உக்ரைன் ரஷ்யா இடையே தொடரும் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைகளை எதிர்த்து உக்ரைன் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் உக்ரைன், ``பிரிவினைவாத பகுதிகளாக லுகான்ஸ், டோனட்ஸ்கில் இனப்படுகொலை நடைபெறுகிறது. எனவே, போரை உடனடியாக நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், ரஷ்யாவுக்குத் தகுந்த தண்டனைத் தரப்பட வேண்டும்" என்று வாதிட்டது. அதையடுத்து சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது, ``உலக நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளின் 13-2 என்ற வாக்குகள் அடிப்படையில், உக்ரைனில் நடத்தப்பட்டுவரும் ராணுவத் தாக்குதலை ரஷ்யா உடனடியாக நிறுத்தவேண்டும்.

உக்ரைன் ரஷ்யா ஆகிய இருநாடுகளிடையேயான பிரச்னையை மேலும் மோசமாக்கும் நிலை தொடரக்கூடாது" என சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கான வாக்கெடுப்பில் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தார்.
இந்த நிலையில், ரஷ்யா சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யா செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ``ஐ.நா நீதிமன்றத்தின் இந்த முடிவை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
