Published:Updated:

உலகையே ஆண்ட நாடு... இன்று ஒரே ஆண்டில் மூன்று பிரதமர்கள்! - என்ன பிரச்னை இங்கிலாந்தில்?

போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக்

ஒரே ஆண்டில், போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக் என மூன்று பிரதமர்களைக் கண்டிருக்கிறார்கள் இங்கிலாந்து மக்கள். அடுத்தடுத்து போரிஸ், லிஸ் ட்ரஸ் பதவி விலகியதற்கும், ரிஷி சுனக் புதிதாக பதவியேற்றதற்கும் காரணங்கள் என்னென்ன? அலசுவோம்.

உலகையே ஆண்ட நாடு... இன்று ஒரே ஆண்டில் மூன்று பிரதமர்கள்! - என்ன பிரச்னை இங்கிலாந்தில்?

ஒரே ஆண்டில், போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக் என மூன்று பிரதமர்களைக் கண்டிருக்கிறார்கள் இங்கிலாந்து மக்கள். அடுத்தடுத்து போரிஸ், லிஸ் ட்ரஸ் பதவி விலகியதற்கும், ரிஷி சுனக் புதிதாக பதவியேற்றதற்கும் காரணங்கள் என்னென்ன? அலசுவோம்.

Published:Updated:
போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக்

இங்கிலாந்தின் புதிய பிரதமராகத் தேர்வாகியிருக்கிறார் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக். மன்னர் மூன்றாம் சார்லஸின் அழைப்பை ஏற்று பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் சென்ற ரிஷி சுனக், மன்னரின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். இந்த நிலையில், ஒரே ஆண்டில், போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக் என மூன்று பிரதமர்களைக் கண்டிருக்கிறார்கள் இங்கிலாந்து மக்கள். அடுத்தடுத்து போரிஸ், லிஸ் ட்ரஸ் பதவி விலகியதற்கும், ரிஷி சுனக் புதிதாக பதவியேற்றதற்கும் காரணங்கள் என்னென்ன? அலசுவோம்.

 போரிஸ் ஜான்சன் - ரிஷி சுனக்
போரிஸ் ஜான்சன் - ரிஷி சுனக்

போரிஸ் ஜான்சனின் பதவி விலகல்!

கொரோனா பரவல், பணவீக்கம், வரி உயர்வு, விருந்து சர்சை என சிக்கிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக சொந்தக்கட்சி எம்.பி-க்களே போர்க்கொடி தூக்கினர். கடந்த ஜூலையில் நிதியமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்ட அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். `எல்லாவற்றையும் எதிர்த்து போராடுவேன்' என சூளுரைத்த போரிஸ், அடுத்த இரண்டு நாள்களில், `பதவி விலக நேரம் வந்துவிட்டது' எனக் கூறி பிரதமர் பதவியைத் துறந்தார். அதேபோலத்தான் தற்போது லிஸ் ட்ரஸ்ஸுக்கும் நடந்திருக்கிறது.

லிஸ் ட்ரஸ் - பதவியேற்பு!

போரிஸ் பதவி விலகியதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்திய வம்சாவளி வேட்பாளரான ரிஷி சுனக்குக்கும், லிஸ் டிரஸ்ஸுக்கும் கடுமையான போட்டி நிலவ, இறுதியில் லிஸ் ட்ரஸ் வெற்றிபெற்றார். ராணி இரண்டாம் எலிசபெத் மறைவதற்குச் சில நாள்களுக்கு முன்பாக, செப்டம்பர் 6-ம் தேதி லிஸ் ட்ரஸ்ஸை பிரதமராக நியமனம் செய்தார்.

ரிஷி சுனக்-லிஸ் ட்ரஸ் கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சி
ரிஷி சுனக்-லிஸ் ட்ரஸ் கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சி
ட்விட்டர்

45 பில்லியன் பவுண்ட் வரிக்குறைப்பு, 45 நாளில் பதவி விலகல்!

பிரதமர் பதவிக்கு வந்ததுமுதலே பல அதிரடியான நடவடிக்கைகளை லிஸ் ட்ரஸ் மேற்கொண்டார். குறிப்பாக, செப்டம்பர் 23-ம் தேதி இங்கிலாந்து செல்வந்தர்களுக்கு 45 பில்லியன் பவுண்ட் அளவுக்கு வரிக்குறைப்பு செய்வதாக அறிவித்தார். `மினி பட்ஜெட்' எனும் பெயரில் நிதியமைச்சர் க்வாசி க்வார்ட்டெங் அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அப்போதே அதற்கு விமர்சனங்கள் கிளம்ப, `இந்த வரிக்குறைப்பு திட்டத்தால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்' என பதிலளித்தார். ஆனால், அதற்கு மாறாக இங்கிலாந்து பங்குச் சந்தை தடுமாறியது. டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்தது. அதையடுத்து, வருமான வரிக்குறைப்பு முடிவைக் கைவிடுவதாக பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸும், நிதியமைச்சர் க்வாசி க்வார்ட்டெங்கும் முடிவுசெய்தனர்.

லிஸ் ட்ரஸ் (Liz Truss)
லிஸ் ட்ரஸ் (Liz Truss)
ட்விட்டர்

இருப்பினும், எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல் ரிஷி சுனக் உள்ளிட்ட சொந்தக் கட்சி எம்.பி-க்களே லிஸ் ட்ரஸ்ஸுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினர். `தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்' என முழக்கமிட்டனர். `நான் ஒரு போராளி; பிரச்னையைப் பார்த்து பயந்து ஓட மாட்டேன்' என இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முழங்கினார் லிஸ் ட்ரஸ். தொடர்ந்து அழுத்தம் அதிகரிக்க, அக்டோபர் 14-ம் தேதி நிதியமைச்சர் பதவியிலிருந்து க்வார்ட்டெங்கை லிஸ் ட்ரஸ் நீக்கினார். அவருக்கு பதில் ஜெரமி ஹன்டை நிதியமைச்சராக நியமித்ததுடன், பெரும்பாலான வரிக் குறைப்பையும் திரும்பப் பெற்றார். ஆனாலும், அடுத்தடுத்து ஆளுங்கட்சி அமைச்சர்கள் பதவி விலகினர்.

தனக்கு எதிரான ஆளுங்கட்சி எம்.பி-க்களின் எதிர்ப்பலை ஓயாத காரணத்தால், கடுமையான அழுத்ததுக்கு ஆளான லிஸ் டிரஸ், கடந்த அக்டோபர் 20-ம் தேதி, டெளனிங் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே ``மக்களுக்கும், கன்சர்வேடிவ் கட்சிக்கும் நான் கொடுத்த வாக்குறுதியை என்னால் நிறைவேற்ற முடியவில்லை என்பதை ஏற்கிறேன். ஐயம் ரிசைனிங்" எனக் கூறி கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார். இங்கிலாந்து வரலாற்றிலேயே மிகக் குறுகிய காலம், வெறும் 45 நாள்கள் மட்டுமே அவர் பிரதமர் பதவியில் இருந்தார்.

 லிஸ் ட்ரஸ்
லிஸ் ட்ரஸ்
ட்விட்டர்

அடுத்த பிரதமரான ரிஷி சுனக்!

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் இங்கிலாந்தின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சித் தேர்தலை கன்சர்வேடிவ் கட்சி அறிவித்தது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், முன்னாள் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேன், பாதுகாப்புத்துறைச் செயலாளர் பென் வாலஸ், பென்னி மோர்டன்ட் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பிரதமர் பதவிக்குப் போட்டியிட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எப்படியிருப்பினும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கே வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக யூ-கோவ், ஸ்கை பெட் போன்ற நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் உறுதியாகத் தெரிவித்தன.

இந்திய வம்சாவளி ரிஷி சுனக் எம்.பி - இங்கிலாந்து
இந்திய வம்சாவளி ரிஷி சுனக் எம்.பி - இங்கிலாந்து
twitter

அதை த்தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி-க்களின் ஆதரவு இருக்கும்போதும் பிரதமர் பதவிக்கு, தான் போட்டியிடப்போவதில்லை என போரிஸ் ஜான்சன் அறிவித்தார். அதேபோல, பென்னி மோர்டன்ட்டும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவருக்கான தேர்தலிலிருந்து விலகினார். அதையடுத்து, எதிர்ப்பே இல்லாமல் ரிஷி சுனக் கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, மன்னர் மூன்றாம் சார்லஸின் அழைப்பை ஏற்று பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் சென்ற ரிஷி சுனக், மன்னரின் முன்னிலையில் பிரதமராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

ரிஷி சுனக்குக்கு ஆதரவு அதிகரித்தது எப்படி?

இங்கிலாந்தின் பொருளாதார வீழ்ச்சியை முன்வைத்துத்தான் அடுத்தடுத்த நான்கு மாதங்களில் இரண்டு பிரதமர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். கொரோனா தாக்கம், உக்ரைன் - ரஷ்யா போர், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இங்கிலாந்தில், உணவுப் பாதுகாப்பின்மை ஏற்பட்டு மில்லியன் கணக்கான மக்கள் ஒரு நாள் உணவைத் தவிர்ப்பதாக ஃபுட் ஃபவுண்டேஷன் சாரிட்டி என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியளித்திருக்கிறது. மேலும், குறைந்தபட்ச வருமானம் கொண்ட 5 குடும்பங்களில் ஒன்று உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும், கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 18% குடும்பங்கள் தங்கள் உணவு நுகர்வைக் குறைத்திருப்பதாகவும், 6% பேர் ஒரு நாள் முழுவதும் உணவு எடுக்காமல் இருந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்

பவுண்ட் வீழ்ச்சி, விலையேற்றம், உணவுத்தட்டுப்பாடு உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் `பொருளாதாரச் சிக்கல்'தான் முக்கியக் காரணம் என்பதால், பொருளாரத்தில் அனுபவமிக்க, ஏற்கெனவே நிதியமைச்சராகப் பொறுப்புவகித்த ரிஷி சுனக் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதரவு பெருகியது. இதற்கு மற்றொரு காரணம் அவர் நிதியமைச்சராக இருந்தபோது, கொரோனா நெருக்கடியை மிகத் திறமையாகக் கையாண்டிருந்தார். இது போன்ற காரணங்களே ரிஷி சுனக் அடுத்த இங்கிலாந்தின் பிரதமராக உருவெடுக்க வழிவகுத்திருக்கிறது.

இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒரே ஆண்டில் மூன்றாவது பிரதமரைக் கண்டிருக்கிறது. இனியாவது பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படுமா... ரிஷி சுனக் திறமையாக செயல்படுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.