லெபனான்: `சிதைந்த 120 பள்ளிகள்; செயல்பட முடியாத மருத்துவமனைகள்!'- அதிரவைக்கும் பாதிப்புகள்

``சுமார் 50,000 மாணவர்கள் படித்துவந்த 120 பள்ளிகள் இந்த விபத்தில் சிதைந்துள்ளன. லட்சக்கணக்கான மக்களின் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.’’
லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து அந்நாட்டுக்கு மிகப்பெரிய அடியாக இருந்து வருகிறது. `இந்த பாதிப்பிலிருந்து மீண்டுவர லெபனானுக்குப் பல மாதங்கள் தேவைப்படும்’ என்று கூறப்படுகிறது. துறைமுகத்திலிருந்த கிடங்கில் பல ஆண்டுகளாக இருந்த சுமார் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட்தான் இந்த மிகப்பெரிய பாதிப்புக்குக் காரணமாக கூறப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக துறைமுக அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடமும் தீவிரமாக விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், வெடி விபத்து தொடர்பாக அந்நாட்டிலிருந்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கும்விதமாக உள்ளன.

பெய்ரூட் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருகிறது. இறுதியாக வெளியான தகவலின்படி, லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180-ஐ நெருங்கியுள்ளது. குறைந்தபட்சம் 30 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். 6,000-க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து எடுக்கப்பட்ட விவரங்களின்படி, விபத்து நடந்த இடத்தைச் சுற்றி 15 கி.மீ தொலைவிலுள்ள மருத்துவ வசதிகள் தொடர்பாக இயங்கும் சுமார் 55 கட்டடங்கள் பாதிப்படைந்துள்ளன. அவற்றில் பாதி மட்டுமே தற்போது பயன்பாட்டில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறு மருத்துவமனைகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிளினிக்குகள் முற்றிலுமாகச் செயல்பாடுகளை இழந்துள்ளன. மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் பள்ளிகளும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. சுமார் 50,000 மாணவர்கள் படித்துவந்த 120 பள்ளிகள் இந்த வெடி விபத்தில் சிதைந்துள்ளன. லட்சக்கணக்கான மக்களின் குடியிருப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளான இருப்பிடம், மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்கள் என அனைத்தையும் லெபனான் மக்கள் இழந்து நிற்கின்றனர். 13 அகதிகளும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். `பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் லெபனான் மக்கள் தங்களது இருப்பிடத்தை மீட்டெடுப்பது அல்லது சரிசெய்வது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கலாம்’ என ஐ.நா கருத்து தெரிவித்துள்ளது. எனினும், பாதிப்படைந்த குடியிருப்புகளில் 55% மக்கள் வாடகை வீடுகளில் வசித்துவந்ததால், மக்கள் எளிதாகத் தங்களது இடத்தை மாற்றிக்கொள்ளலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் வெடிவிபத்து பாதிப்புகள் அதிகமாக இருக்க, மறுபுறம் கொரோனா பரவல் தொடர்பான கவலைகளும் அதிகாரிகளிடையே அதிகரித்துவருவதாகக் கூறப்படுகிறது.

பாதிப்படைந்த மக்களுக்கு உதவ தன்னார்வலர்கள் வருவதால் லெபனானில் பாதிப்படைந்த பகுதிகளில் வேறு வழியின்றி தனிமனித இடைவெளி போன்ற கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் ஏற்பட்ட இந்த விபத்தைத் தொடர்ந்து மக்கள் பலரும் போராட்டத்தில் இறங்கினர். ஊழல் குற்றச்சாட்டுகள், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டங்களில் வன்முறைகளும் நடந்துள்ளன. இதையடுத்து, கடந்த ஆக்ஸ்ட் 10-ம் தேதி பிரதமர் டியாப் தலைமையிலான அரசு மொத்தமாக பதவி விலகிக் கொள்வதாகவும், அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகின.