Published:Updated:

Ukraine Russia Crisis: ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு! | Live Updates

உக்ரைன்
Live Update
உக்ரைன்

உக்ரைனை ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்கி வருகிறது. அது தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!

01 Mar 2022 3 PM

ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு!

ரஷ்யா உக்ரைன் மீதான தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், உக்ரைனின் கார்கிவ் பகுதியில் சிறிது நேரத்துக்கு முன்பு ரஷ்யப் படைகள் நிகழ்த்திய தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

உக்ரைன்:
உக்ரைன்:

உயிரிழந்த மாணவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.

01 Mar 2022 7 AM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடன்பாடு எட்டப்படாமல் நிறைவடைந்த பேச்சுவார்த்தை!

போரை முடிவுக்குக் கொண்டு வர உக்ரைன் - ரஷ்யா இடையே நேற்று பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ரஷ்யா, உக்ரைன் நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு ராணுவத்தை வெளியேற்றும்படி ரஷ்யாவுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது. எனினும், முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.

உக்ரைன் - ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா

பேச்சுவார்த்தை ஐந்து மணி நேரம் நீடித்ததாகக் கூறப்படுகிறது. இரு நாடுகள் தரப்பில் எடுக்கவேண்டிய பொதுவான நிலைப்பாடுகள் குறித்த சில நடவடிக்கைகள் இந்தப் பேச்சுவார்த்தையின்போது கண்டறியப்பட்டதாகவும், அடுத்து வரும் நாள்களில் பேச்சுவார்த்தையைத் தொடர இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை போலந்து - பெலாரஸ் எல்லையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 6 -வது நாளாக ரஷ்யா உக்ரைன் மீதான தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது! கீவ் நகரை நோக்கிப் பெரும் படையை ரஷ்யா திரட்டிச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
28 Feb 2022 4 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெலாரஸில் ரஷ்யா - உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியது!

உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸில் உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை கூட்டத்தில் இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகங்களைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் - ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா

சிறிது நேரத்துக்கு முன்பு உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பு ராணுவ மற்றும் நிதி உதவி வழங்கினால், மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

28 Feb 2022 3 PM

`உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகள், டேங்கர் எதிர்ப்பு ஏவுகணைகள் வழங்கப்படும்' - நேட்டோ அறிவிப்பு!

உக்ரைனுக்கு எதிரான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும் ராணுவ உதவிகள் வழங்க நேட்டோ அமைப்பு முன்வந்திருக்கிறது.

உக்ரைன்
உக்ரைன்

உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகள், டேங்கர் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என்று நேட்டோ அமைப்பு தெரிவித்திருக்கிறது.

28 Feb 2022 12 PM

தாக்குதலின் வேகத்தைக் குறைத்த ரஷ்யா!

இன்று பெலாரஸில் ரஷ்யா - உக்ரைன் பிரதிநிதிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்த நிலையில், ரஷ்யப் படைகள் தங்கள் தாக்குதலின் வேகத்தைக் குறைத்துள்ளதாக உக்ரைன் தெரிவித்திருக்கிறது. போர் விமானத் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது!

28 Feb 2022 7 AM

உக்ரைனுக்கு, போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் ஏவுகணைகள் வழங்கும் அமெரிக்கா!

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை
Carolyn Kaster

ரஷ்யாவின் தாக்குதலால், கடுமையான பாதிப்புக்குள்ளாகிவரும் உக்ரைனுக்கு சில நாடுகள் உதவிகளை அறிவித்துவருகின்றன. `உக்ரைனுக்கு ஆயுதங்கள் நேரடியாக அனுப்பிவைக்கப்படும்’ என்று ஜெர்மனி நேற்று அறிவித்திருந்த நிலையில், முதன்முறையாக உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. போர் விமானங்களை எதிர்கொள்ளும் அதிவேக ஏவுகணைகளை நேரடியாக வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஏவுகணைகள், ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

27 Feb 2022 8 PM

``அணு ஆயுத தடுப்புப் படைகளை தயார்நிலையில் வைத்திருங்கள்!" - ரஷ்ய பாதுகாப்புத்துறையினருக்கு புதின் உத்தரவு

உக்ரைனுக்கு எதிரான ராணுவத் தாக்குதலை அதிதீவிரப்படுத்தியிருக்கும் ரஷ்யா, உக்ரைனின் நகரங்களைக் கைப்பற்ற முனைப்பு காட்டிவருகிறது.

உலக நாடுகள் மத்தியில் உக்ரைனுக்கு ஆதரவு பெருகிவருவதால், ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யப் படைகளை அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயார்ப்படுத்திவருகிறார்.

நேட்டோ அமைப்பு, தங்கள் உறுப்பு நாடுகள் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நோக்கில், தங்கள் படைகளை தயார்படுத்திக்கொண்டிருக்கின்றன. அதேபோல, மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருக்கின்றன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
AP

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடன் `நட்பற்ற' முறையில் நடந்துகொள்வதால், தங்கள் நாட்டின் அணு ஆயுத தடுப்புப் படைகளை அதிக எச்சரிக்கையுடன் தயார்நிலையில் வைத்திருக்குமாறு பாதுகாப்புத்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

அணு ஆயுத உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுதக் களஞ்சியமாகக் கருதப்படும் ரஷ்யா, இத்தகைய முடிவை எடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

27 Feb 2022 11 AM

விமானம் மூலம் சென்னை வந்தடைந்த 5 தமிழக மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

உக்ரைனிலிருந்து மும்பை வழியாக விமானம் மூலம் சென்னை வந்தடைந்த 5 தமிழக மாணவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டு தமிழகம் அழைத்துவரப்பட்ட சகீர், சாந்தனு, செல்வப்ரியா, ஹரிஹரசுதன், வைஷ்ணவிதேவி ஆகிய மாணவர்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

27 Feb 2022 10 AM

240 இந்தியர்களுடன் மும்பை வந்தடைந்தது 3-வது விமானம்!

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், தற்போது ஹங்கேரியின் புடாபெஸ்ட்டிலிருந்து 240 இந்தியர்கள் 3-வது விமானம் மூலம் மும்பை வந்திறங்கியிருக்கின்றனர்.

விமானம்
விமானம்

உக்ரைனிலிருந்து ருமேனியா வந்த 240 இந்தியர்கள், பின்னர் அங்கிருந்து ஹங்கேரியில் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டனர். போர்ப் பதற்றம் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருப்பதால், மத்திய அரசு உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளைத் துரிதப்படுத்தியிருக்கிறது.

27 Feb 2022 7 AM

உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க ஜெர்மனி முடிவு!

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர்த் தாக்குதல் தீவிரம் அடைந்துவருகிறது. உக்ரைன் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திவந்த ரஷ்யப் படைகள், தற்போது பொதுமக்கள் மீதும் தங்கள் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றன. ரஷ்யப் படைகள் குடியிருப்புகள் மீது நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதல் தொடர்ந்துகொண்டிருப்பதால் உக்ரைனில் பதற்றநிலை அதிகரித்துக் காணப்படுகிறது. உக்ரைன் ராணுவத்தினரும் தங்களால் முடிந்த வரை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கின்றனர். ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவைக் கைப்பற்ற முனைப்பு காட்டிவருகின்றன.

உக்ரைன்
உக்ரைன்

முன்னதாக ஸ்வீடன், போலந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான போராட்டத்தில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் செய்ய முன்வந்திருந்தன. இந்த நிலையில், தற்போது ஜெர்மனியும் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்க முன்வந்திருக்கிறது.

ஜெர்மனி
ஜெர்மனி

இது தொடர்பாக ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``1,000 பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளுக்கான 500 உபகரணங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும்.

மேலும், 14 கவச வாகனங்கள், 10,000 டன் வெடிபொருளும் வழங்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.

26 Feb 2022 6 PM

மோடியுடன் பேசிய உக்ரைன் அதிபர்!

உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை முன்னெடுத்துவரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்தியப் பிரதமர் மோடியுடன் பேசியதாகத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பான அவரின் ட்விட்டர் பதிவில், ``இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். உக்ரைன் மீதான, ரஷ்யத் தாக்குதல் குறித்துப் பேசப்பட்டது. 1,00,000-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் நிலத்தில் உள்ளனர். அவர்கள் குடியிருப்புக் கட்டடங்கள் மீது நயவஞ்சகமாக துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் எங்களுக்கு அரசியல் ஆதரவை வழங்குமாறு இந்தியாவை வலியுறுத்தியுள்ளோம். ஆக்கிரமிப்பாளரை ஒன்றாக நிறுத்துவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

26 Feb 2022 8 AM

``முன்னறிவிப்பு இல்லாமல், எல்லைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்!” - இந்தியா

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. உக்ரைன் தனது வான்வெளியை மூடியுள்ளதால், சில அண்டை நாடுகளுக்கு அங்கிருக்கும் மக்களை வரவழைத்து அங்கிருந்து இந்தியா அழைத்துவரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

Ukraine Russia Crisis: ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு! | Live Updates

இந்த நிலையில், மாணவர்கள் உள்ளிட்ட இந்திய குடிமக்கள், இந்திய தூதரகத்தின் முன்னறிவிப்பு இல்லாமல், எல்லை பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. எல்லையில் பதற்றம் நிலவுவதால், இந்த உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், அங்கு தவிக்கும் மக்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருவதாகவும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை தூதரங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 Feb 2022 8 AM

`ரஷ்யாவின் தாக்குதல் முறியடிப்பு' - உக்ரைன்

உக்ரைன்
உக்ரைன்

ரஷ்யப் படைகள், உக்ரைன் தலைநகரை நெருங்கி வந்து தாக்குலைத் தொடுத்துவருகின்றன. இந்த நிலையில் தலைநகர் கிவ் அருகே இருக்கும் ராணுவ தளம் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முறியடித்துள்ளோம் என உக்ரைன் தெரிவித்திருக்கிறது.

26 Feb 2022 7 AM

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 11 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தும், இந்த தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது. காரணம்..!

25 Feb 2022 3 PM

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா பொருளாதாரத் தடை விதிப்பு!

உக்ரைன் மீது போர்த் தொடுத்திருக்கும் ரஷ்யாமீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன்னதாக பொருளாதாரத் தடை விதித்திருந்தன. இந்த நிலையில், ரஷ்யா தற்போது தங்கள்மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின்
AP

இந்த விவகாரத்தில், ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

25 Feb 2022 11 AM

`குடியிருப்புகள்மீது தாக்குதல்’ - உக்ரைன் அதிபர்

உக்ரைன் மீதான போர்த் தாக்குதலை ரஷ்யா நேற்று, தொடங்கிய நிலையில், இன்று தனது இரண்டாவது நாள் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரைக் குறிவைத்து குண்டுகள் வீசப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், ``ரஷ்யா, சொன்னதை மீறி, குடியிருப்புகள்மீது தாக்குதல் நடத்திவருகிறது. இரண்டாவது நாளாக உலக நாடுகள் ரஷ்யாவின் தாக்குதலை வேடிக்கை பார்க்கின்றன” என வேதனை தெரிவித்திருக்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி.

25 Feb 2022 9 AM

இரண்டாவது நாள் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யா! 

உக்ரைன் மீதான போர்த் தாக்குதலை நேற்று தொடங்கியது ரஷ்யா. நேற்றைய முதல் நாள் தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்திருக்கும் நிலையில், இன்று தனது இரண்டாவது நாள் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது ரஷ்யா. உக்ரைன் தலைநகர் கீவ் நகரைக் குறிவைத்து குண்டுகள் வீசப்பட்டுவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன!

25 Feb 2022 8 AM

ரஷ்யக் கட்டுப்பாட்டில் செர்னோபில் அணுமின் நிலையம்!

செர்னோபில் (1986-ம் ஆண்டு) அணு உலை விபத்தை இந்த உலகில் யாரும் மறந்திருக்க முடியாது. நேற்று உக்ரைனில் தாக்குதல் நடத்திய ரஷ்யா, இந்த அணுமின் நிலையத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறது. அந்தப் பகுதியில் ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தினால், செயலிழந்த அணு உலையிலிருந்து மீண்டும் கதிரியக்கம் வெளிப்படலாம் என அஞ்சப்பட்ட நிலையில்தான், நேற்று அணு உலை ரஷ்யாவின் வசம் சென்றிருக்கிறது. இதுவரைக்கும் அங்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

25 Feb 2022 7 AM

`உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்துங்கள்..!’ - மோடி, புதின் உரையாடலில் நடந்தது என்ன? - முழுவிவரம் கீழே உள்ள லிங்க்கில்....!

25 Feb 2022 7 AM

`உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் இல்லை!" - கைவிட்ட நேட்டோ... என்ன காரணம்?

25 Feb 2022 7 AM

``உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகளை அனுப்பும் திட்டமில்லை/1” - பைடன்

உக்ரைன்மீது ரஷ்யா நேற்று தனது தாக்குதலைத் தொடங்கியது. உக்ரைனின் தலைநகரைப் பிடிக்கும் எண்ணத்துடன் ரஷ்யப் படைகள் முன்னேறிவருகின்றன. இந்த நிலையில் உக்ரைன்மீதான ரஷ்யப் போருக்கு கூட்டு பதிலடியைக் கொடுக்கும் நடவடிக்கை குறித்து ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்
ட்விட்டர்

தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை அறிவித்தார். தொடர்ந்து பேசிய பைடன், ``புதின் ஒரு ஆக்கிரமிப்பாளர். போரை அவர் தான் தேர்ந்தெடுத்தார். அவரும் ரஷ்யாவும் பொருளாதாரத் தடைகளின் விளைவுகளைச் சந்திக்க வேண்டும். நேட்டோ நட்பு நாடுகளுக்கு எதிரான எந்தவொரு ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்க அமெரிக்கா கூடுதல் படைகளை அனுப்பும். எனினும், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகளை அனுப்பும் திட்டமில்லை. ரஷ்யாவுக்கு எதிராக உலகம் ஒன்றுபட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து எந்த சைபர் தாக்குதல் நடந்தாலும் அதற்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக இருக்கிறது” என்றார். மேலும் இந்தியாவுடனும் இந்த விவகாரம் குறித்து தான் தீவிரமாக ஆலோசித்துவருவதாகத் தெரிவித்தார் அதிபர் பைடன்.

24 Feb 2022 6 PM

`தலைநகர் கீவுக்குள் நுழைந்தன ரஷ்யப் படைகள்!' - உக்ரைன் தகவல்

உக்ரைன் தலைநகர் கீவின் வடக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் நுழைந்துவிட்டதாக உக்ரைனின் எல்லைப் பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்திருக்கிறது.

உக்ரைன்
உக்ரைன்

உக்ரைன்மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாமீது பொருளாதாரத் தடைவிதிக்க பிரிட்டன் முடிவுசெய்திருக்கிறது. அதேபோல, உக்ரைனுக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருந்து உதவி செய்வதற்குத் தாங்கள் தயார் என ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. மறுபுறம், அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யாவை எச்சரித்துவரும் நிலையில், உக்ரைன் தலைநகருக்குள் ரஷ்யப் படைகள் நுழைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

24 Feb 2022 1 PM

`உக்ரைன் ராணுவ வீரர்கள் எங்களிடம் சரணடைந்துவருகின்றனர்' - ரஷ்யா தகவல்!

ரஷ்ய ஆதரவு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், உக்ரைனின் இரண்டு நகரங்களைத் தாங்கள் ஏற்கெனவே கைப்பற்றிவிட்டதாகத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், உக்ரைன் படைகள் மீதான தங்களின் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கும் ரஷ்யா, தற்போது உக்ரைன் ராணுவ வீரர்கள் தங்களிடம் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடைந்துவருவதாகத் தகவல் தெரிவித்திருக்கிறது.

24 Feb 2022 1 PM

`உக்ரைனின் வான் பாதுகாப்பு அரணைக் கைப்பற்றிவிட்டோம்' - ரஷ்யா அறிவிப்பு

இன்று காலை முதலே உக்ரைன்மீது ரஷ்யப் படைகள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுவருகின்றன. இந்த நிலையில், ரஷ்யப் படைகள் தற்போது உக்ரைனுக்குள் நுழைந்து உக்ரைன் படைகளை வீழ்த்திவருகின்றன. ரஷ்யாவின் தாக்குதலில் தங்களின் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்திருக்கிறது.

உக்ரைன்
உக்ரைன்

ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துகொண்டிருப்பதால், உக்ரைனில் மக்கள் உயிருக்கு பயந்து உணவகங்களிலும், சுரங்கப்பாதைகளிலும் தஞ்சமடைந்துவருகின்றனர். அதேபோல, உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்திவருகிறது.

இந்த நிலையில், ரஷ்யா உக்ரைனின் வான் பாதுகாப்பு அரணைக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்திருக்கிறது.

24 Feb 2022 12 PM

``நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழப்பு’ 

உக்ரைன்
உக்ரைன்

ரஷ்யா தொடர்ந்து உக்ரைனில் கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் ஐந்து போர் விமானங்கள், ஒரு ஹெலிகாப்ட்ரை உக்ரைன் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது!

24 Feb 2022 12 PM

`இந்தியா, ரஷ்யாவிடம் பேச வேண்டும்!’ - உக்ரைன் தூதரம்

`ரஷ்யா-உக்ரைன் போர் சூழ்நிலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்’ என இந்தியா கவலை தெரிவித்துள்ளது. மேலும் இந்திய வெளியுறவுத்துறை, `விரைவில் அமைதி ஏற்படும் என நம்புகிறோம்’ எனக் கருத்து தெரிவித்திருக்கிறது.

உக்ரைன்
உக்ரைன்

இதற்கிடையே, ``ரஷ்யாவுடன் இந்தியா பல ஆண்டுகளாக நல்லுறவில் இருந்துவருகிறது. எனவே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ரஷ்ய அதிபர் மற்றும் உக்ரைன் அதிபரிடம் பேச வேண்டும்” என இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது!

24 Feb 2022 12 PM
24 Feb 2022 11 AM

`ரஷ்யப் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தினோம்!’ - உக்ரைன்

ரஷ்ய அதிபர் புதின் இன்று உக்ரைன்மீது ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவிட, உக்ரைன்மீது குண்டுமழை பொழிந்துவருகிறது. சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் `ரஷ்யப் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தினோம்’ என உக்ரைன் தெரிவித்துள்ளது.

24 Feb 2022 9 AM

`உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள்..!’

உக்ரைன்
உக்ரைன்

உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்தனர். விரைவில் இது ரஷ்யாவால் கைப்பற்றப்படும் முதல் நகரமாக மாறவிருக்கிறது என்ற தகவல் வெளியாகிவருகிறது. விமான நிலையங்கள் தொடங்கி உக்ரைன் நாட்டின் துறைமுகங்களைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறதாம் ரஷ்ய ராணுவம். கருங்கடலை ஒட்டியுள்ள முக்கியமான துறைமுகங்களைக் கைப்பற்ற தீவிரமான தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது என அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது.

24 Feb 2022 9 AM

`நீங்கள் அனுபவித்திராத விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!’ - புதின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

ரஷ்ய அதிபர் புதின், ``எங்களுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடக்கும் போரில் பிற நாட்டினர் யாராவது தலையிட்டால், அவர்கள் இதுவரை சந்தித்திராத, வரலாறு காணாத மோசமான அழிவுகளைச் சந்திக்க நேரிடும்” எனக் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

24 Feb 2022 9 AM

உக்ரைன்-ரஷ்யா போர்... பைடன் கண்டனம்!

ரஷ்யாவின் போர் முடிவுக்கு அமெரிக்கா தனது கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறது. அமெரிக்க அதிபர் பைடன், ``இந்தத் தாக்குதலால் ஏற்படும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு. அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் ஒன்றுபட்ட மற்றும் தீர்க்கமான முறையில் பதிலளிப்பார்கள். உலகம் ரஷ்யாவைப் பொறுப்பேற்கவைக்கும்.

பைடன்
பைடன்
Evan Vucci

ரஷ்ய ராணுவப் படைகளின் நியாயமற்ற தாக்குதலுக்கு ஆளான உக்ரைன் மக்களுக்கு இன்று இரவு முழு உலகத்தின் பிரார்த்தனைகள் உடன் இருக்கும். அதிபர் புதின் ஒரு பெரும் உயிர் இழப்பு, மனித இனத்துக்குத் துன்பத்தைக் கொண்டுவரும் ஒரு திட்டமிட்ட போரைத் தேர்ந்தெடுத்துள்ளார்” என கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், ``நான் இன்று மாலை வெள்ளை மாளிகையிலிருந்து நிலைமையைக் கண்காணித்துவருகிறேன்’’ என்றும் தெரிவித்துள்ளார்.

24 Feb 2022 9 AM

கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தொட்டது!

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவைத் தொடர்ந்து, தற்போது அந்நாட்டுப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியுள்ளது. தொடர்ந்து தாக்குதல் தொடரும் பட்சத்தில், கச்சா எண்ணெய் விலை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

24 Feb 2022 9 AM

உக்ரைன் தலைநகரைத் தாக்கத் தொடங்கின ரஷ்யப் படைகள்

உக்ரைன்  -  ரஷ்யா போர்ப் பதற்றம்
உக்ரைன் - ரஷ்யா போர்ப் பதற்றம்
ட்விட்டர்

ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவைத் தொடர்ந்து, தற்போது அந்நாட்டுப் படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்கிவருவதாகக் கூறப்படுகிறது.

24 Feb 2022 9 AM

கோரிக்கைவைத்த ஐ.நா... நிராகரித்த புதின்!

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இருந்த உலக நாடுகளின் அச்சம்... ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்குமா என்பதற்கு இன்று பதில் கிடைத்திருக்கிறது. போரைத் தொடங்குவதற்கான உத்தரவை ரஷ்ய அதிபர் புதின் வழங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பிரபல செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்க புதின் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆயுதங்களைக் கீழே போடுமாறு உக்ரைனை ரஷ்யா கடுமையாக எச்சரித்துள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவப் படை
உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவப் படை

முன்னதாக இன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், அவசரக் கூட்டத்தை உக்ரைன் விவகாரம் தொடர்பாக நடத்தியது.

அதில் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ, ``உங்கள் படை உக்ரைனைத் தாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என ரஷ்ய அதிபர் புதினைக் கேட்டுக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism