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது இந்திய அரசு. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பிப்ரவரி மாதம் ஏற்பட்ட வன்முறையின்போது, உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் டெல்லி காவல்துறை ஒருதலைபட்சமாகச் செயல்பட்டுள்ளது. என்.ஜி.ஓ-க்கள் நிதிகளைப் பெறுவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன” என்றுள்ளது.

USCIRF அறிக்கை
USCIRF அறிக்கை

அந்த ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகள்:

  • சர்வதேச மத சுதந்திரச் சட்டத்தின் கீழ் இந்தியாவை கவனிக்கத்தக்க நாடு என்று அறிவிக்க வேண்டும்.

  • விதி மீறலில் ஈடுபடும் இந்திய அரசு நிறுவனங்கள், அதிகாரிகள்மீது தடைகள் விதிக்க வேண்டும்.

  • அமெரிக்கத் தூதரகம் மற்றும் இந்திய விசாரணை அமைப்புகள், அதிகாரிகள் உடனான செயல்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும்.

  • வன்முறை மற்றும் வெறுப்புப் பேச்சுகளைக் கண்காணிக்க காவல்துறை உதவியோடு சிவில் அமைப்புகளுக்கான நிதியுதவிகளை அதிகரிக்க வேண்டும்.

இதே அமைப்பைச் சேர்ந்த கேரி எல். போயர், டென்சின் தோர்ஜி மற்றும் ஜானி மூரே ஆகிய உறுப்பினர்கள், ஆணையத்தின் பரிந்துரையோடு மாறுபடுவதாக தங்களுடைய கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர். அதில், இந்தியாவை கவனிக்கத்தக்க நாடுகளின் பட்டியலில் சேர்க்க ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். சீனா, வட கொரியாவோடு ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலை அவ்வளவு மோசமடைந்துவிடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்தியா, பன்மைத்துவம் வாய்ந்த பல மதங்களும் இணக்கமாக வாழ்கிற நாடு. இந்தியா, நிச்சயம் என்றுமே சர்வாதிகாரத்தை நிராகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசு, இந்த அமைப்பின் பரிந்துரைகளை ஆரம்பம் முதலே நிராகரித்துவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism