அமெரிக்கா: ட்ரம்ப் உரை... துப்பாக்கிச்சூடு; ஆதரவாளர்களால் கலவரபூமியான செனட்! - நடந்தது என்ன?

செனட் அவையில் பைடனுக்கு சான்று அளிக்கும் நிகழ்வு நடந்தபோது, ட்ரம்ப் ஆதரவாளர்கள் செனட் நோக்கி வந்தனர். அவர்கள் பைடனின் வெற்றிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இந்தச் சூழலில் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதிபராகும் பைடன்; விட்டுத் தராத ட்ரம்ப்!
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன், ட்ரம்ப்பை வீழ்த்தி வெற்றிபெற்றார். ஜனவரி மாதம் 20-ம் தேதி புதிய அதிபராக பதவியேற்கிறார் பைடன். இந்தநிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னிலுள்ள செனட் கட்டடத்தில் இன்று நடைபெற்றுவந்தது. அவை உறுப்பினர்கள் முன்னிலையில் பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகள் நடந்துவந்தன.
முன்னதாக பதவியேற்பு நிகழ்வு குறித்தும் சில அறிவிப்புகள் வெளியாகின. அதிபர் பதவியேற்பு நிகழ்வுக்கான குழு, விழா வழிமுறைகளை வெளியிட்டது. அதன்படி வழக்கமாக நடைபெறும் நீண்ட அணிவகுப்புக்கு பதிலாக குறுகிய நேர அணிவகுப்பு நடைபெறும் என்றும், அதுவும் சமூக இடைவெளியுடன்தான் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. மேலும், பைடனின் ஆதரவாளர்கள் வாஷிங்டன் நோக்கி வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட விழா ஏற்பாட்டாளர்கள், அமெரிக்கா முழுவதும் விர்ச்சுவல் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
ட்ரம்ப்பின் உரையும்ஆதரவாளர்களின் கலவரமும்!
இந்தநிலையில், செனட் அவையில் பைடனுக்குச் சான்று அளிக்கும் நிகழ்வு நடந்தபோது ட்ரம்ப் ஆதரவாளர்கள் செனட் நோக்கி வந்தனர். அவர்கள் பைடனின் வெற்றிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இந்தச் சூழலில் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டினார். மேலும், தேர்தல் முடிவுகளை தான் ஏற்கப்போவதில்லை என்றும் அறிவித்தார். ட்ரம்ப்பின் இந்தப் பேச்சு ஜனநாயகத்துக்கு எதிராக இருப்பதாக பைடனின் ஆதரவாளர்கள் கடுமையாகக் குற்றம்சாட்டினர்.

மறுபுறம் ட்ரம்ப்பின் இந்த உரை அவரின் ஆதரவாளர்களை உணர்ச்சிவசப்படவைத்தது. இதனால் செனட் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் அவைக்குள் நுழையும் வண்ணம் நகரத் தொடங்கினர். போலீஸார் அவர்களைத் தடுத்தனர். இதனால் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும் போலீஸாருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸாரை மீறி பலர் செனட் வளாகத்துக்குள் நுழைந்தனர். இதனால், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்தார்.

நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதை அடுத்து தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். எஃப்.பி.ஐ அதிகாரிகளும் களமிறக்கப்பட்டனர். செனட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அவையில் புகுந்த ஒரு கலவரக்காரர் அவைத் தலைவரின் உரை மேடையை கையில் தூக்கிச் சென்றதும், உறுப்பினர்கள் இருக்கையிலிருந்து அட்டகாசம் செய்தனர். அவை கட்டடத்தின் உள்ளேயே ட்ரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். ஜன்னல்கள் உடைக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழல் உருவானது.
ட்ரம்ப் சமூக வலைதள கணக்குகள் முடக்கம்!
இதற்கிடையே ட்ரம்ப் பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்ததாகக் குற்றசாட்டு எழுந்தது. ஆனால், ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் பேசிய வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றினார். தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் போராட்டம் தொடர்பாக சில ட்வீட்களையும் பதிவிட்டார். `அமெரிக்கப் பாராளுமன்றப் பகுதியில் இருப்பவர்கள் அமைதியை நிலைநாட்டும்படி கேட்டுக்கொள்கிறேன். வன்முறை வேண்டாம்’ என்ற ட்வீட்டும் இதில் அடக்கம்.
அவரின் கருத்தும், அவர் பதிவிட்ட வீடியோவும் வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்த காரணத்தால், ட்விட்டர் நிர்வாகம் அவற்றை நீக்கியது. மேலும், விதிமுறைகளை மீறியதாக அவரின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு 12 மணி நேரத்துக்கு முடக்கப்பட்டது. மேலும், ஃபேஸ்புக் நிறுவனமும் அந்த வீடியோவை நீக்கியதுடன், அவரது கணக்கை 12 மணி நேரத்துக்கு முடக்கியிருக்கிறது. இந்தநிலையில், தற்போது இன்ஸ்டாகிராம், ட்ரம்ப் கணக்கை 24 மணி நேரத்துக்கு முடக்குவதாக அறிவித்திருக்கிறது.
இந்தக் கலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் இந்தியப் பிரதமர் மோடி, ``வாஷிங்டனில் நடக்கும் கலவரம் தொடர்பாக கேள்விப்பட்டு வருத்தமுற்றேன். அமைதியான வகையில் அதிகார மாற்று நடைபெற வேண்டும். சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிவதை அனுமதிக்க முடியாது” என்றார்.