Published:Updated:

இம்ரான் கானுக்கு வழங்கிய தனது விமானத்தை சவுதி இளவரசர் பிடுங்கினாரா?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அதிகாரிகள் கமர்ஸியல் விமானத்தில் தாய்நாடு திரும்பினர்.

சவுதி இளவரசருடன் இம்ரான் கான்
சவுதி இளவரசருடன் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு வழங்கிய தனி விமானத்தை, சவுதி இளவரசர் கட்டாயமாகத் திரும்பப் பெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் சவுதி சென்றிருந்தார். பின்னர், ஜெட்டாவிலிருந்து ஐ.நா-வின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, கமர்ஸியல் விமானத்தில் நியூயார்க் செல்லவிருந்த இம்ரான் கானுக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தன்னுடைய தனி விமானத்தை வழங்கினார்.

சவுதி இளவரசருடன் இம்ரான் கான்
சவுதி இளவரசருடன் இம்ரான் கான்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, செப்டம்பர் 28-ம் தேதி நியூயார்க்கிலிருந்து இம்ரான் கான் உள்ளிட்ட பாகிஸ்தான் குழுவினர் இஸ்லாமபாத் திரும்பிக் கொண்டிருந்தனர். சவுதி இளவரசர் அளித்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இம்ரான் கானும், அவரது குழுவும் மீண்டும் நியூயார்க் திரும்பினர். பின்னர், கமர்ஸியல் விமானத்தின் மூலம் பாகிஸ்தான் சென்றனர்.

ஆனால், இம்ரான் கானிடம் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக அவருக்கு, தாம் வழங்கிய விமானத்தை, சவுதி இளவரசர் கட்டாயமாகத் திரும்பப் பெற்றதாக பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் 'the friday times 'என்ற வாரப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் இருந்தபோது இரானுக்கும் மற்ற வளைகுடா நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னைகளுக்கு, தாம் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக இம்ரான் கான் அறிவித்தது, துருக்கி அதிபர் எர்டோகன், மலேசியப் பிரதமர் மகாதீர், இரான் அதிபரை இம்ரான் கான் சந்தித்துப் பேசியது, சவுதி இளவரசரை கோபப்படுத்தியதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தனி விமானம்
தனி விமானம்

இதுகுறித்து, `சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் சகோதரப் பாசம் கொண்ட நாடுகள். முற்றிலும் ஜோடிக்கப்பட்ட செய்தி' என்று பாகிஸ்தான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரசு தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.