உக்ரைன்-ரஷ்யா இடையே தொடரும் போர் காரணமாக உக்ரைன் பெருமளவில் பொருளாதார சேதாரத்தைச் சந்தித்துள்ளது. ஏற்கெனவே ரஷ்யாவின் தாக்குதலால் மக்கள் உக்ரைனைவிட்டு அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துவருகின்றனர். இன்னும் போர்ப் பதற்றம் நீங்காத நிலையில், அமெரிக்காவின் தகவல் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
நேற்று 'வாஷிங்டன் போஸ்ட்' ஊடகம், அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி வெளியிட்ட செய்தியில்,"உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு ரஷ்யா, சீனாவிடம் ராணுவ உபகரணங்களைக் கேட்டுள்ளது.

ரஷ்யா எந்த வகையான ஆயுதம் அல்லது உதவி கேட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லையென்றாலும், ரஷ்யாவுடனான அதன் உறவு பலமாக இருப்பதாகவும், சீனா, ரஷ்யாவின் கோரிக்கையை நிறைவேற்றக்கூடும் என்ற யூகங்களைத் தூண்டுகிறது.
எப்படியானாலும், சீனாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்துவருவதாகவும், ரஷ்யாவுக்கு உதவும் எந்தவொரு முயற்சியும் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு வழிவகுக்கும் என்பது சீனாவுக்குத் தெரியும் என்றும் எச்சரித்தார்" எனக் குறிப்பிட்டிருந்தது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரக செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு, "ரஷ்யாவுக்கு உதவ சீனா தயாராக இருப்பதாகக் கூறப்படும் எந்த ஆலோசனையும் இதுவரை எனக்குத் தெரியாது.
ஜீ ஜின்பிங் தலைமையிலான அரசு உக்ரைன் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையும் வருத்தமும் கொண்டுள்ளது. போர்நிலை சரியாகி விரைவில் அமைதி திரும்பும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.