Published:Updated:

மௌரியா `பிரெசிடென்ட் சூட்'டில் டெல்லி காற்று மாசு ட்ரம்பை பாதிக்காது..! ஏன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டெல்லி வரும் பிரெசிடென்ட் டொனால்டு ட்ரம்ப்
டெல்லி வரும் பிரெசிடென்ட் டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்காக மௌரியா ஹோட்டலில் பிரெசிடென்ட் சூட் தயார் செய்யப்பட்டுள்ளது. அதிபர் பயணிக்கும் பீஸ்ட் ரக கார்கள் குளோப்மாஸ்டர் சரக்கு விமானத்தில் அகமதாபாத் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தியா வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் டெல்லி சாணக்யாபுரியில் உள்ள ஐ.டி.சி மௌரியா ஹோட்டலில் மனைவி மெலேனியாவுடன் தங்குகிறார். இதற்காக, ஹோட்டலில் பிரெசிடென்ட் சூட் பகுதி ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ளது. சுமார் 4,800 சதுர அடி கொண்ட இந்த அறையில்தான் டொனால்டு ட்ரம்ப்பும் அவரின் மனைவியும் தங்க இருக்கின்றனர். ஹோட்டலுக்குள் சென்றதும் 14 வது மாடியில் உள்ள இந்த அறைக்குச் செல்வதற்கு என்று தனி லிப்ட் உள்ளது. பிரெசிடென்ட் சூட்டில் இரு படுக்கை அறைகள், வரவேற்பு அறை, படிப்பறை, 12 இருக்கைகள் கொண்ட மயில்தோகை வடிவிலான டைனிங் ஹால், மினி ஸ்பா மற்றும் ஜிம் ஆகியவை உள்ளன. அறை முழுவதும் அழகு நிறைந்த கலை வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன.

டெல்லி மௌரியா ஹோட்டல்
டெல்லி மௌரியா ஹோட்டல்
itchotels.in

மௌரியா ஹோட்டலில் சர்வதேச சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவீட்டுடன்கூடிய தரமான காற்று ட்ரம்ப் தம்பதிக்குக் கிடைக்கும். ஏனென்றால், காற்றைச் சுத்தப்படுத்தும் கருவிகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. இதனால், அமெரிக்க அதிபர் தாராளமாக சுகாதாரமான காற்றைச் சுவாசிக்கலாம். இதற்கு முன், மௌரியா ஷெரட்டன் ஹோட்டலில் மூன்று அமெரிக்க அதிபர்கள் தங்கியுள்ளனர். கிளின்டன் இந்தியா விசிட்டின்போது இங்கேதான் தங்கினார். 2015-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க வந்திருந்த அமெரிக்க அதிபர் ஓபாமா, இதே பிரெசிடென்ட் சூட்டில்தான் தங்கினார். 2006-ம் ஆண்டு ஜார்ஜ் புஷ் இந்தியாவுக்கு வந்தபோதும் இதே ஹோட்டலில்தான் முகாமிட்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் வரும் அமெரிக்க அதிகாரிகள் தங்குவதற்கு டெல்லியில் உள்ள பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் புக் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபரின் ஏர்ஃபோர்ஸ் ஓன் விமானம் எங்கு சென்றாலும் உடன் சி-17 குளோப்மாஸ்டர் சரக்கு விமானமும் செல்லும். அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் கார்கள் உட்பட முக்கியமான பொருள்களைக் கொண்டு செல்வது குளோப்மாஸ்டர் விமானத்தின் பணி. அமெரிக்க அதிபர்கள் சாலை பயணத்துக்காக ஜெனரல் மோட்டார்ஸ் தயாரித்த இரண்டு பீஸ்ட் 2.0 ரக கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கார்கள் உள்ளிட்ட 69 வாகனங்கள், அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான ஏழு குளோப்மாஸ்டர் விமானங்களில் கடந்த திங்கள்கிழமை இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது, காந்திநகர் விமான நிலையத்தில் இவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அகமதாபாத் வந்த குளோப் மாஸ்டர் விமானம்
அகமதாபாத் வந்த குளோப் மாஸ்டர் விமானம்
PTI
போயிங் 757 கதவுகள், செல்லப் பெயர் கப்பல்.. ஆனால் இது ட்ரம்ப்பின் பீஸ்ட் கார்! #VikatanInfographics

