முகமது நபிகள் தொடர்பாக பா.ஜ.க பிரமுகர்கள் சிலர் தெரிவித்த கருத்துகள் சர்வதேச அளவில் பெரும் சர்சையைக் கிளப்பியிருக்கின்றன. இஸ்லாமிய நாடுகள் பலவும் இந்த விவகாரத்தில் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றன. இஸ்லாமிய நாடுகளின் கண்டனத்துக்கு இந்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு திருப்தியளிக்கும் விதமாக இருப்பதாக ஈரான் அரசு தெரிவித்திருக்கிறது.
அரசு முறை பயணமாக இந்தியா வந்திருக்கும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், முதல் நாளான நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனுடன், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஹொசைன் அமீருடன் இருநாட்டு ஒத்துழைப்பு, வர்த்தகம், தொடர்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல ஈரான் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ``ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் புதன்கிழமை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சந்தித்து நபிகள் தொடர்பான பிரச்னை குறித்து விவாதித்தார். அப்போது அவர் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். முகமது நபிகள் பற்றி தவறாக கருத்து கூறியவர்களை கையாள்வதில் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளில் ஈரான் திருப்தி அடைகிறது.
மத நம்பிக்கைகள், குறிப்பாக நபிகள் நாயகம் விவகாரம், மத சகிப்புத்தன்மை, வரலாற்று சகவாழ்வு மற்றும் நாட்டில் உள்ள பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே நட்புறவு ஆகியவற்றிற்கு மரியாதை செலுத்தியதற்காக இந்திய மக்களையும், அரசாங்கத்தையும் பாராட்டுகிறோம். மேலும், இஸ்லாமியர்களின் மத புனிதம் குறித்த உணர்வுகளுக்கு இந்திய அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
