Published:Updated:

`தண்ணீர் வேண்டுமா? எங்களுடன் பாலியல் உறவு கொள்ளுங்கள்!’ - லிபியா நாட்டின் சோகம்

லிபியா
லிபியா

சிரியா, இராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா, தெற்கு சூடான் போன்ற போரால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய முயன்றுவருகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளைப் பொறுத்தவரை மக்கள் ஐரோப்பாவை நோக்கிச் செல்வதற்கு அங்கு நிலவும் வறுமை காரணமாக உள்ளது.

லிபியாவின் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள குடியேறிகள் அங்குள்ள பாதுகாப்புப் படை அதிகாரிகளால் கொடூரமான பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என அம்னெஸ்டி மனித உரிமை அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இதில் கொடூரத்தின் உச்சகட்டமாக சுத்தமான குடிநீர், உணவு, கழிவறை வசதியைப் பெற வேண்டுமென்றால் பாதுகாப்புப் படையினருடன் உறவுகொள்ள வேண்டும் என்ற துயரநிலையில் குடியேறிகள் இருப்பதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் குழந்தைகளும்கூட பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுவதாக குடியேறிகள் சிலரிடம் பேசியதன் மூலம் அம்னெஸ்டி கண்டறிந்துள்ளது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
விகடன்

மேலும் அம்னெஸ்டியிடம் பேசிய கர்ப்பிணிகள் சிலர் பாதுகாப்புப் படையினரால் தாங்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். லிபிய தடுப்பு முகாம்களிலுள்ள நைஜீரியா, சோமாலியா, சிரியாவைச் சேர்ந்த 14 – 50 வயதுக்கு உட்பட்ட பெண்களிடம் அம்னெஸ்டி பேசியிருக்கிறது.

இந்தக் கொடூரங்களுக்கான சாட்சியங்களும் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

யார் இந்தக் குடியேறிகள்?

2015-ம் ஆண்டு... கடற்கரை ஓரம் இறந்தநிலையில் சிவப்பு நிறச் சட்டையில் அழகிய பிஞ்சுக் குழந்தையின் உடல், கரை ஒதுங்கிய அந்தப் புகைப்படம் உலகையே உலுக்கியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்தக் குழந்தைக்கும், லிபிய தடுப்பு மையங்களில் சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. தங்கள் நாடுகளில் வாழும் சூழல் இல்லாத காரணத்தால், வாழ்வில் ஏதேனும் ஒரு பிடிப்பு தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்றவர்கள் இவர்கள் என்பதுதான் அந்த ஒற்றுமை.

குழந்தை
குழந்தை

அந்த ஒரே ஒரு படம் குடியேறிகளின் துயரம் குறித்து உலகுக்கு பறைசாற்றியது. ஆனால் அதன் பிறகும் பெண்கள், குழந்தைகள் என மத்திய தரைக்கடலில் பலர் உயிரிழக்கும் செய்தி வந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு சிறிய படகில் எந்தவிதப் பாதுகாப்பும் இன்றி ஐரோப்பாவை அடைய மத்திய தரைக்கடலின் ஊடாக ஆபத்தான பயணம் மேற்கொண்டு ஐரோப்பாவை அடைய முயலும்ம் குடியேறிகளைத் தடுக்கும் கடுமையான முயற்சியில் இறங்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், லிபியாவுடன் கைகோத்து, லிபியாவின் கடற்படையினருக்குப் பயிற்சி அளித்து, அதற்குப் பணம் மற்றும் ஆயுதங்களை வழங்கியும்வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் லிபிய கடற்படையினர், மத்திய தரைக்கடலில் பயணித்து ஐரோப்பாவுக்குள் நுழைய முயல்பவர்களை தடுத்து நிறுத்தி லிபியாவின் மோசமான தடுப்பு மையங்களுக்கு திருப்பி அனுப்புகின்றனர். பல நேரங்களில் இந்த மாதிரியாக மத்திய தரைக்கடலில் வரும் படகுகளைச் சுட்டு வீழ்த்தும் முயற்சியிலும் இந்தக் கடற்படையினர் ஈடுபடுகின்றனர். அம்னெஸ்டியிடம் பேசிய, தப்பிப் பிழைத்த குடியேறி ஒருவர், `லிபிய கடற்படையினர் வேண்டுமென்றே தங்களின் படகுகளை சேதப்படுத்தியதாகவும், குடியேறிகள் நீரில் மூழ்கக் காரணமாக இருந்ததாகவும்’ தெரிவித்துள்ளார். மற்றொரு பாதிக்கப்பட்டவர் கூறுகையில், `லிபிய கடற்படையினர் படகுகளை மூழ்கடித்துவிட்டு, மக்களைக் காப்பாற்றுவதற்கு பதிலாக அதைப் படம் பிடித்துக்கொண்டிருந்தனர்’ என்று தெரிவித்துள்ளார்.

