Published:Updated:

`ஆயுதங்களைப் போட்டுவிட்டுத் தப்பியோடிய ரஷ்ய வீரர்கள்?!' - போரில் வலுப்பெறுகிறதா உக்ரைன்?

ரஷ்யா - உக்ரைன் போர்

200 நாள்களைக் கடந்த ரஷ்யா - உக்ரைன் போர். என்ன நடக்கிறது அங்கே?

`ஆயுதங்களைப் போட்டுவிட்டுத் தப்பியோடிய ரஷ்ய வீரர்கள்?!' - போரில் வலுப்பெறுகிறதா உக்ரைன்?

200 நாள்களைக் கடந்த ரஷ்யா - உக்ரைன் போர். என்ன நடக்கிறது அங்கே?

Published:Updated:
ரஷ்யா - உக்ரைன் போர்

செப்டம்பர் 11-ம் தேதியோடு 200 நாள்களைக் கடந்திருக்கிறது ரஷ்யா - உக்ரைன் போர். ஏழு மாதங்களுக்கு மேலாக இரு நாடுகளும் மோதிக்கொள்ளும் இந்தப் போரில், இதுவரை எவ்வித சமரசமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராகச் சில அதிரடிகளை மேற்கொண்டிருக்கிறது உக்ரைன் ராணுவம். இதனால், உக்ரைனின் சில முக்கிய நகரங்களிலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியிருக்கின்றன. என்ன நடந்துகொண்டிருக்கிறது அங்கே?

தப்பியோடிய ரஷ்ய வீரர்கள்?

கிழக்கு உக்ரைனிலுள்ள பெரும்பாலான பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ரஷ்ய ராணுவம். குறிப்பாக, ரஷ்யாவை ஆதரிக்கும் மக்கள் அதிகம் வாழும் டொனட்ஸ்க் மாகாணத்தைத் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தற்போது, அந்த மாகாணத்திலுள்ள இஸியம் என்ற நகரை தங்கள் வசம் கொண்டுவந்திருக்கிறது உக்ரைன். இந்த நகரிலுள்ள கிடங்கில்தான் பெருமளவு ஆயுதங்களை வைத்திருந்தது ரஷ்யா. தங்களது ராணுவ மையமாக விளங்கிய இஸியம், மீண்டும் உக்ரைன் கைக்குச் சென்றிருப்பது ரஷ்யாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அதே டொனட்ஸ்க் மாகாணத்திலுள்ள பாலாக்லியா என்ற முக்கிய நகரத்தையும் உக்ரைன் ராணுவம் மீட்டெடுத்திருக்கிறது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

அதேபோல, கார்கிவ் மாகாணத்திலுள்ள குப்யான்ஸ்க் நகரையும் மீட்டெடுத்து, அங்கு தங்கள் நாட்டுக்கொடியை ஏற்றியிருக்கின்றனர் உக்ரைன் ராணுவத்தினர். சுமார் 27,000 பேர் வசிக்கும் குப்யான்ஸ்க் நகரத்தை மீட்டெடுத்ததை பெரும் வெற்றியாகப் பார்க்கிறது உக்ரைன். உக்ரைனிலுள்ள ரஷ்ய வீரர்களுக்குத் தேவையான பொருள்களை விநியோகம் செய்யும் இடமாக இருந்தது குப்யான்ஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த சனிக்கிழமை அன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட காணொளியில், ``செப்டம்பர் மாதத்தில் மேற்கொண்ட புதுப்பிக்கப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் மூலம் ரஷ்யா வசமிருந்த 2,000 சதுர கி.மீ பகுதியை மீட்டெடுத்துவிட்டோம்'' என்று குறிப்பிட்டிருந்தார். ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம், `வீரர்களை மறு ஒருங்கிணைப்பு செய்வதற்காக இஸியம், பாலாக்லியா பகுதிகளிலிருந்து படைகளைத் திரும்பப் பெற்றிருக்கிறோம்' என்று தகவல் வெளியிட்டிருக்கிறது. ஆனால் ரஷ்ய வீரர்கள், ஆயுதங்களை அங்கிருக்கும் கிடங்கிலேயே விட்டுச் சென்றிருப்பதால், அவர்கள் விரட்டியடிக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. `ஆயுதங்களைக் கிடங்கிலேயே போட்டுவிட்டு, உக்ரைன் படைகளிடமிருந்து தப்பியோடிவிட்டனர் ரஷ்ய வீரர்கள்' என்பது போன்ற செய்திகளையும் காண முடிகிறது.

இந்தப் போர் தொடங்கியதிலிருந்து, இரண்டு முக்கிய நகரங்களிலிருந்து தங்களது படைகளைத் திரும்பப் பெற்றிருப்பதாக ரஷ்யாவே அறிவித்திருப்பது இதுதான் முதன்முறை!

அடுத்தகட்ட நடவடிக்கைகள் எப்படியிருக்கும்?

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ, ``மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களின் உதவியோடு, உக்ரைன் ராணுவ வீரர்களால் ரஷ்யாவை வீழ்த்த முடியும் என்பதைத்தான் சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன'' என்று ரஷ்யாவின் பின்வாங்கல் குறித்துத் தெரிவித்திருக்கிறார். ``ரஷ்யா ஆக்கிரமித்திருந்த பகுதிகளை மீட்டெடுத்து தங்களது வலிமையைக் காட்டியிருக்கிறது உக்ரைன். இந்த மீட்டெடுப்புச் சம்பவங்களை முன்வைத்து, ரஷ்யாவை எதிரியாகக் கருதும் மேற்கத்திய நாடுகளிடம் அதிக அளவில் ராணுவ உதவிகளை உக்ரைன் கோரும் வாய்ப்புகள் இருக்கின்றன'' என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா போர்

மேலும், ``மூன்று முக்கிய நகரங்களை ரஷ்யாவிடமிருந்து மீட்டெடுத்திருப்பதை, உக்ரைன் பெரும் வெற்றியாகக் கொண்டாடிவருகிறது. இதன் மூலம், உலக அரங்கில் தங்களுக்குச் சரிவு ஏற்பட்டுவிட்டதாக ரஷ்யா எண்ணக்கூடும். எனவே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைனில் மிகப்பெரிய தாக்குதல்களை அடுத்த சில நாள்களில் ரஷ்யா நடத்த வாய்ப்பிருக்கிறது'' என்றும் சொல்லப்படுகிறது.