Published:Updated:

பளீர் தீர்ப்பின்மூலம் பிரதமருக்குச் சவுக்கடி கொடுத்த உச்ச நீதிமன்றம் - இது பிரிட்டன் அரசியல்!

அக்டோபர் 14 வரை ஐந்து வாரங்கள் நாடாளுமன்றம் செயல்படாது என்று போரிஸின் வேண்டுகோளுக்கிணங்கி அறிவித்தார் பிரிட்டிஷ் அரசி.

Brexit
Brexit

பிரிட்டன் குழப்பத்தில் தவித்துக்கொண்டிருக்கிறது. தேன்கூட்டில் கைவிட்டுக் கலைத்த கதையாக அலறிக்கொண்டிருக்கிறார்கள், பிரிட்டிஷ் அமைச்சர்கள். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிவதைக் குறிப்பதே பிரெக்ஸிட் (Brexit - British Exit) என்பதன் பொருள். பிரெக்ஸிட் இழுபறியில் தெரசா மே பதவி விலகப் பிரிட்டனைக் காப்பாற்றுவார் என ஆட்சியை போரிஸ் கையில் ஒப்படைத்தது, அந்நாட்டு நாடாளுமன்றம்.

boris johnson
boris johnson

எல்லைப் பாதுகாப்பு, குடியுரிமை, வர்த்தகம், போக்குவரத்து, உணவுக் கொள்முதல் எனப் பல்வேறு விஷயங்களில் பிரிட்டன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில், பிரிட்டனுக்குச் சாதகமான முடிவு எட்டப்பட வேண்டும். ஆனால், அப்படி இல்லாத பட்சத்தில் ஒப்பந்தமின்றியே பிரிட்டன் வெளியேறும் எனத் திட்டவட்டமாக அறிவித்திருந்தார், போரிஸ். இதற்காக அக்டோபர் 31 ஆம் தேதி காலக்கெடுவும் விதித்தார்.

இதற்குப் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வந்தார். இந்த எதிர்ப்புகளைச் சமாளிக்கும் விதமாகக் கடந்த மாதம் பிரிட்டன் நாடாளுமன்றத்தைத் தற்காலிகமாகக் கலைத்தார் போரிஸ். அக்டோபர் 14ம் தேதி வரை ஐந்து வாரங்கள் நாடாளுமன்றம் செயல்படாது என்று போரிஸின் வேண்டுகோளுக்கிணங்க அறிவித்தார் பிரிட்டிஷ் அரசி.

Brexit
Brexit

இதனால், பிரிட்டன் அமைச்சர்களால் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைய முடியாமல் போனது. பிரெக்ஸிட் ஒப்பந்த விஷயத்தில் எவ்விதமான முடிவுகளையும் எடுக்கவும் தனி அதிகாரம் படைத்தவரானார் போரிஸ். ஒப்பந்தமின்றி பிரிட்டிஷ் வெளியேறுவதைத் தடுக்க அமைச்சர்களால் எதிர்ப்புக் குரல் எழுப்ப முடியாமல் போனது. இந்நிலையில், போரிஸ் எடுத்த இந்த முடிவினை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் சமூகச் செயற்பாட்டாளர் ஜினா மில்லர் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் போரிஸ் செய்தது சட்ட விரோதமானது எனவும், அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் செப்டம்பர் 24 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது எனவும், இன்னும் நாடாளுமன்றம் செயல்பாட்டில் இருப்பதாகவே கணக்கில் கொள்ளப்படும் என்றும், இப்படி ஒரு முடிவினால், முறையான காரணங்களின்றி போரிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமைகளைச் செய்ய விடாமல் தடுத்தது தவறு எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம்.... இந்தியாவில் பெட்ரோல், டீசல், தங்கம் விலை உயருமா?!

வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இந்தத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றம், பிரதமர், உச்ச நீதிமன்றம் என அதிகார மையங்களின் உரிமைகளும், கடமைகளும் மீண்டும் ஒருமுறை தெளிவுற வரையறுக்கப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் அரசியல் விமர்சகர்கள் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற வேண்டிய நாள் நெருங்கும் வேளையில், இந்தக் குழப்பங்கள் அந்நாட்டிற்குப் பெரும் நெருக்கடியை அளித்துள்ளன.