குடியேறிகள்
குடியேறிகள்
Bruno Thevenin

இதுபோல் படகில் மத்திய தரைக்கடலைக் கடக்கும் முயற்சியில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான குடியேறிகள் உயிரிழந்துவருகின்றனர். இந்த வருடத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்டவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் உயிரிழந்துள்ளனர்.

லிபியாவின் தடுப்பு மையங்களில் கொடூரமான சூழல் நிலவுவது ஆவணப்படுத்தப்பட்டும், ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து லிபிய கடற்படையினருக்கு ஆதரவு அளித்துவருவதையும் அம்னெஸ்டி கண்டித்துள்ளது. மேலும் லிபியாவுடன் இணைந்து குடியேறிகளைத் தடுக்க ஐரோப்பிய நாடுகள் மேற்கொள்ளும் இம்மாதிரியான நடவடிக்கைகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

`அகதி நாட்கள்... மனிதன் உண்மையில் பயப்படுவது இன்னொரு மனிதனுக்குத்தான்!'- எழுத்தாளர் அ.முத்துலிங்கம்

வாழ்க்கையைத் தேடி...

ஏழ்மையான ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பஞ்சம் பிழைக்க ஐரோப்பாவுக்குச் செல்ல நினைப்பவர்களுக்கு லிபியா ஒருவழித் தடமாக உள்ளது. 2011-ம் ஆண்டு கடாஃபியின் வீழ்ச்சிக்குப் பிறகு போரால் சிதைந்து கிடக்கும் லிபியாவில் பத்துக்கும் மேற்பட்ட தடுப்பு மையங்கள் உள்ளன. அங்குள்ள மக்களுக்கே எந்தப் பாதுகாப்பும் இல்லாத சூழலில்தான் இந்தத் தடுப்பு மையங்களும் அங்கு செயல்படுகின்றன.

லிபியாவின் ஊடாக ஐரோப்பாவுக்குள் செல்லும் ஒரு முயற்சி ஒரு வாழ்வா, சாவா போராட்டம். அந்தப் போராட்டத்தில் தோல்வியுற்று இந்தத் தடுப்பு மையங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் அங்கு அவர்கள் அடி, உதை, பாலியல் கொடுமை, துஷ்பிரயோகம் போன்ற சித்ரவதைகளுக்கு ஆளாக வேண்டும்.

லிபியா
லிபியா
Kai von Kotze

ஐரோப்பியக் குடியேறிகள் பிரச்னை..

இந்த ஐரோப்பியக் குடியேறிகள் பிரச்னை என்பது 2015-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரமானது. அதாவது, மத்திய தரைக்கடலின் கிழக்கு, மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளின் ஊடாக ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பாவுக்குள் நுழைய முயல்வதுதான் இந்த ஐரோப்பியப் குடியேறிகள் பிரச்னை.

இப்படி ஐரோப்பாவுக்குள் நுழைய இரு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று போர்; இரண்டாவது, அவர்களின் நாடுகளில் உணவுப் பற்றாக்குறை, வேலையின்மை, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் அற்று, வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைவது.

சிரியா, இராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா, தெற்கு சூடான் போன்ற போரால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய முயன்றுவருகின்றனர். ஆப்பொரிக்க நாடுகளைப் பொறுத்தவரை மக்கள் ஐரோப்பாவை நோக்கிச் செல்வதற்கு அவர்களின் நாட்டில் நிலவும் வறுமை காரணமாக உள்ளது.

- திலகவதி

அடுத்த கட்டுரைக்கு