அரச பிடியை இறுக்கும் பின் சல்மான்; மன்னரின் சகோதரர் கைது? - சவுதி இளவரசரைச் சுற்றும் புதிய சர்ச்சை

அரசுக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டியதாகக் கூறி மன்னரின் சகோதரர் உட்பட 3 சவுதி இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சவுதியைப் பொறுத்தவரை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் அந்த நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர். அந்தவகையில் அங்கு மன்னராக சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் உள்ளார். இவர் மன்னராக இருந்தாலும் இவரின் மகன் முகமது பின் சல்மான்தான் அந்நாட்டின் ஆட்சியாளராகவும் சவுதியின் முடி இளவரசராகவும் உள்ளார். தற்போது இவரே சவுதியின் அரச முடிவுகள், பொறுப்புகள் என அனைத்தையும் கவனித்து வருகிறார். முகமது பின் சல்மான் முடி இளவரசராக பொறுப்பேற்றபிறகு, சவுதியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பெண்களுக்கு உரிமைகள், பொழுதுபோக்கு வசதிகள் என முன்பு இல்லாத பல்வேறு புதிய விஷயங்களைக் கொண்டுவந்துள்ளார். அதேநேரம் இவருக்கு எதிராக பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகின்றன.

சவுதியில் என்னதான் அரசக் குடும்பத்தின் ஆட்சி நடந்தாலும் அங்கும் குடும்பச் சண்டை, பதவி மோதல் எனத் தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளன. அதில் ஒன்றாக தற்போது சவுதி அரசக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளவரசர்கள் அரசுக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மூவரும் மன்னரின் நெருங்கிய சொந்தங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸின் சகோதரரும் இளவரசருமான அகமது பின் அப்துல்ஸீஸ், மன்னரின் மருமகன் முகமது பின் நயீப் மற்றும் நயீபின் சகோதரர் நவாஸ் பின் நயீப் ஆகிய மூன்று பேரும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு, நேற்று காலை அரச காவலர்களால் அவர்களது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் (wall street journal) பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கைது தொடர்பாக சவுதி அரசு இன்னும் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தன் கைக்கு முழு அதிகாரம் வருவதற்குள் தனக்கு எதிராகச் செயல்படும் அனைவரையும் ஒடுக்க நினைப்பதாகவும் அதன் ஒரு பகுதியாகவே தற்போது இவர்களின் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் தன் அதிகாரத்தின் பிடியைப் பலப்படுத்துவதற்காகச் சவுதியின் முக்கிய மதகுருமார்கள், ஆர்வலர்கள், போட்டியாக வரும் இளவரசர்கள் மற்றும் செல்வந்தர்கள் போன்ற பலரைக் கைது செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி தூதரகத்துக்குச் சென்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாகச் சவுதி இளவரசர் பின் சல்மான், சர்வதேச கண்டனங்களை எதிர்கொண்டார். இளவரசருக்கு எதிராகச் செயல்பட்டதால்தான் கஷோகி கொலை செய்யப்பட்டார் என்ற தகவலும் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

இளவரசரின் ஒடுக்குமுறை பற்றி சமீபத்தில் பேசியிருந்த RAND கார்ப்பரேஷனின் கொள்கை ஆய்வாளர் பெக்கா வாஸர், ``சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மிகவும் தைரியமாக இருக்கிறார். அவர் ஏற்கெனவே தனது உயர்வுக்குத் தடையாக இருப்பவர்களைத் தொடர்ந்து வெளியேற்றி வருகிறார். அவரது ஆட்சியைப் பற்றி விமர்சிப்பவர்களை எந்தவித விசாரணையும் இன்றி கைது செய்து சிறையில் அடைக்கிறார் அல்லது கொலை செய்கிறார்” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.