Published:Updated:

`27 வயதில் அரசியல் என்ட்ரி; 34 வயதில் நாட்டின் தலைவர்!' - உலகின் இளம் பிரதமராகிறார் சன்னா மரின்

இளம் பிரதமர் சன்னா மரின்
இளம் பிரதமர் சன்னா மரின் ( Twitter/@MarinSanna )

ஃபின்லாந்தைச் சேர்ந்த 34 வயதான சன்னா மரின் என்ற பெண் உலகின் இளவயது பிரதமராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஃபின்லாந்தில் சமூக ஜனநாயக கட்சி, பிற நான்கு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஆன்டி ரின்னே (Antti Rinne) கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். அவரின் ஆட்சிக் காலத்தில் நடந்த தபால்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தத்தைச் சரிவரக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

பிரதமர் வேட்பாளர்கள்
பிரதமர் வேட்பாளர்கள்

இதையடுத்து கடந்தவாரம் அவர் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கின. ஃபின்லாந்தின் ஆளும் கூட்டணியில் உள்ள ஐந்து கட்சிகளில் இருந்தும் ஒருவர் என மொத்தம் ஐந்து பேர் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டனர். அந்த ஐந்து பேருமே பெண்கள். ஒருவரைத் தவிர மீதமுள்ள நான்கு பேரும் 35 வயதுக்குக் குறைவானவர்கள்.

இந்நிலையில், நேற்று சமூக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 34 வயதான சன்னா மரின் (Sanna marin) ஃபின்லாந்தின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் தற்போது உலகிலேயே இளவயது பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சன்னா. மேலும் ஃபின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையும் இவரைச் சேர்ந்துள்ளது.

சன்னா மரின்
சன்னா மரின்
Twitter/@MarinSanna

உலகில் 40 வயதுக்கும் கீழே உள்ள பிரதமர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. சன்னாவுக்கு முன்பு நியூசிலாந்தைச் சேர்ந்த 39 வயதான ஜசிண்டா ஆர்டர்ன் தான் (Jacinda ardern) உலகின் இளம் வயது பிரதமராக இருந்தார். சன்னா மரின் இந்த வாரம் ஃபின்லாந்தின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.

Vikatan

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சன்னா, ``மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்காக நாங்கள் இன்னும் அதிகம் உழைக்கவேண்டியுள்ளது. என் வயது மற்றும் பாலினம் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் அரசியலுக்கு வந்த காரணத்துக்காகவும் மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்காகவும் மட்டும் செயல்பட உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சன்னா மரின்
சன்னா மரின்
Twitter/@MarinSanna

தன் சொந்த ஊரில் நகரசபைத் தலைவராகப் பொறுப்பேற்றதன் மூலம் 27 வயதில் அரசியலில் அடி எடுத்து வைத்தார் சன்னா. அதன்பின் நிறைய பதவிகளை வகித்து தற்போது நடக்கும் ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அரசியலுக்கு வந்த ஏழே வருடங்களில் ஒரு நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்கவுள்ளார் சன்னா மரின்.

அடுத்த கட்டுரைக்கு