கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன்மீது ரஷ்யா போர்த் தொடுத்ததன் காரணமாக, ரஷ்யாமீது மேற்கத்திய நாடுகள் பலவும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதன் காரணமாக உலகச் சந்தையில் உணவு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு ரஷ்யாதான் காரணம் என அந்த நாட்டின் அதிபர் புதின்மீது குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், இத்தாலியின் பிரதமர் மரியோ டிராகியுடன் தொலைபேசியில் ரஷ்ய அதிபர் புதின் உரையாடியது குறித்து தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாகப் பேசிய இத்தாலி பிரதமர், ``உலகச் சந்தையில் உணவு விநியோகத்தில் உள்ள பிரச்னைகளுக்கு ரஷ்யாதான் காரணம் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாமீது விதித்திருக்கும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு உடன்பட்டால் தானியங்கள், உரங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் உணவு நெருக்கடியைச் சமாளிக்க ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க ரஷ்யக் கூட்டமைப்பு தயாராக இருக்கிறது.

உக்ரைன் தரப்பால் தடுக்கப்படும் அசோவ், கருங்கடல் துறைமுகங்களிலிருந்து பயணிகள் கப்பல்கள் வெளியேற மனிதாபிமான அடிப்படையில் தினசரி பாதைகளைத் திறந்து, மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என புதின் தெரிவித்திருக்கிறார். இந்தத் தொலைபேசி உரையாடலுக்கான அடிப்படைக் காரணம் போர் முடிவுக்கு வந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதுதான். ஆனால், புதின் அதற்கு பதிலளிக்கவில்லை.
தற்போது அசோவ், கருங்கடல் துறைமுகங்களைத் தடுப்பதில் ரஷ்யாவுக்கும்-உக்ரைனுக்கும் இடையிலிருக்கும் பிணக்கு களையப்பட வேண்டும். ஏனென்றால் உக்ரைனில் கோதுமை அழுகும் அபாயத்தில் இருக்கிறது. ரஷ்யாவைப்போலத் தயார்நிலையில் உக்ரைன் இருக்கிறதா என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவிக்க வேண்டும்" எனக் கூறினார்.
