Published:Updated:

பிறநாட்டுத் தேர்தல்களுக்காக 2,400 கோடி ரூபாய் செலவழித்ததா ரஷ்யா... பின்னணி என்ன?!

ரஷ்யா - புதின்

உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்த சுமார் 2,400 கோடி ரூபாய் செலவழித்ததாக ரஷ்யாமீது குற்றம் சுமத்தியிருக்கிறது அமெரிக்கா.

பிறநாட்டுத் தேர்தல்களுக்காக 2,400 கோடி ரூபாய் செலவழித்ததா ரஷ்யா... பின்னணி என்ன?!

உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்த சுமார் 2,400 கோடி ரூபாய் செலவழித்ததாக ரஷ்யாமீது குற்றம் சுமத்தியிருக்கிறது அமெரிக்கா.

Published:Updated:
ரஷ்யா - புதின்

`பெரிய வல்லரசு நாடு எது?' என்பதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் பல காலமாக மோதிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்த, கோடிக்கணக்கில் ரஷ்யா செலவு செய்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியிருக்கிறது. 300 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2,390 கோடி ரூபாய் வரை ரஷ்யா செலவு செய்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்திருக்கிறது.

அமெரிக்காவின் உளவுப் பிரிவிலுள்ள அதிகாரிகள் வெளியிட்டதாகச் சொல்லப்படும் அறிக்கையில், உலக அரசியலில் ரஷ்யா செய்துவரும் மோசடிகள் குறித்துப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் அமெரிக்காவின் அரசுத்துறைச் செயலர் ஆன்டனி பிளிங்கனின் கையெழுத்து இடம்பெற்றிருப்பதாகவும் சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

அமெரிக்க அதிபர் பைடன் - ரஷ்ய அதிபர் புதின்
அமெரிக்க அதிபர் பைடன் - ரஷ்ய அதிபர் புதின்
Twitter/ @ANI

அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள்!

``ரஷ்யா, உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்த, 2014-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை ரகசியமாக சுமார் 2,400 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. ஏராளமான நாடுகளிலுள்ள அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பணம், பொருள்கள் என அன்பளிப்புகளை ரஷ்யா வழங்கியிருக்கிறது. மாஸ்கோவுக்கு (ரஷ்ய தலைநகர்) விசுவாசமாக இருப்பவர்களுக்கு இந்த அன்பளிப்பு சென்றிருக்கிறது'' என்று அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ஆசிய நாடு ஒன்றில், அதிபர் வேட்பாளராகக் களமிறங்கியவருக்கு, ரஷ்யத் தூதுவர் மூலம் லட்சக்கணக்கில் பணம் அனுப்பப்பட்டிருக்கிறது'' என்ற தகவலும் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறது. ஏற்கெனவே, 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆதரவு நிலைப்பாட்டிலிருக்கும் டொனால்டு ட்ரம்ப்பை வெற்றிபெறச் செய்ய ரஷ்யா பணம் செலவழித்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அல்பேனியா, போஸ்னியா உள்ளிட்ட நாடுகளில் நடந்த தேர்தல்களிலும் ரஷ்யா தலையிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்திருக்கின்றனர். ``ரஷ்யாவைப் பொறுத்தவரை இந்த `ரகசிய அரசியல் நிதியுதவி' என்பது தனிநபர்கள், கட்சிகளுக்கான செல்வாக்கை வளர்த்து, அதன் மூலம் அந்தக் கட்சிகள் தேர்தலில் சிறப்பாகச் செயல்படும் வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது'' என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. ரஷ்யாவின் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் (Ned Price), ``வெளிநாட்டுத் தேர்தல்களில் தலையிடுவது இறையாண்மைக்கு எதிரானது'' என்று கூறியிருக்கிறார்.

புதின்
புதின்

``ஐரோப்பாவில் இயங்கும் கட்சிகளுக்கு நிதியளிக்க, கற்பனையான ஒப்பந்தங்களையும், ஷெல் நிறுவனங்களையும் ரஷ்யா பயன்படுத்துகிறது. அதேபோல, மத்திய கிழக்கு நாடுகள், மத்திய அமெரிக்கா, ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளுக்கு அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை நேரடியாகப் பயன்படுத்தி நிதியளிக்கிறது. பணமாகவும், கிரிப்டோகரன்சிகளாகவும், ஆடம்பரப் பரிசுகளாகவும் அன்பளிப்புகளை அனுப்பிவைக்கிறது ரஷ்யா'' என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ரஷ்யாமீது, அமெரிக்கா தரப்பிலிருந்து வைக்கப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இதுவரை வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை. அதேநேரம், ரஷ்யாவும் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. ``ஒருவேளை, உலக அரசியலில் சக்திவாய்ந்த நாடாக மாறுவதற்காக, பிற நாடுகளின் தேர்தல்களில் ரஷ்யா தலையிட்டிருந்தால், நிச்சயம் அது கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக ஐ.நா தீவிர விசாரணைகளை நடத்த வேண்டும்'' என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.