Published:Updated:

`பரம எதிரிக்குத் தக்க பதிலடி காத்திருக்கிறது!’ -அமெரிக்க தாக்குதலால் கொதிக்கும் இரான் தலைவர்

அலி கமேனி
அலி கமேனி ( Ap )

இரான் மீது அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு மூத்த தலைவர் அலி தெரிவித்துள்ளார்.

இராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை அமெரிக்கப் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரான் நாட்டின் ராணுவப்படை தளபதி காசேம் சுலைமானி கொல்லப்பட்டுள்ளார். இரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையான போர் தொடங்கியது.

இரான்  தாக்குதல்
இரான் தாக்குதல்
AP

இராக்கில் உள்ள இரான் ஆதரவுப் படை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதைக் கண்டிக்கும் வகையில் இரான் ராணுவப்படையும் இராக் படையும் இணைந்து இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டுச் சூறையாடினர். இதனால் அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க வீரர்களைப் பாதுகாக்கவே இன்று தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. அதிலும் அதிபர் ட்ரம்ப் கூறியே காசேம் கொல்லப்பட்டதாக, அமெரிக்காவின் பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ராணுவத் தளபதி மற்றும் இராக்கின் ஹஷித் அல்-ஷாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு அஹ்தி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

`ட்ரம்ப் சொன்னபடியே செய்தோம்!’- இரானின் முக்கியத்  தலைவரைக் கொன்ற அமெரிக்கா

இரான் ராணுவ தளபதி கொலை செய்யப்பட்டுள்ள விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இரான் நாட்டின் மூத்த தலைவர் அலி கமேனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

``காசேம் சுலைமானிக்கு மரியாதை செலுத்தும்விதமாக இரானில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அனைத்து இடங்களிலும் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும். இத்தனை ஆண்டுகளாக தன் இடைவிடாத உழைப்பைக் கொடுத்து நாட்டுக்காக தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார் காசேம்.

காசேம் சுலைமானி
காசேம் சுலைமானி
AP

கடவுளின் விருப்பத்தினால் இன்று அவர் அழைக்கப்பட்டிருந்தாலும் அவருடைய குறிக்கோள் மீதான பணிகள் எந்தக் காரணத்துக்காகவும் நிறுத்தப்படாது. காசேம் கொலைக்கு நம் பரம எதிரி அமெரிக்காவே முழுப் பொறுப்பு . அவரது கொலைக்குக் காரணமானவர்களுக்கு நிச்சயம் தக்க பதிலடி காத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு