Election bannerElection banner
Published:Updated:

`ரஷ்ய அதிபரின் கைப்பாவை... புத்திசாலி இல்லை!'- அனல்பறந்த ட்ரம்ப் - ஜோ பைடன் நேரடி விவாதம்

விவாதம்
விவாதம் ( OLIVIER DOULIERY )

ஒரு கட்டத்தில் விவாதமானது இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட மோதலாக உருவெடுத்தது. ஜோ பைடன் பேசும்போது அடிக்கடி ட்ரம்ப் இடையில் குறுக்கீடு செய்ய, அவரை வாயை மூடியிருக்குமாறு சாடினார் பைடன்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையடுத்து 35 நாள்களுக்கு முன்னர் தொடங்கிய முதல் விவாதத்திலேயே தேர்தலுக்கான போட்டி சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில் எதிர்பார்த்ததுபோல ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ட்ரம்ப் இருவருக்கும் இடையேயான விவாதம் காரசாரமாக அமைந்தது. கொரோனா காரணமாக இரு போட்டியாளர்களும் சம்பிரதாயப்படி கைகுலுக்கிக்கொள்ளவில்லை. மேலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் நோக்கில் அதிகப்படியான பார்வையாளர்களுக்கு விவாத இடத்துக்கு வர அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் மக்களின் எந்த ஆராவரமும் ஆர்ப்பரிப்பும் இன்றியே கிளைவ்லேண்டில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முதல் கேள்வியாக மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் பாடர் கின்ஸ்பர்க்கு (Ruth Bader Ginsburg) பதிலாக ட்ரமப், ஏமி கானி பாரட்டை (Amy Coney Barrett) பரிந்துரைத்ததை நெறியாளர் `ஃபாக்ஸ் நியூஸ்' கிறிஸ் வாலஸ் முன்வைத்தார். இதற்கு ட்ரம்ப், ``நாங்கள் தேர்தலில் வென்றோம். தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் பாதிப்புகள் இருக்கும். எங்களிடம் செனட் மற்றும் வெள்ளை மாளிகை இருக்கின்றன. மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிக்கான தனித்துவமான வேட்பாளரும் எங்களிடம் இருக்கிறார்'' என்றார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜோ பைடன் `தேர்தல் முடிந்து யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்' என்றார்.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்
OLIVIER DOULIERY

இந்த விவாதத்தின் முக்கியப் பேசுபொருளாக அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அமைந்தது குறிப்பிடத்தக்கது. `இதையடுத்து சுகாதாரம் தேவைப்படுபவர்களுக்கு அதிபர் ட்ரம்ப்பால் எந்தப் பயனும் இல்லை. இங்கு அனைவருக்கும் ட்ரம்ப், எப்போதும் பொய் பேசுபவர் என்று தெரியும்’ என்றார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்ரம்ப், அவரது சுகாதாரத் திட்டங்களை விளக்க, இதைப் பற்றி எந்தவிதமான திட்டமும் இல்லாமல் ட்ரம்ப் பேசுகிறார் என்றார் ஜோ பைடன்.

உடல்நலக் குறைவு - இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்! #NowAtVikatan

ஒருகட்டத்தில் விவாதம், இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட மோதலாக உருவெடுத்தது. ஜோ பைடன் பேசுகையில் ட்ரம்ப் அடிக்கடி குறுக்கீடு செய்யவே, அவரை வாயை மூடியிருக்குமாறு சாடினார் பைடன். அதே சமயம், `இது அதிபருக்கான பண்பில்லை’ என்றும் கூறினார். பின்னர், ட்ரம்ப் வருமான வரி செலுத்தாமல் இருப்பதைப் பற்றி விவாதம் எழுந்தது. அதற்கு ட்ரம்ப் 2016-ம் ஆண்டு முதல் பல நூறு மில்லியன் டாலர்களுக்கும் மேல் வருமான வரி கட்டியிருப்பதாகத் தெரிவித்தார். இதற்கான ஆதாரத்தைப் பற்றி நெறியாளர் கிரிஸ் வாலஸ் கேட்டபோது ``நீங்கள் பார்ப்பீர்கள்’’ என்பது மட்டுமே ட்ரம்ப்பின் பதிலாக அமைந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட ஜோ பைடன், ``அதிபர் ட்ரம்ப் வரி செலுத்துவது தொடர்பான சட்டங்களைத் தனக்கு சாதகமான முறையில் பயன்படுத்துகிறார். அவர் ஒரு பள்ளி ஆசிரியரைவிடக் குறைந்த அளவிலான வரியையே கட்டுகிறார்’’ என்று குற்றம்சாட்டினார். இதற்கு ட்ரம்ப்,``எல்லாத் தொழிலதிபர்களும் அதையே செய்வார்கள், அவர்கள் முட்டாளாக இல்லாதவரை... அதைத்தான் நானும் செய்தேன்’’ என்றார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்
Andrew Harnik

இந்த விவாதத்தில் `ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினின் கைப்பாவை’ என்று நேடியாக விமர்சித்தார் ஜோ பைடன். ஆப்பிரிக்க - அமெரிக்கர்களைக் குறிப்பிட்டுப் பேசிய பைடன், ``ட்ரம்ப் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் பாதுகாவலரா... இந்த மனிதர் அவர்களுக்காக எதுவும் செய்யவில்லை. இதுவரை ஆயிரத்தில் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார். இவர் எதுவும் செய்யாமல் இப்படியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் அந்த எண்ணிக்கை 500-ல் ஒருவராக மாறும்'' என்றார். ஜோ பைடனைப் பார்த்து ட்ரம்ப், `நீங்கள் ஒன்றும் புத்திசாலி இல்லை' என்று விமர்சித்தார்.

இறுதியாக இந்த விவாதம் இருவரின் குடும்ப உறுப்பினர்களையும் விமர்சனம் செய்யும் அளவுக்கு நீண்டது. அக்டோபர் 15, அக்டோபர் 22 ஆகிய தேதிகளில் இருவருக்குமிடையிலான அடுத்த இரண்டு விவாதங்கள் நடைபெறவிருக்கின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு