உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடைபெற்றுவரும் போரானது இரண்டு மாதங்கள் கடந்து மூன்றாவது மாதமும் தொடர்கிறது. இந்த நிலையில், நேட்டோவில் உறுப்பு நாடுகளாக இருக்கும், போலந்து, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷ்யா துண்டித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தன. மேற்கு நாடுகளின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி தரும் விதமாக, இனி ரஷ்யாவுடன் மேற்கு நாடுகள் மேற்கொள்ளும் வணிக பரிவர்த்தனைகள் அனைத்தும் ரஷ்ய நாணயத்தில்(ரூபிள்) மட்டுமே இருக்கும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ரஷ்யாவின் அரசு எரிசக்தி நிறுவனமான `காஸ்ப்ரோம்(Gazprom)', நேட்டோவில் அங்கம் வகிக்கும் போலந்து மற்றும் பல்கேரியாவுக்கு இயற்கை எரிவாயு அனுப்புவதை நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த காஸ்ப்ரோம், போலந்து, பல்கேரியா ஆகிய இருநாடுகளும், ரஷ்யாவுடனான தங்களின் வர்த்தகத்தை ரூபிள்களில் செலுத்த மறுத்ததாலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று கூறியது. காஸ்ப்ரோமின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து நேற்று போலந்து நாடாளுமன்றத்தில் பேசிய போலந்து பிரதமர், ``ரஷ்யாவின் இந்த செயலுக்குப் பின்னால் இருக்கும் உண்மைகள், உக்ரைனுக்கான போலந்தின் ஆதரவும், மாஸ்கோவ் மீதான பொருளாதார நடவடிக்கையுமே” என்றார். இதுமட்டுமல்லாமல் காஸ்ப்ரோமின் இந்த செயலை, `ரஷ்யாவின் பிளாக்மெயில்' என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறிவருகிறது.
ரஷ்யாவுடனான வர்த்தகத்தில், ரூபிள்களில் பணம் செலுத்தும் உடன்படிக்கைக்கு உடன்படாத மற்ற நாடுகளுக்கும் இனி இயற்கை எரிவாயு அனுப்புவது துண்டிக்கப்படும் என்று எச்சரித்ததாக, செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
