Published:Updated:

`நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலையை உயர்த்துவோம்!'- எச்சரிக்கும் சவுதி

இரானுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், உலக நாடுகளின் நலன்களை அச்சுறுத்தும் வகையில், பிரச்னை விரிவடையும்.

Oil Factory
Oil Factory

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திலிருந்து 330 கி.மீ. தொலைவில் அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்திலும் உள்ள எண்ணெய் வயல்கள்மீது கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி, ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் எரிந்துவிட்டதாகச் சவுதி அரசு தெரிவித்திருந்தது. 

ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் காரணமாக, எண்ணெய் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. தாக்குதலுக்கு இரான்தான் காரணம் என்று அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், ஏமனிலிருந்துதான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் கூறியுள்ளது.

Mohammed bin salman
Mohammed bin salman

அரம்கோ மீதான தாக்குதலால் இரான் - சவுதி அரேபியா இடையேயான பகை முற்றத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து, செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், இரானுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், உலக நாடுகளின் நலன்களை அச்சுறுத்தும் வகையில், பிரச்னை விரிவடையும். எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு விலை உயரக் கூடும் என்றும், நமது வாழ்வில் கண்டிராத மற்றும் கற்பனை செய்து பார்த்திராத வகையில் விலை உயர்வு இருக்கும் என்றும், அது நடக்கக் கூடாது என்று விரும்பினால், இரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேவேளையில் ராணுவத்தைவிட, அரசியல் மற்றும் அமைதி வழியில் தீர்வு காண்பது சிறப்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகுக்குத் தேவையான 10 சதவிகித கச்சா எண்ணெய் சவுதி அரேபியாவில் உற்பத்தியாகும் நிலையில், அவர் கூறியதுபோல விலை அதிகரித்தால், சவுதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலக நாடுகளின் பொருளாதாரமும் ஸ்தம்பித்துவிடும் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.