பீஸ்ட் ரக கார்களின் ஜன்னல்களில் 5 இன்ச் தடிமன் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. காரின் கதவுகள் விமானத்தின் கதவுகளுக்கு இணையான தடிமனைக் கொண்டது. டைட்டானியம், செராமிக்ஸ் கொண்டு இந்த காரின் பாடி உருவாக்கப்பட்டடுள்ளது. மேலும் 'Bombproof plate'-ம் பொருத்தப்பட்டிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காரின் எடை 7,000 கிலோவில் இருந்து 10,000 கிலோ வரை இருக்கலாம். விலை கிட்டத்தட்ட ரூ.14 கோடி. உலகிலேயே பாதுகாப்பு மிகுந்த விமானம் ஏர்ஃபோர்ஸ் ஓன் என்றால் பாதுகாப்பு மிகுந்த கார் இதுதான். சாட்டிலைட் போன் வசதியும் உண்டு. டீசலில் ஓடும் இந்த கார், லிட்டருக்கு 3 கிலோமீட்டர் மைலேஜ்தான் கொடுக்கும். இந்த வாகனத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை இதுவரை அமெரிக்க புலனாய்வு அமைப்பினர் வெளியிட்டதில்லை. இந்த வாகனத்தை ஓட்டும் டிரைவரிடம்கூட கைத்துப்பாக்கி உண்டு என்று சொல்வார்கள்.

இது விமானமல்ல, பறக்கும் வெள்ளை மாளிகை... இந்தியா வரும் ட்ரம்ப்பின் 3 மாடி போயிங்747 #VikatanInfographics

ட்ரம்ப்புக்கு இந்தியாவில் அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து அமெரிக்க ரகசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் விவாதித்து வருகின்றனர். ஐந்து அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் `நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி நடைபெறும் சர்தார் வல்லபபாய் படேல் மைதானத்தை நேற்று பார்வையிட்டனர். தாஜ்மகாலுக்கும் அமெரிக்காவின் முதல் தம்பதி செல்லவிருப்பதால், அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ட்ரம்ப்புக்கு அருகிலிருந்து அமெரிக்க ரகசிய புலனாய்வு அமைப்பினர் பாதுகாப்பு வழங்குவார்கள். தொடர்ந்து தேசிய பாதுகாப்புப் படையினர் (என்.எஸ்.ஜி) இரண்டாவது அடுக்கிலும் மூன்றாவது அடுக்கில், `சேதக் ஃபோர்ஸ்' எனப்படும் குஜராத் மாநில போலீஸ் கமாண்டோக்களும் பாதுகாப்பு அளிப்பார்கள். 2008-ம் ஆண்டு அகமதாபாத் மற்றும் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து குஜராத் மாநில அரசு சேதக் ஃபோர்ஸ் எனும் இந்த சிறப்பு பாதுகாப்புப் படையினரை உருவாக்கியுள்ளது. தீவிரவாதிகளை எதிர்கொள்வதில் இந்தப் படையினர் அபாரத் திறமை கொண்டவர்கள்.

குஜராத் சேதக் ஃபோர்ஸ்
குஜராத் சேதக் ஃபோர்ஸ்
Twitter

இவர்களுக்கு அடுத்தபடியாக இந்திய போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள். அமெரிக்க அதிபரின் காருக்கு முன்னும் பின்னும் 14 வாகனங்களில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் சென்று பாதுகாப்பு அளிப்பார்கள். அடுத்ததாக என்.எஸ்.ஜி பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் வரும். குறிப்பாக, அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வல்லபபாய் பட்டேல் மைதானம் வரை உள்ள 22 கிலோமீட்டர் தொலைவுக்கு ட்ரம்ப் காரில் அழைத்துச் செல்லப்படுவதால், இங்கே வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒவ்வொரு நாளும் ஆய்வு செய்து வருகிறார்.

உலகிலேயே பாதுகாப்பு மிகுந்த மனிதர் இந்தியா வருகிறார் என்றால் சும்மாவா என்ன?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு