Published:Updated:

நவால்னி: புதின் மீதான புகார்கள்.. விஷம் முதல் விமான நிலையக் கைது வரை! -ரஷ்யாவில் என்ன நடக்கிறது?

அலெக்ஸி நவால்னி
அலெக்ஸி நவால்னி ( AP )

நவால்னி, ``நான் முற்றிலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஐந்து மாதங்களில் இது மிகச்சிறந்த நாள். நான் சரியானவன் என்பதையும், எனக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் இட்டுக்கட்டப்பட்டவை என்பதையும் நான் அறிவேன்" என்றார்.

ரஷ்யாவில், அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அவரது அரசு மீதான ஊழல் புகார்களைவைத்து, கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தவர், எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி (Alexei Navalny). இவர், கடந்த ஆகஸ்ட் மாதம், 20-ம் தேதி சைபீரியாவின் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக விமானம் தரையிறக்கப்பட, கோமாநிலைக்குச் சென்ற நவால்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு டீயில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

நவால்னி
நவால்னி
mstyslav chernov

ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சுவீடனில் உள்ள ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. நவால்னிக்கு 'நோவிசோக்' என்கிற, ரஷ்யா பனிப்போர் காலத்தில் உருவாக்கிய விஷம் கொடுக்கப்பட்டதாக ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் கூறினர். இதைவைத்து ஜெர்மனி அரசு, ரஷ்யாவைக் கடுமையாக விமர்சித்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்ய அரசு, தொடர்ந்து மறுத்துவந்தது.

அதைத் தொடர்ந்து, ரஷ்யாவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டால், புதின் அரசால் அவருடைய உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தலைநகர் பெர்லினிலுள்ள மருத்துவமனையில் நவால்னிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விஷம் கொடுத்தது ஏன்?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நேரடி உத்தரவின்பேரில், எஃப்.எஸ்.பி (FSB) ரகசிய சேவைக்குச் செயல்படுவதாக நவால்னி குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து, நவால்னிக்கு அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பின் உதவி கிடைத்திருப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் குற்றம்சாட்டினார்.

அதன் பிறகுதான் அலெக்ஸி நவால்னியை வீழ்த்த, அவரது உள்ளாடைகளில் 'நோவிசோக்' பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் இந்த விஷத்துக்கு ரஷ்ய அதிகாரிகளைக் குற்றம்சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த மாஸ்கோ, விஷம் குறித்து விசாரிக்க மறுத்துவிட்டது.

சிகிச்சைக்கு்ப பிந்தைய ரஷ்யப் பயணம் :

நவால்னி: புதின் மீதான புகார்கள்.. விஷம் முதல் விமான நிலையக் கைது வரை! -ரஷ்யாவில் என்ன நடக்கிறது?
mstyslav chernov

விஷம் கொடுக்கப்பட்டு, ஜெர்மனி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்த நவால்னி, அவர் கைதுசெய்யப்படலாம் என்ற நிலை இருந்தும், ரஷ்யாவுக்கு விமானத்தில் புறப்பட்டு வந்தார். ஜெர்மனியின் தலைநகரான பெர்லினிலிருந்து வந்த நவால்னிக்கு வரவேற்பளிக்க அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், மாஸ்கோ விமான நிலையங்களில் காத்திருந்தார்கள். திடீரென விமானத்தின் தரையிறங்கும் வழித்தடம் மாற்றப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது.

விமானம் தரையிறங்குவதற்குச் சில நொடிகளுக்கு முன்பு, தொழில்நுட்பக் காரணங்களால் வியானுகோவா (Vnukovo Airport) விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானம், ஷெரெமெட்டியோ (Sheremetyevo Airport) விமான நிலையத்தில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் இருந்த சிலர் உண்மைநிலையை அறிய தங்கள் ஸ்மார்ட்போனில் லைவ் ஸ்ட்ரீம்களைப் பார்த்தனர். மற்றவர்கள் நகரத்தின் மறுபுறத்திலுள்ள ஷெரெமெட்டியோ விமான நிலையத்துக்கு ஒரு மணி நேர கார் பயணத்தை மேற்கொள்ள விரைந்தனர், ஆனால் அங்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தன.

விமான நிலையத்தில் கைது:

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, ஐந்து மாத சிகிச்சைக்கு பின்னர் ஷெரெமெட்டியோ விமான நிலையத்தில் வந்து இறங்கியதும், விமான நிலைய போலீஸாரால் சிறைப்பிடிக்கப்பட்டார். விமான நிலையத்திலுள்ள பாஸ்போர்ட் சோதனை அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நவால்னி கைதுசெய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நவால்னியின் கைது பற்றிய செய்தி வெளியானதும், ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். நவால்னியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

நவால்னியின் வழக்கறிஞர், அவரோடு செல்ல அனுமதிக்கப்படவில்லை. நவால்னி மாஸ்கோவிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். நவால்னியின் முக்கிய நண்பரான லுபொவ் சோபல் உட்பட பல செயற்பாட்டாளர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நவால்னியின் தடுப்புக் காவல் குறித்து கருத்து கேட்க, அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவிடம் கேள்வி எழுப்பட்டபோது, ``மன்னிக்கவும், அவர் ஜெர்மனியில் தடுத்து வைக்கப்பட்டாரா? தெரியவில்லை. நான் அவ்வளவு வேகமானவன் அல்ல" என்று தெரிவித்திருக்கிறார்.

அலெக்ஸி நவால்னி ஏன் கைதுசெய்யப்பட்டார்?

அலெக்ஸி நவால்னி மீது கையாடல் (Embezzlement) வழக்கொன்று பதியப்பட்டு, அதில் அவருக்கு ஏற்கெனவே தண்டனையும் வழங்கப்பட்டுவிட்டது. இந்த வழக்கு அரசியல் காரணங்களால் தன்மீது தொடுக்கப்பட்டதாகக் கூறிவந்தார் நவால்னி. இந்த தண்டனைக் காலத்தில் (Probation Period) நவால்னி தொடர்ந்து விதிமீறல் செய்ததால், கடந்த டிசம்பர் 29 முதல் தேடப்பட்டு வருகிறார் என ரஷ்யாவின் சிறைத்துறை, நேற்று முன்தினம் (ஜனவரி 17) ஓர் அறிக்கை வெளியிட்டது.

நவால்னி
நவால்னி
mstyslav chernov

இது மட்டுமன்றி ரஷ்ய அரசுத் தரப்பு, நவால்னி பல்வேறு அமைப்புகளுக்குச் செய்த பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஒரு குற்றவியல் வழக்கையும் பதிந்திருக்கிறது. இந்த வழக்குகளின் அடிப்படையில் அலெக்ஸி நவால்னி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அதையடுத்து, தான் ரஷ்யாவுக்கு வருவதைத் தடுக்க, புதின் வழக்குகளைத் தனக்கு எதிராக ஜோடிப்பதாக குற்றம்சாட்டுகிறார் நவால்னி.

அலெக்ஸி நவால்னி யின் கைது தொடர்பாக அவருடைய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களது உணர்வை எதிரொலிக்கும் வகையில், நவால்னியின் மனைவி யூலியா நவால்னயா (Yulia Navalnaya), நவால்னியின் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அவரை ஊக்கப்படுத்தாமல் இருக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தனது கணவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த விமான நிலையத்தைவிட்டு வெளியேறி, காரில் சென்ற அலெக்ஸி நவால்னியின் மனைவி, ``அலெக்ஸி சொன்ன மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், `நானும் பயப்படவில்லை. நீங்கள் அனைவரும் பயப்பட வேண்டாம்’ ‘’ என்று அவர் சொன்னதாகத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு