Published:Updated:

காஷ்மீர்: PoK பகுதிகளை பாகிஸ்தான் வரைபடத்திலிருந்து நீக்கிய சவுதி அரேபியா! - என்ன நடந்தது?

இம்ரான் கான்
இம்ரான் கான்

சமீபத்தில், பாகிஸ்தான் அரசு கில்kiத்-பல்திஸ்தான் பகுதியில் வரும் நவம்பர் 15-ம் தேதி தேர்தல் நடத்தி, அதை பாகிஸ்தானின் 5-வது மாகாணமாக மாற்றுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் அறிவித்தார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளான கில்கித்- பல்திஸ்தான் பகுதிகளை பாகிஸ்தான் வரைபடத்திலிருந்து நீக்கி சவுதி அரேபியா புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) ஆர்வலரான அம்ஜத் அயூப் மிர்சா, இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ``பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளான கில்கித்- பல்திஸ்தானை நீக்கி, புதிய வரைபடத்தை சவுதி அரேபியா அரசு வெளியிட்டிருக்கிறது. இது சவுதி அரேபியா இந்தியாவுக்கு அளிக்கும் தீபாவளிப் பரிசு” என்று அந்த வரைபடத்துடன் பதிவிட்டிருந்தார்.

காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்துவந்த கில்கித்-பல்திஸ்தான் பகுதிகள். 1947-ம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குச் சென்றன.

வரைபடம்
வரைபடம்

இந்நிலையில், சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு நவம்பர் 21 மற்றும் 22-ம் தேதிகளில் நடக்கவிருக்கும் ஜி-20 உச்சி மாநாட்டை நினைவுகூரும்விதமாக 20-ரியால் (சவுதி நாட்டின் செலவாணி) நோட்டைக் கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி வெளியிட்டது. இதன் பின்புறத்தில் அச்சிடப்பட்டிருந்த வரைபடத்தில் காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளாக கூறப்படும் கில்கித்- பல்திஸ்தான் பகுதிகளை பாகிஸ்தான் வரைபடத்திலிருந்து நீக்கி, புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

இது தொடர்பாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியில், ``சவுதி அரேபியாவின் இந்தச் செயல் பாகிஸ்தானைத் தாக்கும் வகையில் இருப்பதாகவும், மேலும் இது சவுதி அரேபியாவின் ஒரு புதிய கூட்டணிக்கு வழிவகை செய்வதாகவும் தோன்றுகிறது” என்று கூறப்பட்டிருக்கிறது.

சமீபத்தில், பாகிஸ்தான் அரசு கில்கித்-பல்திஸ்தான் பகுதியில் வரும் நவம்பர் 15-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தி, அதை பாகிஸ்தானின் 5-வது மாகாணமாக மாறறுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். இதற்கு பதிலளிக்கும்விதமாக காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்ட இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், `கில்கித்-பல்திஸ்தான் உட்பட ஜம்மு காஷ்மீர், லடாக்கின் ஒட்டுமொத்த பகுதிகளும் 1947-ம் ஆண்டு இணைப்பின்படி, இந்திய நாட்டுக்கு உட்பட்ட பகுதிகள்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் இந்தப் பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அங்கிருக்கும் மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்துவருகிறது. இதனால் உடனடியாக அந்தப் பகுதிகளிலிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்” என்று கூறியது.

இதற்கு முன்னர், கடந்த ஆகஸ்ட் மாதம், 5-ம் தேதி ஜம்மு & காஷ்மீர், லடாக் உட்பட குஜராத்தின் ஜுனகத் (Junagad), சர் க்ரீக் (Sir Creek) மற்றும் மனவதர் (Manavadar) உள்ளிட்ட பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் ஒன்றை பாகிஸ்தான் அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு