Published:Updated:

`அதிபரான இரு தலைவர்கள்; காபூலுக்கு அதிர்ச்சி கொடுத்த குண்டுவெடிப்பு!’ -அசராமல் பதவியேற்ற அஷ்ரப் கனி

அஷ்ரப் கனி
அஷ்ரப் கனி ( AP )

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று நடைபெற்ற அதிபர் அஷ்ரப் கனி பதவியேற்பு விழாவின்போது இரு குண்டுகள் வெடித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனியும் அவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அப்துல்லா அப்துல்லாவும் போட்டியிட்டனர்.

வாக்குச்சீட்டுகள் முறையில் நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் அஷ்ரப் கனியே அதிக வாக்குகள் பெற்று மீண்டும் ஆப்கானிஸ்தானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

அஷ்ரப் கனி
அஷ்ரப் கனி
AP

ஆனால், இதை ஏற்க மறுத்த அப்துல்லா அப்துல்லா, இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதனால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையம், மீண்டும் வாக்குகளை எண்ணி கடந்த பிப்ரவரி மாதம் முடிவுகளை அறிவித்தது. அதிலும் அஷ்ரப் கனியே 50.64 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அஷ்ரப் கனி இரண்டாவது முறையாக ஆப்கானிஸ்தானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவரின் பதவி ஏற்பு விழா நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் அரசைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள், பொதுமக்கள், அஷ்ரப் கனி ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். அதே காபூலில் அப்துல்லா அப்துல்லாவும் தன் ஆதரவாளர்கள் முன்னிலையில் தன்னை ஆப்கானிஸ்தானின் அதிபராக அறிவித்துப் பதவியேற்றுக்கொண்டுள்ளார். இருவரின் பதவியேற்பும் நேற்று ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ளது.

அப்துல்லா அப்துல்லா
அப்துல்லா அப்துல்லா
AP

அதிபர் மாளிகையில் அஷ்ரப் கனியும் அதற்கு அருகில் உள்ள சபேதர் மாளிகையில் அப்துல்லா அப்துல்லாவும் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஒரே நேரத்தில் இரண்டு தலைவர்கள் ஒரு நாட்டின் அதிபராகப் பதவியேற்றுக்கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இவர்கள் பதவியேற்றுக்கொண்ட நேரத்தில் காபூல் நகரில் இரண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள், ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

அமெரிக்கா - தாலிபான் இடையே அமைதி ஒப்பந்தம்... 19 ஆண்டு கால போரின் விளைவுகள் சீராகுமா?!

மேடையில் நின்று அஷ்ரப் கனி பதவியேற்றுக் கொண்டிருக்கும்போதே குண்டு வெடித்துள்ளது. இதனால் பதறிய மக்களும் பெண்களும் அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். சில பெண்கள் அஷ்ரப் கனி இருக்கும் மேடையை நோக்கி ஓடிவந்துள்ளனர். ஆனால் எதைக் கண்டும் அஞ்சாத அஷ்ரப் கனி, குண்டு வெடிப்பைப் பொருட்படுத்தாமல் மிகவும் அமைதியாக அதே இடத்தில் நின்று அதிபராகப் பதவியேற்றுக்கொண்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிக கவனம் பெற்றுள்ளது.

காபூல் குண்டு வெடிப்பினால் அதிபர் அஷ்ரப் கனி உட்பட யாருக்கும் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பேசிய அஷ்ரப் கனி, ``இந்த நாட்டின் இறையாண்மையை மதித்து புனிதமான இஸ்லாமிய மதத்துக்குக் கீழ்படிந்து நாட்டைக் காப்பேன். நான் புல்லட் புரூஃப் உடை எதுவும் அணியவில்லை. வெறும் சட்டை மட்டுமே அணிந்துள்ளேன். இந்தக் குண்டுகளால் என்னை எதுவும் செய்துவிட முடியாது. என் உயிரை இழக்க நேர்ந்தாலும் இங்குதான் இருப்பேன், மக்களுக்காகவே பணிபுரிவேன்” என்று தெரிவித்துள்ளார். காபூல் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு